சொற்களால் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் ஷேக்ஸ்பியர்!

“இந்த உலகம் ஒரு நாடக மேடை. நாம் அனைவருமே அதில் நடிகர்கள்”

இந்த வசனத்தை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கண்டிப்பாகக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

வில்லியம் ஷேக்ஸ்பியரின் ‘வெனிஸ் நகரத்து வணிகன்’ (Merchant of Venice) நாடகத்தில் வரும் வசனம் இது.

‘மின்னுவதெல்லாம் பொன்னல்ல’ என்பதும்கூட ஷேக்ஸ்பியரின், வெனிஸ் நகரத்து வணிகன் நாடகத்தில் வரும் ஒரு வசனம்தான்.

இத்தாலி நாட்டின் வெனிஸ் நகரத்தைக் கதைக்களமாகக் கொண்ட நாடகம் இந்த ‘மெர்ச்சென்ட் ஆப் வெனிஸ்’ நாடகம்.

காதல், நீதி, வஞ்சகம், பொறாமை, தன்னலம், பழிக்குப்பழி என பலப்பல படலங்கள், மேல் அடுக்குகளால் மூடப்பட்ட நாடகம் இது.

ஆன்டனியோ, பசானியோ, போர்ஷியா என பல்வேறு கதாபாத்திரங்களின் உணர்வுகளை இந்த நாடகத்தில் ஊஞ்சலாட வைத்திருப்பார் ஷேக்ஸ்பியர்.

படைப்பாக்க ஆற்றல், மொழி விளையாட்டு போன்ற ஷேக்ஸ்பியரின் விரல் வித்தையை மெர்ச்சென்ட் ஆப் வெனிஸ் நாடகத்தில், நாம் கண்டு ரசிக்கலாம்.

இந்த நாடகத்தின் கதைநாயகி போர்ஷியா, மிகமிக சூட்டிகையான அறிவாளியான பெண். நாடகத்தின் அனைத்து ஆண் பாத்திரங்களையும்விட போர்ஷியா என்ற பாத்திரத்தை அதிக ஆளுமை கொண்ட பாத்திரமாக, அவ்வளவு அழகாகப் படைத்திருப்பார் ஷேக்ஸ்பியர்.

அதோடு இந்த நாடகத்தில் வரும் மற்றொரு பெண் கதாபாத்திரத்தின் பெயர் ஜெசிக்கா. இந்த ஜெசிக்கா என்ற பெயர் ஷேக்ஸ்பியர் கண்டுபிடித்து உருவாக்கிய பெயர் என்றால் வியப்பாக இருக்கும்.

ஆனால், இது தொடர்பாக வியப்பதற்கு எதுவும் இல்லை. காரணம், ஆங்கில மொழியில் 1,700 புதிய சொற்களை உருவாக்கியவர் ஷேக்ஸ்பியர்.

பெட்ரூம் (படுக்கையறை), பெர்த்பிளேஸ் (பிறப்பிடம்), காசிப் (ஊர்வம்பு), அமேஸ்மெண்ட் (திகைப்பு) போன்ற சொற்கள், ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர் அறிமுகப்படுத்திய சொற்கள்தான்.

அந்தவகையில், அன்றாடம் பயன்படுத்தப்படும் இந்த சொற்கள் மூலம் இன்றும் இறவாமல் நம்மிடையே உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் ஷேக்ஸ்பியர்.

அவரது வெனிஸ் நகரத்து வணிகன் போன்ற நாடகங்களும் உயிர்வாழ்கின்றன.
 
மோகன ரூபன் முகநூல் பதிவு 

You might also like