பீலி என்றால் மயிலிறகு. வால்போல் தோன்றினாலும் அது வாலன்று என்பதால் மயிலிறகுக்குப் பீலி என்ற சிறப்புப் பெயர். மயிற்பீலிக்கு எடையே இராது. அவ்வளவு மெலிது.
மயில் தோகை விரித்து ஆடுவதன் உண்மைச் செயல் என்ன தெரியுமா? தோகை விரித்து நிற்கும்போது தோகைப்பரப்பில் காற்று மோதுவதால் தடுமாறும். ஒரு பக்கமாக இழுபடும். அவ்வாறு காற்றின் போக்கிற்கேற்பத் தன்னை நிலைப்படுத்திக்கொள்ள கால் மாற்றி வைப்பதுதான் மயில் ஆடுவதுபோல் தோன்றுகிறது.
பெய்தல் என்றால் சிறிய விடுபாடுகூட இல்லாமல் நிறைத்துக்கூடி விழுவது. மழை பெய்கிறது. இவ்விடத்தில் ஒரு புள்ளியில் மழைத்துளி விழவில்லை என்று கூற இயலாது. இடைவெளி விட்டுவைக்காமல் அடித்துக் கொட்டும். அதுதான் பெய்தல்.
விருந்தினர்க்குச் சோறிட்டு நெய் பெய்தனர் என்றால் சோற்றின்மீது இடைவெளியே இல்லாமல் நிறைய ஊற்றினர் என்று பொருள்.
சகடம் என்பதற்குச் சக்கரம், வண்டி, தேர் எனப் பல பொருள்கள். சகடு என்பதற்கும் அவ்வாறே பொருள்கள். அதனால் அக்காலத்தில் சகடுகள் சேர்த்துச் செய்யப்பட்ட வண்டிகளைச் ’சாகாடு’ என்றனர். சகடு = சாகாடு. (ஒரே வீட்டில் அக்கை, தங்கைகளைக் கட்டியவர் சகலை. வண்டியில் இணைச் சகடுகள். இரண்டும் ஒரே செயலைச் செய்யும் சகடுகள். சகடை => சகலை.)
அச்சு என்றால் தெரியும். இரண்டு சகடுகளுக்கு இடையே பொருத்தப்பட்டு அவ்விரண்டையும் இணையாய் இணைப்பது அச்சு. அச்சிலிருந்து சகடு கழன்றுவிடாமல் இருக்கக் குத்துவது அச்சு ஆணி = அச்சாணி. சாகாட்டின் இருபுறத்தும் கடைசியில் இருப்பதால் அது கடையாணியும் ஆகும்.
அறும் என்றால் அற்றுப்போதல். இறும் என்றால் இற்றுப்போதல். இறுதல். தன் இணைப்பிழந்து இற்று உடைதல்.
பண்டம் என்றால் வண்டியில் ஏற்றப்பட்ட பொருள். பொதுவாகவே பண்டம் என்பதுதான் சரக்கு, பொருள். அப்பண்டம் = அ பண்டம். அ என்பது சேய்மைச் சுட்டு. அந்தப் பண்டம் என்பதுபொருள். (நம் மக்கள் புனைவு அல்லாத எழுத்துகளை அ புனைவு என்று எழுதுகிறார்கள்.
அது ஒருபோதும் புனைவல்லாதவற்றைக் குறிக்கும் பொருள் தராது. அந்தப் புனைவு என்ற பொருளைத்தான் தரும். அல்லாத புனைவு என்ற பொருளில்தான் அல்புனைவு எனலாம்.
தமிழில் அல் என்று ஒரு சொல்லைச் சொல்வது பெருவழக்கன்று. அல்திணை => அற்றிணை / அஃறிணை, அல்வழி என்று சில சொற்களே அம்முறையில் ஆகியுள்ளன. அபுனைவு என்று சொல்வது பெரும்பிழை.)
சால என்றால் அதனை அடுத்து வரும் சொல்லின் மிகுநிலை. சாலச் சிறந்தது என்றால் சிறப்பின் மிகுநிலை. சால மிகுத்து என்றால் மிகுதியாய் மிகுத்து.
பெயின் = பெய்யின். இடைவெளியில்லாமல் நெருக்கிக் கட்டி அடுக்கினால். ஏற்றிக்கட்டினால்.
பீலி பெய் சாகாடும் அச்சு இறும்; அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்.
திருக்குறட்பாக்களின் வழியே தமிழைக் கற்பது பேரின்பம்.
நன்றி: பேஸ்புக் பதிவு