நூல் அறிமுகம்: மஹா பிடாரி (நூற்று இருபது காதல் கவிதைகள்)
திரையிசைப் பாடலாசிரியர்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் அவர்களின் வரலாற்றை ஆராய்ந்தபோது தான் இணையத்தில் கிடைத்த ஒரு கட்டுரையின் மூலம் கவிஞர், பாடலாசிரியர் யுகபாரதி அவர்களை அறிந்து கொண்டேன்.
பாஸ்கர தாஸ் தொடங்கி திரைப்பட பாடலாசிரியர்கள் 20 பேர் பற்றிய வரலாற்றையும் அவர்களின் பாடல் திறனையும் ‘நேற்றைய காற்று’ என்னும் தலைப்பில் எழுதியுள்ளார் யுகபாரதி.
அதன் பிறகு சென்ற ஆண்டு வெளியான அவரது ’மேல் கணக்கு; பாட்டும் தொகையும்’ என்ற நூலை எங்களுக்கெல்லாம் ஒரு படி வாங்கிக் கொடுத்து வாசிக்க வைத்த எங்கள் முனைவர்பட்ட நெறியாளர் மு.ரமேஷ் அவர்களின் மூலம் யுகபாரதி அவர்களையும் அவரது சங்க இலக்கியம் தொடங்கி நவீன இலக்கியம் வரையிலான தீவிர வாசிப்பைத் தெரிந்து கொண்டேன்.
இந்தாண்டு மிகச் சமீபத்தில் வெளியிடப்பட்ட மகா பிடாரி (நூற்று இருபது காதல் கவிதைகள்) என்ற நூலை, கல்லூரியில் அமர்ந்து ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன்.
இந்நூலை அவ்வளவு ஆவலோடு வாசிக்கத் தூண்டியது, நான் பயிலும் மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற தேசியக் கருத்தரங்கம் தான். அதில் தான் இந்நூலில் உள்ள கவிதைகள் வாசிக்கப்பட்டன. அதோடு, கவிஞர் யுகபாரதி அவர்களும் பாடல் சார்ந்து உரையாற்றினார்.
இனி நூலுக்கு வருவோம்:
‘காதல்’
என்னைத் தமிழில் அழகான சொல் ஒன்றைக் கூறுங்கள் என்றால் நான் உடனடியாக ‘காதல்’ என்ற சொல்லைத் தான் செப்புவேன். சங்க இலக்கியம் காதலையும் வீரத்தையும் பற்றியே அதிகம் பாடப்பட்டுள்ளது.
“ஆதலினால் காதல் செய்வீர்” என்றார் பாரதி.
“கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்” என்கிறார் பாரதிதாசன்.
“காதல் இல்லாத நகரம், அது காற்று இல்லாத நரகம்” என்கிறார் வைரமுத்து.
மேலும் ஓரிடத்தில் “விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவு” என்கிறார்.
காதலால் கவிஞர் ஆனவர்கள் பலருண்டு. கவிதை எழுதி காதலித்தவர்கள் சிலருண்டு. இதில் கவிஞர் எந்த வகையென்று நான் கூறப்போவதில்லை.
இந்நூலில் 120 கவிதைகள் உள்ளன. ஒவ்வொரு கவிதையும் காதலைப் பற்றியது என்றாலும் முழுக்க முழுக்க காதலைப் பற்றியது அல்ல.
ஏனெனில் மேலாட்டமாகப் பார்த்தால் காதல் கவிதையாகத் தெரியும். கொஞ்சம் நுணுகிப் பார்த்தால் அதற்குள் சமூகக் கண்ணோட்டம் இருப்பதை அறியலாம்.
உதாரணமாக :
விசேச நாட்களில் கட்டாயம் காதலி கோவிலுக்கு வந்து விடுவாள். மற்ற நாட்களில் வருவதை அறிய முடியாததால் ஓதுவார் பயிற்சியில் சேர்ந்து ஓதுவாராக ஆகிவிடலாம் என்று யோசிக்கிறான் காதலன்.
ஆனால், அவர்களைப் போல உள்ளே நுழைய விடாமல் செய்துவிட்டால் என்ன செய்வது என்கிறார். இங்கே காதலியின் மனதிற்குள் நுழைய முடியவில்லை என்று காதலன் வேதனைப்படுவது மேலோட்டமான பொருள்.
ஆனால் உட்பொருள் பழங்காலந்தொட்டு நிகழக்கூடிய சமூகச் சிக்கலைப் பேசுகிறது. கோவிலுக்குள் நுழைய முடியாதவர்களின் குரலாக ஒலிக்கிறது. கவிதையின் பொருளை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன்.
மற்றொரு கவிதை
கார்த்திகை மாதம் பலரும் சபரிமலைக்கு மாலை அணிந்து சென்றிருப்பார்கள். அவர்களில் காதலிக்கும் வயதில் இருப்பவர்களும் சென்றிப்பார்கள். அவர்களில் ஒருவன் நாத்திகனாக யோசித்தால் எப்படி இருக்கும் என்பதை இக்கவிதையில் கூறுகிறார்.
“வெள்ளனே விழித்தெழுந்து
தலை முழுகுவதோ
மெத்தை தலையணையின்றி
உறங்குவதோ
அசைவ உணவுகளை
அறவே தவிர்ப்பதோ
மதுவையும் புகையையும் மறுப்பதோ
நாள் தவறாமல் பூஜையும் விரதமும் பூணுவதோ
எனக்குப் பிரச்சினையே இல்லை;
ஒரு மண்டலம்
பெண் பற்றி
நினைவே இருக்கக்கூடாதென்று கூறினார்களே
அப்போதுதான்
மலைக்கு மாலைபோடும்
யோசனையிலிருந்து பின்வாங்கினேன்.
நாற்பத்து எட்டுநாள்
உன் நினைவுகளை மறக்கடித்து
அப்படி என்னதான்
கொடுத்துவிடுவார்
அந்த ஐயப்பன்?”
*
வெட்கத்தினால் கூட காதலியின் தலை குனிந்து விடக்கூடாது என்று காதலன் விரும்புவதாக ஒரு கவிதையில் குறிப்பிடுகிறார்.
பெண் என்றால் தலை குனிந்து நடக்க வேண்டும் என்ற பழைய சங்கிலியை உடைக்கிறார் கவிஞர் யுகபாரதி.
“ஒருமுறை
உன்னைப் பார்த்த
என் அம்மாச்சி
நெற்றி வருடி,
நொறுங்கும் சொடக்குகளுடன் சொன்னது
மகாலட்சுமிபோல் தெரிகிறாயென்று.
அதேபோல
அன்று
கை நிறைய புத்தகங்களை வைத்திருந்ததால்
சரஸ்வதியே வந்தாளென
அம்மாவும்
தன் பங்கிற்குச் சர்டிபிகேட் கொடுத்தாள்.
எனக்கு எப்படித் தெரிகிறாய்
என்று மட்டும் கேட்டுவிடாதே
தலையே வெடித்தாலும்
அதைநான் சொல்லமாட்டேன்
ஏனெனில்,
வெட்கத்தில்கூட
உன் தலை குனியக்கூடாதென்னும்
விருப்பம் என்னுடையது”.
மற்றொரு கவிதையில் அம்மாவுக்கும் மகனுக்குமான உரையாடலில், அம்மாவை காதலித்திருக்கிறாயா எனக்கேட்கும் மகனிடம், உங்க தாத்தா தா என்னய காலேஜ்க்கே அனுப்பலையே என்று கூறுவாதாகவும் அதில் அவள் படிக்கமுடியவில்லையே என்ற ஆதங்கத்தோடு மட்டும் கூறவில்லை என்று முடியும்.
இவ்வாறு கவிதையின் ஊடாக சமூகச் சிக்கலையும், மனிதர்களின் அகம் சார்ந்த சிக்கலையும் பேசியிருக்கிறார் கவிஞர் யுகபாரதி.
பாரதியின் பிறப்பு பற்றி கவிராஜன் கதையில் வைரமுத்து இவ்வாறு எழுதுவார் “எட்டையபுரத்தில் மட்டும் எப்படிச் சாத்தியம், நெருப்பைச் சுமந்த கருப்பை ஒன்று” அதுபோலத்தான் வியக்கத் தோன்றுகிறது “யுகபாரதிக்கு மட்டும் எப்படிச் சாத்தியமானது காதலுக்குள் (அகம்) சமூகத்தைக் (புறம்) காட்ட”.
– பூபாலன்
******
நூல்: மஹா பிடாரி
ஆசிரியர்: யுகபாரதி
நேர் நிரை வெளியீடு
விலை: ரூ. 150/-