‘கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது’ என்பார்கள். தோற்றத்திற்கும் அதன் செயல்பாட்டுக்கும் சம்பந்தம் இல்லை என்பதே இதன் பொருள். கடுகு – அளவில் சிறியதாக இருந்தாலும், தேவையான அளவு காரத்தைத் தன்னுள் பொதித்து வைத்திருக்கிறது என்பதால்தான் இதுபோன்ற பழமொழிகள் தமிழில் தோன்றியுள்ளன.
அதுபோலத்தான் சிலரின் திறமையும். வயதிலும் தோற்றத்திலும் சிறியதாக இருந்தாலும் அவர்களது வீரியமும் அதை வெளிப்படுத்தும் விதமும் பிரம்மிக்க வைக்கும் விதமாக இருக்கும். இதற்கு உதாரணமாகத் திகழ்ந்துள்ளார் திரு. விஜயகிருஷ்ணா – திருமதி சரஸ்வதி அவர்களின் மகள் ஸ்ருதி விஜய்.
நாட்டியத்தில் மிகப்பிரம்மாண்டமான திறமையை வெளிப்படுத்தி, அனைவரையும் ஆச்சரியத்தில் புருவம் உயர வைத்திருக்கிறார் இந்த இளம் மாணவி.
09.02.2025 அன்று மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவன் மண்டபத்தில், குரு ஸ்ரீமதி சாரதா சேதுராமனின் தலைமையில் சபையோர் முன்னிலையில் பக்தியோடு அரங்கேற்றப்பட்டது அவரது நடன நிகழ்ச்சி.
இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக வந்து சிறப்பித்தவர்கள் மிகப்பெருமைக்குரியவர்கள் என்பது கூடுதல் சிறப்பு.
பரதநாட்டிய நிபுணர், நடன விமர்சகர், சமஸ்கிருத நாடக நடிகை மற்றும் இயக்குநர், கல்வியாளர் எனப் பன்முகத்திறமையாளரும், ’சங்கீத நாடக அகாடமி’ விருது, பிரம்ம கான சபாவின் ’நாட்டிய பத்ம’ விருது போன்ற பலவேறு விருதுகளைப் பெற்றவரும், டெல்லியில் உள்ள சங்கீத நாடக அகாடமியின் செயற்குழு உறுப்பினருமான முனைவர். நந்தினி ரமணி அவர்களும், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தின், திரைப்படம் மற்றும் நாடக ஆய்வுகள் பள்ளியின் துறைத் தலைவருமான பேராசிரியர், முனைவர் கார்த்திகேயன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தனர்.
மாணவி ஸ்ருதி விஜய், கடவுள் நமஸ்காரத்தோடு, குரு ஆசிர்வாதம் பெற்று நடனத்தைத் துவக்கினார்.
இந்த நடனத்திற்கு நேரடியான நட்டுவாங்கம், இசை, மிருதங்கம், வயலின், புல்லாங்குழல் அருமையாக வாசிக்கப்பட்டது.
சிறு வயதிலிருந்தே நடனத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஸ்ருதி விஜய், கடின உழைப்பிற்குப் பின் நேர்த்தியாகவும், நிருத்த, நிருத்திய, நாட்டிய அமைப்புகளை முழுமையாக உள்வாங்கி, நான்கு வகை அபிநயங்களையும் சிறப்பாக வெளிப்படுத்தி சபையோர் முன்னிலையில் பணிவோடும், தைரியமாகவும், மெல்லிய அழகிய சிரிப்புடன் நடனத்தை நிகழ்த்திக் காட்டினார்.
குறிப்பாக கிருஷ்ணரின் நடனக் காட்சியை அபிநயம் மூலம் வெளிப்படுத்திய விதம் அனைத்து பார்வையாளர்களையும் மெய்சிலிர்க்க வைத்தது. நடனத்தைக் கண்டு மெய் சிலிர்த்துப் போனதாக, உணர்வுப்பூர்வமாகவும் உளப்பூர்வமாகவும் பாராட்டினார் சிறப்பு விருந்தினர் கார்த்திகேயன்.
அதனைத் தொடர்ந்து சிறப்பு விருத்தினர்கள், டாக்டர். நந்தினி ரமணி மற்றும் கார்த்திகேயன் அவர்கள் மாணவி ஸ்ருதி விஜய் அவர்களின் குடும்பத்தினர்கள், குரு ஸ்ரீமதி சாரதா சேதுராமன் அவர்களைப் பற்றியும் வாழ்த்துரை நிகழ்த்தினார்கள்.
டாக்டர். நந்தினி ரமணி அவர்கள், தனது அன்பை வெளிப்படுத்தும் முகமாக, குரு ஸ்ரீமதி சாரதா சேதுராமன் அவர்களுக்கும், அவரது மாணவி ஸ்ருதி விஜய்க்கும் நினைவுப் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.
அந்த அற்புதமான தருணத்தில், நடனத்திற்காக தன்னையே முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட டாக்டர் பத்மா சுப்ரமணியம் அவர்களின் சிறப்பைப் பற்றிப் பேசினார் அவரது மாணவியான சாரதா சேதுராமன்.
தொடர்ந்து சமஸ்கிருதம் மற்றும் தமிழ் கலந்த எளிய நடையில், சிறிய நன்றிவுரையையும் அவர் நிகழ்த்தினார்.
சிறப்பு விருத்தினர்களுக்கு பெற்றோர்களின் முன்னிலையில் நினைவுப் பரிசும் வழங்கப்பட்டன.
இந்த நடனத்தைக் கண்டு மகிழ, ஸ்ருதி விஜய் அவர்களின் உறவினர்கள் மற்றும் சகப் பள்ளி மாணவர்கள், குரு ஸ்ரீமதி சாரதா சேதுராமன் அவர்களுடைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் வந்திருந்தனர். நிகழ்ச்சியின் நிறைவில், தங்களுடைய வாழ்த்துகளையும் சந்தோசத்தையும் வெளிப்படுத்தினர்.
எத்தனைக் காலமானாலும் நினைவிலிருந்து நீங்காத நாட்டிய நிகழ்வாக இந்த நாட்டிய அரங்கேற்றம் நிகழ்ந்தது எல்லோருக்கும் பெருமகிழ்ச்சி.
– தனுஷா