அந்தக் காலத்துத் தேர்தல் எப்படி இருந்தது?

குமாரசாமி ராஜாவின் அனுபவங்கள்

தேர்தல் நடக்கும்போது ஓட்டுக்குப் பணம் கொடுப்பது, வாக்காளர்களை சரிக்கட்டுவது பற்றிய பேச்சுகளை எல்லாம் பல காலமாகக் கேட்டு வருகிறோம்.

சென்னை மாநிலத்தின் முதல் முதலமைச்சராகப் பதவி வகித்தவர் குமாரசாமி ராஜா. அவர் தன் இளமை நினைவுகளை புத்தகமாக எழுதி இருக்கிறார். அந்த நூலில் அவர் பார்த்த முதல் தேர்தல் ஒன்றைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.

அது அனேகமாக 1920-க்கு முன்னால் ஏதோ ஒரு ஆண்டாக இருக்கலாம். ஏனெனில் அந்தப் புத்தகத்தை முடிக்கையில் 1920-ம் ஆண்டோடு என் இளமைப் பருவம் முடிந்தது என்று கொள்ள வேண்டும் என்று சொல்லி முடித்திருக்கிறார்.

அந்தத் தேர்தலைப் பற்றி அவர் சொல்கிறார்:

“என் வாழ்க்கையில் முதல் முதலில் நான் தேர்தல் ஆர்ப்பாட்டங்களைப் பார்த்தது ஶ்ரீவில்லிபுத்தூரில்தான். ஆனால் இக்காலத்துத் தேர்தல் பிரசாரங்களுக்கும், தடபுடல்களுக்கும் அது எவ்விதத்திலும் ஈடாகுமா?

எனினும் அக்காலத்துத் தேர்தல் நிகழ்ச்சிகளில் ஶ்ரீவில்லிபுத்தூரில் நடந்தவை பிரமாதமாக இருந்தனவென்றே சொல்லலாம். அவைகளில் முனிசிபல் வார்டு எலெக்‌ஷன்தான் முக்கியமானது.

அப்போது எவ்வளவு தேடிப்பார்த்தாலும் ஒரு வார்டில் நூறு வாக்காளர்களுக்கு மேல் இருக்க மாட்டார்கள். ஆனாலும் எலெக்‌ஷன் என்றால் ஊரில் எங்கும் ஒரே பரபரப்பாகத்தான் இருக்கும்.

அப்போது முனிசிபல் ஆஃபிஸ் ஶ்ரீ ஆண்டாள் சன்னிதித் தெருவில் இருந்தது. அது ஒரு மண்டபம். போட்டி போடும் வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் முனிசிபல் ஆபிசுக்குப் பக்கத்தில் இருக்கும் மற்ற மண்டபங்கள் ஒவ்வொன்றிலும் தங்கள் இருப்பிடத்தை ஏற்படுத்திக் கொள்வார்கள்.

ஓட்டுப் போடுகிறவர்களை வேட்பாளர்கள் தங்கள் தங்கள் ஆட்களை அனுப்பியோ, வண்டிகளிலிலேயோ கூட்டிக் கொண்டு வருவார்கள். முதலில் அவரவர்கள் இடத்துக்குத்தான் கூட்டிக்கொண்டு வருவார்கள்.

அங்கே ஒரு கூடையில் புளியோதரை, மற்றொரு கூடையில் தோசை, இன்னும் பிரசாத வகைகளையும் வைத்திருப்பார்கள்.

கலியாண அழைப்புக்காக வந்தவர்களுக்கு வெற்றிலை பாக்கு தாம்பூலம் கொடுத்து மரியாதை செய்யும் வழக்கம் இருக்கிறதல்லவா? அதே போல ஓட்டுப்போட வந்தவர்களுக்கும் ஏதாவது மரியாதை செய்யாமல் அனுப்புவது நன்றாக இராது என்று எண்ணித்தான் பிரசாத வகையறாக்களைக் கொடுத்து உபசாரம் செய்வது.

வந்தவர்கள் முதலில் புளியோதரை தோசைகளைச் சாப்பிட்டு விட்டுத்தான் பிறகு ஓட்டுப் போடப் போவார்கள்.

புளியோதரை பொங்கல் தோசை இவைகளைச் சாப்பிட்ட பிறகுதான் ஓட்டுப் போட வேண்டுமென்று தேர்தல் விதி ஒன்றும் கிடையாது! ஆனால் நடைமுறையில் அப்படித்தான்.

இதைத் தெரிந்து கொள்ளாமல் யாராவது நேராகப் போய் ஓட்டுப் போட்டு விட்டால், அப்புறம் புளியோதரை தோசை ஒன்றையும் அவர் காண முடியாது!

ஓட்டுப்போட்ட பிறகு அவரை என்ன, ஏது என்று கேட்பார்தான் யார்? திக்கற்ற அனாதை போல வீடு திரும்ப வேண்டியதுதானே! “

இதைப் படித்ததும் என்ன தோன்றுகிறது. எல்லாம் மாறி இருக்கிறதா? இல்லை எதுவுமே மாறவில்லையா?

  • நன்றி: எழுத்தாளர் பாஸ்கர் சக்தி
You might also like