குரூரமான ஊடகம் சினிமா!

நேர்காணல் பாலுமகேந்திரா

தமிழ்ச் சூழலில் இலக்கியவாதிகளுக்கும் சினிமாக்காரர்களுக்குமான இடைவெளியும் வெறுப்பும் தவிர்க்க முடியாத ஒரு பிரச்சினையாக இருக்கிறது. இதற்கு இரண்டு மீடியம் சம்பந்தமானவர்களும், பரஸ்பரம் இன்னொரு மீடியத்திலிருக்கிற தனித்தன்மைகளைப் புரிந்து கொள்ளாதது தான் காரணமென்று தோன்றுகிறது. உங்களுடைய படைப்பனுபவத்தில் நீங்கள் இதை எப்படி எதிர் கொள்கிறீர்கள்?

நான் கதை நேரத்தில் எடுத்துக் கொண்ட கதைகள், இந்த மீடியம் மாற்றத்துக்கு இணக்கமான கதைகளாக, எனக்குப் பிடித்த கதைகளாக இருக்கிறது. அற்புதமான இலக்கியப் படைப்புக்கள் என அங்கீகாரம் செய்யப்பட்ட பல கதைகள், அதற்குப் பக்கத்திலேயே நான் போக முடியாமல் இருக்கிறது. ஏனெனில், இந்த ஊடக மாற்றம் என்பது, எழுத்து என்கிற ஊடகத்திலிருந்து சினிமா என்கிற ஊடகத்திற்கு மாற்றம் செய்கிறபோது, சில கதைகள்தான் அந்த ஊடக மாற்றத்துக்கு இணக்கமாக அமைகிறது. ஏன் நீங்கள் அதைச் செய்யவில்லை, இதைச் செய்யவில்லை என்கிற பட்சத்தில், அந்தக் கதைகள் அற்புதமான கதைகள், இன்றைக்கும் என் நெஞ்சுக்குள்ளே பொத்தி வைத்து ரசிக்கிற கதைகள் அவை.

ஆனால், நீங்கள் சொல்கிற அந்தக் கதைகளை காட்சி ரூபமாகச் செய்வதற்கு எனக்குப் பயமாக இருக்கிறது. அதுக்கான காரணங்கள் ரொம்பச் சாதாரணம்.. ஒரு கதையை நான் சிறுகதை என்கிறபோது, ஒரு படைப்பு என்கிற ரீதியில் அதை அணுகுகிறபோது, (இசையில் ஒரு படைப்பு வரலாம், ஓவியத்தில் ஒரு படைப்பு வரலாம். கட்டிடக்கலையில் ஒரு படைப்பு வரலாம், நாடகத்தில் ஒரு படைப்பு வரலாம்). படைப்பு என்கிறபோது இரண்டு விஷயங்கள் அதற்குள் முக்கியமாக வருகிறது, ஒன்று அதனுடைய உருவம் மற்றது அதனுடைய உள்ளடக்கம். இது ஒவ்வொரு ஊடகத்திலேயும் ஒவ்வொரு படைப்புக்கும் வேறு வேறு வகைகளில் இருக்கிறது. ஒரு ஊடகத்தில் இயங்கிக் கொண்டிருக்கிற ஒரு படைப்பாளியினுடைய ஆற்றலை நான் மதிப்பிட வேண்டும் என்கிற பட்சத்தில், ஒருபடைப்பாளியென்கிற கோணத்திலிருந்து மட்டும், (வேறு சில கோணங்கள் இருக்கிறது. அதனை நான் பின்பாகச் சொல்கிறேன்) இவருக்கு அந்த ஊடகத்திலிருக்கிற ஆற்றலை நான் மதிப்பிடறதுக்கு உட்காரும்போது, வடிவத்தைத்தான் நான் அதிகம் சார்ந்திருக்கிறேன்.

அப்புறம்தான் உள்ளடக்கம். எழுதுவது என எடுத்துக் கொண்டால், எழுத்தில் இவருக்கிருக்கிற ஆளுமை, லாவகம், இவருக்குக் கைவந்த அல்லது கைவராத எளிமை, இந்த விஷயங்கள் எனக்குச் சொல்கிறது. அவருடைய எழுத்து – சார்ந்து அவர் என்ன மாதிரி எழுத்தாளர் என என்னால் தெரிந்து கொள்ள முடிகிறது. இவருடைய உள்ளடக்கத்தை வைத்து நான் என்ன புரிந்து கொள்கிறேன்? இவரைப் – புரிந்து கொள்கிறேன். இவருடைய சார்புகளை நான் புரிந்து கொள்கிறேன். இவருடைய குணாதிசயங்களை ஓரளவுக்கு என்னால் ஊகிக்க முடிகிறது. இவர் ஒருவேளை தீவிரமான இடதுசாரியாக இருப்பாரோ என்கிற அந்த மாதிரி விஷயங்களைக் கண்டுபிடிக்க முடிகிறது.

ஆனால் படைப்பாளி என்கிற முறையில் ஊடகத்தில் இவருடைய பாண்டித்யம் என்ன என்பதா முக்கியம்? இந்த இரண்டு சமாச்சாரங்களையும் வைத்துக்கொண்டு நான் சிறுகதையை அணுகுகிறபோது, நான் சினிமாவாக மாற்றுகிறபோது, அவருடைய ஊடகத்தில் அவருக்கிருக்கிற ஆளுமை, பாண்டித்யம் எல்லாவற்றையும், நான் கூடையில் – தூக்கிப்போட வேண்டியிருக்கிறது. அது எனக்கு உபயோகப்படாத, போணியாகாத சரக்கு. எனக்கு இது வேண்டாம். எனக்கு இது கிஞ்சிதமும் வேண்டாத விஷயம். இதை நான் என்னுடைய மொழியில் சொல்லப்போகிறேன். அவருடைய மொழி எனக்கு அவசியமில்லை. இந்த மொழியும் உள்ளடக்கமும் சேர்ந்ததுதான் அவருடைய படைப்பு. இந்த இரண்டும் சேர்ந்த ஒரு பிணைப்புக்காகத்தான் அவருக்கு இலக்கிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.

அவருடைய பாத்திரப் படைப்புக்களை நான் கடன் வாங்கிக் கொள்ளலாம். அவருடைய அமைப்பை முறையை நான் கடன் வாங்கிக் கொள்ளலாம். ஆனால், அதை என்னுடைய மொழியில் நான் சொல்லப் போகிறேன். இதற்கும் அவருக்கும் சம்பந்தமில்லை.

ஒருசிறுகதையை நான் எடுக்கும்போது, எனக்குநான் அதனை ஒரு கச்சாப் பொருளாகத்தான் எடுக்கிறேனே தவிர, கலைப் படைப்பாக நான் எடுக்கவில்லை. கலைப்படைப்பு என்கிற அந்த அங்கீகாரம் எனக்கு முக்கியமில்லாமல் போவதற்கு இது ஒரு முக்கியமான காரணம். கலைப் படைப்புகளைத் தொட்ட இயக்குனர்கள் தலைகீழாக விழுந்து போகிறதும் இதனால் தான்.

எழுத்து அவருக்குத் திட்டமிட்ட வகையிலான சுதந்திரத்தைத் தருகிறது. சினிமா ஒரு குரூரமான ஊடகம். லயோலா காலேஜில் நான் காட்சி தொடர்பியல் சொல்லித் தருகிறேன். நான் அவர்களுக்கு ஒரு உதாரணம் சொன்னேன்.

ஓர் ஊரில் ஒரு பாட்டி வடைசுட்டுக் கொண்டிருந்தாள். நமக்குச் சொல்லப்பட்ட முதல் கதை. இது வந்து பல தலைமுறைகளைத் தாண்டி இன்னும் பல தலைமுறைகளுக்குப் போகக் காத்திருக்கிற கதை. இது ஓர் அற்புதமான கதை. காலத்தால் பரிசோதிக்கப்பட்ட கதை. உலகத்தின் தலைசிறந்த கதைகளில் இது ஒன்று, ரொம்பவும் எளிமையான கதை. ஒரு ஊரில் ஒரு பாட்டி வடை சுட்டுக் கொண்டிருந்தாள். ஒரு வரி. ஒரு ஊரில் : ஒருகதை இடம் சொல்லப் பட்டாயிற்று. ஒருபாட்டி: குணச்சித்திரம் அறிமுகம் பண்ணப்பட்டாயிற்று. வடை சுட்டுக் கொண்டிருந்தாள்: செயல் சொல்லப் பட்டாயிற்று- இதனை என்னுடைய தாத்தாவோ பாட்டியோ ஏழு எட்டு வயதிருந்தபோது இந்த வரியைச்சொன்னபோது, நான், உடனடியாகக் கிரகித்துக் கொண்டு அடுத்த வரிக்கு ரெடியாகிவிட்டேன். ஆனால் இந்தச் சாதாரண வரியை நான் சினிமாவாக ஆக்க வேண்டுமென்றால் நான் தலையைப் பிய்த்துக்கொள்ள வேண்டும்.

ஒரு ஊரில் : எங்கே, மலைப் பிரதேசமா, நகர்ப்புறமா, கிராமப்புறமா என்ன? ஒரு பாட்டி: எப்படிப் பாட்டி, என்ன வயசு, என்ன பாடவை கட்டியிருக்கிறாள், காதில் பாம்படம் இருக்கிறதா, மொட்டை போட்டிருக்கிறாளா என்ன? படப்பிடிப்புக்கு போவதற்கு முன்னாடி சின்னச் சின்ன விஷயங்கள் கூட இறுதி பண்ணப்பட்டாக வேண்டும். ஒரு சினிமாப் படைப்பாளி என்ற வகையில், சின்னச்சின்ன விஷயங்களையும் நான் தீர்மானிக்க வேண்டியிருக்கிறது.

என்னுடைய முதிர்ச்சி அல்லது முதிர்ச்சியின்மைக்கேற்ப என்னுடைய கற்பனை வளம் அல்லது கற்பனை வளமின்மைக்கு ஏற்ப, இதுதான் ஊர், இதுதான் பாட்டி, இப்படித்தான் வடை சுட்டுக்கொண்ருந்தாள் எனச் சொல்வேன். இதுதான் சினிமாவுக்கும் இலக்கியத்துக்கும் இருக்கிற மிகப் பிரதானமான வித்தியாசம்.

எழுத்து கொடுக்கிற சுதந்திரத்தை, சினிமா தராது. இவன் தீர்மானித்து, இருட்டுக்கு கூட்டிக் கொண்டு போய் உட்கார வைத்து, பார் என்கிறது தான் சினிமா, மகா மகா போக்கிரித்தனமான குரூரமான ஊடகம் சினிமா. அதுதான் சினிமாவின் வலிமை. அந்த நகர்கிற பிம்பத்தில் உன்னை மாற்றிக் கொள்கிறாய், கமல்ஹாசனாக, ஸ்ரீதேவியாக உன்னை மாற்றிக் கொள்கிறாய். இலக்கியத்துக்கும் சினிமாவுக்குமான இந்த வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். நான் ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், நான் ஆரம்பத்தில் ஓர் எழுத்தாளன். அப்புறம் தான் சினிமாவுக்கு வந்தேன். சினிமா என்னை முழுவதுமாக ஆக்கிரமித்திருக்கிற இன்றைக்கும்கூட, நான் வெறிகொண்ட ஒரு வாசகனாக இருக்கிறேன்.

நேற்று வரைக்கும் வந்த நல்ல சிறுகதை, நல்ல நாவல் என எல்லாவற்றையும் தேடித் தேடிப் படிக்கிற வாசகனாகத்தான் நான் இருக்கிறேன். அதனால் எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டபோது, தொலைக்காட்சியில் உனக்கு 52 வாரத்துக்கு நேரம் தருகிறோம் என்றபோது நான் சிறுகதைகள் எழுதக் கூடியவன்… குறும்படமும் எடுப்பேன்.. நான் எடுத்துக்கொண்ட கதைகளில் ஒன்று இரண்டு இலக்கிய அங்கீகாரம் பெற்ற கதைகளாகவும் இருக்கலாம். பெரும்பாலான கதைகளை இலக்கியக் கண்ணோட்டத்தில் பார்க்கிறபோது இலக்கிய அங்கீகாரம் கொண்ட உன்னதம் கொண்ட கதைகளாக இவை இல்லை.

கதைகள் என்று அதனைப் பார்க்கிறபோது அழுத்தமான உள்ளடக்கம் கொண்ட கதைகளாக அவைகள் இருக்கிறது. இந்த நல்ல விஷயங்களை மட்டும் நான் எடுத்துக்கொண்டேன். அதனை நான் குறும்படங்களாகச் செய்தேன். ராணி பத்திரிகையில் நிருபராக ஒரு பையன், 23 வயசு கூட இல்லை, தாம்பத்ய நினைவுகள் என ஒரு கதை, நான் அதை ஓர் அற்புதமான கலைப் படைப்பாக ஆக்கியிருக்கிறேன். பல தீவிர எழுத்தாளர்கள் எனக்கிருக்கிற இந்தப் பிரச்சினையைப் புரிந்து கொள்வதேயில்லை.

– யமுனா ராஜேந்திரன் (பாலு மகேந்திராவிடம் 2006-ல் எடுக்கப்பட்ட நேர்காணல்)

நன்றி படப்பெட்டி நாளிதழ் (ஜனவரி 2014)

director balu mahendra  பாலு மகேந்திரா

You might also like