வள்ளலார் காலத்தில் 12 பஞ்சங்கள்!

கவிஞர் கரிகாலன்

தைப் பூசம் குறித்த ஒரு விவாதம்:

அய்யர் பவனில் காஃபி குடித்துவிட்டு வெளியே வந்தேன். கூட்டம் கூட்டமாக மெய்யன்பர்கள் வடலூர் நோக்கிச் செல்கிறார்கள். இன்றுதான் வள்ளல் பெருமகன் சோதியில் கலந்தார். சோதியானார். இந்நாளை தைப் பூசமாக கொண்டாடுகிறார்கள்.

வள்ளலார் காலத்தில் 12 பஞ்சங்கள். 

‘பசியென்னும் புலியை அடக்குதலே ஜீவகாருண்யம்’ என சிந்தித்தார் வள்ளலார். பசியை நெருப்பாக, விஷக் காற்றாகப் பார்த்தவர். பசிப்பிணி போக்க வடலூரில் அறச்சாலை நிறுவினார்.

சமயத் துறவிகள் மடங்கள் கட்டிய காலம். மடங்கள் என்றால் பெண்கள் வர முடியாது! என்றெண்ணி, சத்தியஞான தர்ம சபையை நிறுவினார் வள்ளலார்.

மனிதர்களுக்குள்ளேயே சாதி மத பிரிவினைகள்.

வள்ளலாரோ ‘ஆருயிர்க்கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்’ என வேண்டினார். ‘ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமையுளாகி உலகியம் நடத்தல் வேண்டும்’ என சமத்துவம் பேணினார்.

வள்ளலாரின் ஆன்மீக ஈடுபாடு முருகனிடம் இருந்தே தோன்றியது. சிறுவனாக இருக்கும்போது, ‘ஏது மறியாதிருளில் இருந்து சிறியேனை எடுத்து விடுத்து’ முருகனிடம் ஞானம் வேண்டியவர்.

இத்தகு வழக்குடைய தைப் பூசத்தில் ஹெச். ராஜா கந்த சஷ்டிக் கவசம் பாடச் சொல்கிறார். கேட்கச் சொல்கிறார். சரி கேட்போமே.

யுடியூபில் தேடினேன். ஏதோ இருட்டுக்கடை அல்வா போல, ஒரிஜினல் கந்த சஷ்டிக் கவசம் என்றெல்லாம் வருகிது.

எது ஒரிஜினல்? சற்றே குழப்பம். சூலமங்கம் சகோதரிகளை பெரும்பாலும் கேட்பார்கள். என்னுடைய தேர்வு மகாநதி ஷோபனா. 

‘அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க,
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க,
விழி செவி இரண்டும் வேலவர் காக்க,
நாசிகளி ரண்டும் நல்வேல் காக்க,
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க,
முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க’

இந்த வரிகளைக் கேட்பது மனதுக்குத் தெம்பாக இருந்தது.

கந்த சஷ்டிக் கவசத்தை தேவராய சுவாமிகள் இயற்றினார். இவர் அறுபடை வீடுகளுக்கும் இயற்றினாலும் திருச்செந்தூர் சஷ்டி கவசமே  மக்களிடம் செல்வாக்கு பெற்றது.

நாம் கேட்பதும் அஃதே!

இந்தப் பாடலின் சிறப்பம்சாக நான் கருதுவது இதன் இருமொழித் (bilingual) தன்மை. ஆண் பெண் இருபாலரும் பாடும்படி அமைந்திருப்பதன்.

உதாரணமாக ‘ஆண்பெண் குறிகளை அயில்வேல் காக்க’ எனப் பாடுகிறார்  தேவராயர்.

சூலமங்கலம் சகோதரிகள் பழங்காலத்துப் பாடகிகள்.

இன்று பெண் பாடகிகள் ‘திண்டுக்கல்லு திண்டுக்கல்லு’ என்றெல்லாம் பாடத் தயங்குவதில்லை. ஆனால் சூலமங்கலம் சகோதரிகளுக்கோ வெட்கம். மூலப்பாடலை மாற்றிவிட்டார்கள். ‘ஆண்குறி இரண்டும் அயில்வேல் காக்க’ என்று பாடுகிறார்கள். என்னே பெருந்தன்மை!

‘இருதொடை யழகும் இணைமுழந் தாளும்

திருவடி யதனில் சிலம்பொலி முழங்க

செககண செககண செககண செகண’

– ஷோபனா பாடும்போது அஞ்சலை ஞாபகம்.

அபச்சாரம்.. அபச்சாரம்.. மனசுக்குள் என்னை நானே சபித்துக் கொண்டேன். பாட்டுக் கேட்டபடி பாத்ரூம் போனேன்.

ஏன் இந்த க.ச கவசத்தை ஆண்கள் பாடுவதில்லை. குறை இருந்து கொண்டே இருந்தது. போக்க வேண்டாமா?

‘வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க

பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க

அழகுடன் முதுகை அருள்வேல் காக்க

பழுபதி னாறும் பருவேல் காக்க’

பாத்ரூமில் பாடியபடி சுடுதண்ணியை மேனியில் ஊற்றிக் கொண்டேன்.

ஆபேரி, கல்யாணி, சுபபந்துவராளி, சிந்து பைரவி.. ராகமாலிகையால் உடலும் மனசும் புத்துணர்வு பெற்றது. அதே உற்சாகத்தோடு வெளியே வந்தேன். வள்ளலார் ஆரத் தழுவி அருட்பெருஞ்ஜோதி அகவல் பாடுகிறார்.

‘மெய் எலாம் குளிந்திட மென் மார்பு அசைந்திடக், கை எலாம் குவிந்திடக் கால் எலாம் சுலவிட, மனம் கனிந்து உருகிட மதி நிறைந்து ஒளிர்ந்திட,

அறிவு உரு அனைத்தும் ஆனந்தம் ஆயிடப்,

பொறி யுறும் ஆனம தற்போதமும் போயிடத்,

துன்புள அனைத்தும் தொலைத்து எனது உருவை

இன்புரு வாக்கிய என்னுடை அன்பே

பொன்னுடம்பு எனக்குப் பொருந்திடும் பொருட்டாய்

என்னுளங் கலந்த என்தனி அன்பே!

கேட்க கேட்க அருள் பரவுகிறது. ஊன் உடம்பு ஒளி உடம்பாகிறது.
மீண்டும்.. மீண்டும், ஹெச். ராஜா கோஷ்டிக்கு சொல்ல விரும்புவது இதுதான்.

எங்கள் முருகன் பார்வதி பெற்ற பிள்ளை இல்லை. அவன் அவ்வையும் வள்ளலாரும் கிருபானந்த வாரியாரும் வளர்த்த பிள்ளை.

நாங்கள் தைப் பூசத்துக்கு வள்ளலார் வழிநின்று முருகனை வணங்குவோம்.

ஆடு, கோழி, பன்றி அறுத்து வீரனுக்கு முப்பூசையும் வைப்போம். ஆடியில் மாரியாத்தாவுக்கு கூழ் ஊற்றுவோம்.

ஒவ்வொரு பருவத்துக்கும்

ஒவ்வொரு நிலத்துக்கும்

ஒவ்வொரு வழிபாடுடைய

பன்மைச் சமூகம் தமிழர் வெளி.

இறைவனுக்கு பிள்ளைக் கறி

சமைத்த வீரத் தமிழ்க்கூட்டம்.

பிள்ளாய் ஓரம்போய் விளையாடு.

 

நன்றி: முகநூல் பதிவில் இருந்து…

You might also like