தனக்கென தனி ட்ரேட்மார்க் செட் செய்த சி.கே.சரஸ்வதி!

அருமை நிழல்:

தமிழ் சினிமாவில் காலகட்டத்திற்கு ஏற்றவாறு அட்வான்ஸ்ட் வில்லிகளாக பலர் வலம் வந்தாலும், அவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக கிட்டத்தட்ட 40 ஆண்டுகாலம் தீய எண்ணம் கொண்ட வில்லத்தனமான கதாபாத்திரங்களிலேயே நடித்து அக்கால ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி ட்ரேட்மார்க் செட் செய்தவர் நடிகை சி.கே. சரஸ்வதி.

விழிகளை உருட்டி மிரட்டும் பார்வையால் வில்லத்தனமான சிரிப்பை முகத்தில் காட்டி கோபத்தையும், கொடூரத்தையும் கொந்தளிக்கும் முகபாவனைகள் என தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி பார்வையாளர்களை வெறுப்படைய வைக்கும் அளவுக்கு தத்ரூபமாக நடித்து பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தவர் சி.கே. சரஸ்வதி.

உயரம் குறைவான பருமன் கொண்ட உருவ தோற்றம், கணீர் குரல் வளம், வெடுக்கு பேச்சு, ஏற்றம் இறக்கத்துடன் கூடிய சுட்டெரிக்கும் வசனங்கள் என எதிராளிகளை அப்படியே அடக்கி விடும் ஆளுமையான ஒரு நடிகை.

சி.கே. சரஸ்வதி குணச்சித்திர கதாபாத்திரங்கள் மற்றும் அம்மாவாக பல படங்களில் நடித்திருந்தாலும் கொடுமைக்கார மாமியாராக அவர் நடித்த படங்களே ஏராளம். பெண் ரசிகைகளின் வெறுப்பை சம்பாதித்து வசவு வார்த்தைகளை, திட்டுகளை அளவில்லாமல் சேர்த்தது அவரின் நடிப்புக்கு கிடைத்த அங்கீகாரம். இன்று நினைக்கையில் கூட ‘பாகப்பிரிவினை’ அகிலாண்டம், ‘தில்லானா மோகனாம்பாள்’ வடிவு, ‘வாணி ராணி’ நாகவேணியாக பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் திரையில் வந்து கதிகலங்க செய்தவர்.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, நான் சொல்லும் ரகசியம், நல்ல இடத்து சம்பந்தம், பாக்கியலட்சுமி, பூலோக ரம்பை, மங்கள வாத்தியம், நவரத்தினம், பார்த்தால் பசி தீரும், லட்சுமி கல்யாணம், பாத காணிக்கை, மகாகவி காளிதாஸ், படித்தால் போதுமா, இரு கோடுகள், நவராத்திரி என எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், டி.எம்.எஸ், எஸ்.எஸ். சந்திரன், ஜெய்சங்கர், ஜெமினி கணேசன் என மிகப்பெரிய நடிப்பு ஜாம்பவான்களின் படங்களில் நடித்து அமர்களப்படுத்தினார்.

சி.கே.சரஸ்வதி அவர்கள் தன் குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படம்.

–  லாவண்யா யுவராஜ்

  • நன்றி : ஏபிபி இதழ்

#C_K_Saraswathi #சி_கே_சரஸ்வதி #தில்லானா_மோகனாம்பாள் #எம்ஜிஆர் #சிவாஜி_கணேசன் #டி_எம்_எஸ் #எஸ்_எஸ்_சந்திரன் #ஜெய்சங்கர் #ஜெமினி_கணேசன் #thilana_mohanambal #mgr #sivajji #tms #s_s_chandren #jai_shankar #gemini_ganeshan

You might also like