டெல்லியில் பாஜக வெற்றிக்கு உதவிய காங்கிரஸ்!

இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் காங்கிரஸ் கட்சி, மத்தியிலும் பெரும்பாலான மாநிலங்களிலும் பல ஆண்டுகளாக ஆட்சி அமைத்து தனி ஆவர்த்தனம் செய்தது.

கேரள மாநிலத்தில், முதன் முறையாக கம்யூனிஸ்டுகளிடம் ஆட்சியைப் பறிகொடுத்த காங்கிரஸ், அதன் பிறகு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், பிராந்திய கட்சிகளிடம் ஆட்சியை இழந்தது.

மத்தியில் முதல் தடவையாக, 1977-ம் ஆண்டு, ஜனதாக் கட்சி காங்கிரசை வீழ்த்தியது. அப்போது, ஜனசங்கமாக இருந்தது பாஜக. 1980-ம் ஆண்டு, ஜனதா ஆட்சி கவிழ்ந்ததும், அந்த கட்சியில் இருந்து ஜனசங்கம் விலகியது. பாஜக என்ற பெயரில் உருமாற்றம் செய்து கொண்டது.

தற்போது தேசிய அளவில் காங்கிரஸை மிஞ்சும் கட்சியாக வளர்ந்து நிற்கிறது பாஜக. இதனால், பாஜகவின் எதிர்க்கட்சியாக தன்னை முன்னிறுத்துவதே காங்கிரஸுக்கு பெரும் சவாலாகி உள்ளது.

டெல்லியில் உதயமான ஆம் ஆத்மி, சில மாதங்களிலேயே, அந்த மாநிலத்தில் ஆட்சியைக் பிடித்தது. ஆம் ஆத்மியால், பஞ்சாபில் ஆட்சியை இழந்தது காங்கிரஸ். கோவா, குஜராத், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களிலும் ஆம் ஆத்மியால் காங்கிரசுக்கு தோல்விகள் ஏற்பட்டன.

இப்போது, ஆம் ஆத்மியால், காங்கிரசுக்கு டெல்லியில் ஒரு தொகுதியிலும் வெற்றிபெறாத பரிதாப நிலை.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 48 இடங்களைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. 27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் பாஜக ஆட்சிக் கட்டிலில் அமர்கிறது. இந்த வெற்றிக்கு, காங்கிரஸ் கட்சிப் பிரதான காரணி என்பது வியப்பூட்டும் உண்மை.

3-வது முறையாக இந்தத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதியிலும் வெற்றி கிடைக்கவில்லை. அந்தக் கட்சி 67 தொகுதிகளில் காப்புத் தொகையை இழந்துள்ளது. எனினும் இந்தத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி 6.34 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. கடந்தத் தேர்தலில் பெற்றதைவிட 2 சதவிகிதம் அதிகம்.

பாஜக 45.56 சதவீதம், ஆம் ஆத்மி 43.57 சதவீத வாக்குகளைப் பெற்றன. இவற்றுக்கிடையேயான வித்தியாசம் வெறும் 1.99 சதவீதம் மட்டுமே. இதன்மூலம், பத்துக்கும் மேற்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ், ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிக்குத் தடையாக இருந்தது வெளிப்படையாகவே தெரிகிறது.

புதிய முதலமைச்சர் யார்?

டெல்லியில் முதலமைச்சர் பதவிக்கு பர்வேஷ் சர்மா, அஷிஷ் சூட், பவன் சர்மா, விஜேந்தர் குப்தா உள்ளிட்டோர் பெயர்கள் அடிபடுகின்றன. பிரதமர் மோடி, இன்று முதல் 4 நாட்கள் வெளி நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செல்கிறார்.

அவர் திரும்பி வந்த பிறகே, டெல்லி முதலமைச்சர் யார்? என்பது தெரியும்.

– பாப்பாங்குளம் பாரதி

You might also like