நூல் அறிமுகம்: இயற்கையை அறிதல்!
எறும்புகளின் வாழ்க்கைப் பழக்கங்கள் எறும்புகளை மட்டும் கணக்கிலெடுத்துக்கொண்டு பார்க்கும்போது எவ்வகையிலும் முக்கியமல்ல.
ஆனால், அதிலிருந்து தொடர்பின் கதிர் ஒன்று வந்து மனிதனை தீண்டும்போது அந்தச் சின்னஞ்சிறு உயிர் ஒரு குறியீடாக, ஒரு அளவீடாக மாறிவிடுகிறது.
அதன் சின்னஞ்சிறு உலகம், அதன் உழைப்பு முதலியவை உன்னதமாக கணிக்கப்படுகின்றன.
அது தூங்குவதேயில்லை என்ற சமீபத்திய கண்டுபிடிப்பு வியப்யையும் ஆர்வத்தையும் மட்டுமல்ல, மிக உயர்ந்த ஒரு மன எழுச்சியையே நம்மில் உருவாக்குகிறது. காட்சி வடிவங்களுக்கும் மனித சிந்தனைக்கும் இடையேயான இந்த உறவின் காரணமாகவே பழங்குடிகள் உருவங்கள் மூலம் உரையாடுகிறார்கள்.
வரலாற்றில் நாம் பின்னோக்கி நகரும்தோறும் மொழி மேன்மேலும் சித்திரத்தன்மை கொண்டதாக ஆகிறது.
அதன் குழந்தைப்பருவத்தில் அது முழுக்க கவிதைதான். அதாவது எல்லா ஆன்மிக விஷயங்களும் அன்று நேரடியாக இயற்கைக் குறியீடுகள் மூலம் பகிரப்பட்டன. அக்குறியீடுகள்தாம் எல்லா மொழிகளிலும் ஆதாரக்கூறுகளாக இன்றும் காணப்படுகின்றன.
எல்லா மொழிகளிலும் வழக்காறுகளும் சொலவடைகளும் மிகுந்த நாவன்மையுடன் பிணைக்கப்படும்போதுதான் உச்சகட்ட வெளிப்பாடு சாத்தியமாகிறது என்பதும் கவனிக்கப்பட்டுள்ளது.
அதாவது இயற்கைக் குறியீடுகளே முதல் அடிப்படை, அவையே இறுதியானவையும்கூட.
இயற்கையின் மீதான மொழியின் இந்த வேர்ப் பற்று, வெளியிலுள்ள விஷயங்களை மனித அகத்தின் வெளிப்பாடுகளாக மாற்றிக்கொள்ளும் இந்த இயல்பு, ஒருபோதும் நம் மனதை பாதிக்காமல் போவதில்லை.
இந்த அம்சமே ஒரு கிராமத்து விவசாயியோ பழங்குடி மனிதனோ பேசும்போது எல்லா மனிதர்களையும் கவரக்கூடிய கூர்மையையும் ஆழத்தையும் அப்பேச்சுக்கு அளிக்கிறது.
******
தமிழில்: ஜெயமோகன்
- #இயற்கையை_அறிதல்_நூல் #எமர்சன் #ஜெயமோகன் #iyarkaiyai_arithal_book_review #emerson #jayamohan