‘இன்னிக்கு சாப்பாடு சரியில்ல’, ‘நேத்து கொஞ்சம் கூட நல்லால்ல’ என்று விதவிதமாக புலம்பி வந்தவர்களைத் தலைவாழை இலையில் இட்ட விருந்தைத் தின்ன வைத்து வீட்டுக்குத் திருப்தியோடு அனுப்பி வைத்தால் எப்படி இருக்கும்? ‘மறுநாளும் விருந்தைத் தேடியல்லவா வரச் செய்யும்’ என்று நீங்கள் மனதுக்குள் நினைப்பது தெரிகிறது.
கிட்டத்தட்ட அப்படியொரு திருப்தியான திரையனுபவத்தைத் தருகிறது ‘குடும்பஸ்தன்’. ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன், குரு சோமசுந்தரம், சான்வே மேஹ்னா, பிரசன்னா பாலச்சந்திரன், ஜென்சன் திவாகர், நிவேதிதா ராஜப்பன் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். வைஷாக் இதற்கு இசையமைத்திருக்கிறார்.
சரி, இந்தப் படம் எது பற்றிப் பேசுகிறது?
‘குடும்பஸ்தன்’களின் கதை!
ஒரு இளைஞன். காதலித்து கலப்புத் திருமணம் செய்கிறார். பதிவாளர் அலுவலக வாயிலில் இரு தரப்பு உறவினர்களும் மணமகன், மணமகளை மண்ணை வாரித் தூற்றுகின்றனர்.
ஓராண்டு கழித்து, அந்த இளைஞன் வீட்டில் அப்பெண் வாழ்ந்து கொண்டிருக்கிறார். மருமகளை கரித்துக் கொட்டுகிற மாமியார், எதையும் கண்டுகொள்ளாத மாமனார், அவர்களுக்கு மத்தியில் மனைவியையும் தாயையும் ‘பேலன்ஸ்’ செய்கிற கணவன் என்று அவ்வீடு இருக்கிறது.
வீட்டில் இப்படியொரு நிலையை அந்த இளைஞன் எதிர்கொள்கிறார் என்றால், அலுவலகத்தில் வேறுவிதமான நெருக்கடி. அவரது புதிய, வீரியமான ஐடியாக்களை செயல்படுத்த முடியாத சூழல்.
ஒருநாள் அலுவலகத்தில் நிகழும் களேபரத்தினால் வேலையில் இருந்து அந்த இளைஞன் வெளியேற்றப்படுகிறார். தாய், தந்தை, மனைவி என்று ஒவ்வொருவரும் சில ஆசைகளைக் கொண்டிருக்க, அதனை நிறைவேற்றுவதாக வேறு அவர் வாக்களித்திருக்கிறார்.
தான் சொன்னதைக் காப்பாற்றுவதற்காகக் கடன் வாங்கத் தொடங்குகிறார். அந்த பழக்கம் பெரிதாகி, அவரது கழுத்தை இறுக்குகிறது.
இந்த நிலையில், அதிலிருந்து விடுபடுவதற்காகச் சொந்தமாகத் தொழில் செய்வதென்ற முடிவுக்கு வருகிறார்.
அதிலாவது அந்த இளைஞருக்கு வெற்றி கிடைத்ததா? தனது தாய், தந்தை, மனைவி, இதர உறவினர்கள், நண்பர்களின் விருப்பங்களை நிறைவேற்ற முடிந்ததா என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.
அந்த இளைஞன் இக்கட்டான நிலைமையைச் சமாளிக்க எப்படிப் போராடுகிறார் என்பதையே பெரும்பாலான காட்சிகள் பேசுகின்றன. நியாயமாகப் பார்த்தால், அவை நம்மை ‘சீரியசாக’ திரையை உற்றுநோக்கச் செய்திருக்க வேண்டும். மாறாக, அவ்வாறு அமைந்த காட்சிகள் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கின்றன.
அந்த வகையில், ‘அவல நகைச்சுவை’ என்பதை மிக அற்புதமாகக் கையாண்டிருக்கிறது ‘குடும்பஸ்தன்’ டீம். அவற்றைத் திரையில் காட்டியும் சிரிக்கச் செய்யலாம் என்பதை வெற்றிரகமாகச் சாத்தியப்படுத்தியதற்காகவே, அக்குழுவுக்கு வாழ்த்துகளைச் சொல்லியாக வேண்டும்.
வாய் விட்டுச் சிரிக்கலாம்!
நான்கு பேர் நள்ளிரவு தொடங்கி விடியல் வரை ‘நான்ஸ்டாப்’ ஆக மது குடிப்பதை முதல் காட்சியாகக் கொண்டிருக்கிறது ‘குடும்பஸ்தன்’. போலவே, இதன் முடிவும் அது சார்ந்தே வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
‘தியேட்டர் மாறி பாட்டல் ராதாவுக்கு வந்துவிட்டோமோ’ என்று ஒரு நொடி குழம்புகிற அளவுக்கு, இப்படத்தில் மது பிரியர்களின் ‘அட்ராசிட்டி’ காட்டப்படுகிறது. ஆனால், அடுத்த காட்சியிலேயே நாயகன் நாயகியின் அறிமுகம் நிகழ்கிறது. தொடர்ந்து அவர்களது உறவினர்கள் திரையில் வந்து போகின்றனர்.
ஒரு சில காட்சிகள் மூலமாகவே கதை நிகழும் களம் மற்றும் பாத்திரங்களின் குணாதிசயங்கள் எளிதாகக் கடத்தப்படுகின்றன. அது போதாதென்று, அதன் பின்னே வருகிற காட்சிகள், வசனங்கள் எளிய மனிதர்களின் வாழ்வோடு சம்பந்தப்பட்டதாக வருகின்றன.
அதனால், ‘இந்தப் படத்தோட ஒன்றிணைய வேறென்ன வேணும்’ என்று ரசிகர்கள் கேட்கும்விதமாக அமைந்திருக்கிறது காட்சியாக்கம்.
இதன் திரைக்கதையை பிரசன்னா பாலச்சந்திரனுடன் இணைந்து அமைத்திருக்கிறார் இயக்குனர் ராஜேஸ்வர் காளிசாமி. என்.கிருஷ்ணகாந்த் எழுத்தாக்கத்தில் இவர்களோடு பங்கெடுத்திருக்கிறார்.
வசனத்தை பிரசன்னாவே கையாண்டிருக்கிறார். ’என்றா சொல்லிப்போட்ட’ எனும் தொனியில் இதுநாள்வரை கோவை வட்டாரத் தமிழைத் திரையில் பார்த்தவர்களுக்குப் புத்துணர்வைத் தருகிறது இப்பட வசனங்கள். குறிப்பாக, நையாண்டி வார்த்தைகள் எல்லாம் அர்த்தம் புரிந்தவுடன் ‘குபீர்’ சிரிப்பை வரவழைக்கின்றன.
காட்சிகளில் நகைச்சுவை வழியே சுவாரஸ்யத்தை விதைப்பது மட்டுமல்லாமல், கோவை வட்டார மக்களின் வாழ்வியலையும் இதில் இக்கூட்டணி காட்ட முயன்றிருக்கிறது. தமிழ்நாட்டின் இதர பகுதிகளைச் சார்ந்தவர்களின் வாழ்வோடும் அது பொருந்திப் போயிருப்பதுதான் இக்கதையின் வெற்றி.
இப்படியொரு கதையைத் திரைப்படம் ஆக்குகையில், ‘இவையனைத்தும் யதார்த்தம்’ எனும்படியான திரைக்கதை ட்ரீட்மெண்ட் அவசியம்.
ஒளிப்பதிவாளர் சுஜித் என்.சுப்பிரமணியம், கலை இயக்குனர் சுரேஷ் கல்லேரி, படத்தொகுப்பாளர் கண்ணன் பாலு ஆகியோர் அதற்கு உறுதுணையாக நின்றிருக்கின்றனர்.
வைஷாக்கின் இசையில் இரண்டு பாடல்கள் இதில் ஒலிக்கின்றன. அவை கதையோட்டத்தோடு சேர்ந்து அமைந்திருப்பதால், இருக்கையை விட்டு எவரும் எழுந்து செல்லவில்லை.
கதாபாத்திரங்கள் பிரச்சனையை எதிர்கொள்ள முடியாமல் சோகத்தில் தவிப்பது பார்ப்பவர்களுக்கு சிரிப்பைத் தருமா? இப்படத்தில் அப்படியொரு சிரிப்பினை நம்மிடம் இருந்து பெறும் வகையில் காட்சிகள் உள்ளன. அதற்கேற்றவாறு பின்னணி இசை அமைக்கும் சவாலை மிகச்சாதாரணமாக எதிர்கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார் வைஷாக்.
யூடியூப் வீடியோ பார்ப்பது போல் இல்லாமல், ஒரு சீரியசான கதையைத் திரையில் பார்க்கும் உணர்வை உருவாக்கியிருக்கிறது ஒளிப்பதிவு. இறுதியாக வரும் 45 நிமிடங்கள் நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டேயிருக்கிறது கேமிரா. அந்த தருணங்கள் அனைத்தும் நம்மைப் படத்தோடு ஒன்ற வைத்து, ‘இது யதார்த்தம்’ என்ற எண்ணத்தை ஏந்திப் பிடிக்கின்றன. படத்தில் டிஐயும் அதற்கேற்றவாறு கையாளப்பட்டிருக்கிறது.
இந்தப் படத்தின் மிகப்பெரிய சிறப்பு, இதன் ‘காஸ்ட்டிங்’.
நாயகன் மணிகண்டன் நவீன் எனும் பாத்திரத்தில் நடித்திருக்கிறார். சில்லு கருப்பட்டியில் தொடங்கிய அவரது நாயக பிம்பம் இதில் மிக வலுவாக வெளிப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட மலையாளத்தில் பசில் ஜோசப், ஆசிஃப் அலி, டொவினோ தாமஸ், சௌபின் ஷாகிர் போன்றவர்கள் அடைந்த இடத்தை வெகு சில படங்களின் வழியே தமிழில் அடைந்திருக்கிறார்.
நாயகி சான்வே மேஹ்னா அருமையான தேர்வு. வெண்ணிலா பாத்திரத்தில் அவரைத் தொடக்கத்தில் பார்க்கும்போது, ‘இவர் இந்த கதைக்குச் சரியானவரா’ என்ற கேள்வி எழுகிறது. ஆனால், திரைக்கதை நகர நகர ‘இவர்தான் பொருத்தமானவர்’ என்று எண்ண வைத்திருக்கிறார்.
குரு சோமசுந்தரம், அவரது ஜோடியாக வரும் நிவேதிதா இருவருமே ‘ஆவ்சம்’ என்று சொல்லும்படியாக நடித்திருக்கின்றனர்.
பிரசன்னா பாலச்சந்திரன், ஜென்சன் திவாகர் மற்றும் அவரோடு வரும் இரண்டு பேர் இணைந்து காமெடிக்கு உத்தரவாதம் தருகின்றனர். திரைக்கதையில் முதல் மற்றும் இறுதி பத்து நிமிடங்களை இக்கூட்டணி குத்தகைக்கு எடுத்திருக்கிறது.
இவர்கள் போதாதென்று நாயகனின் தந்தையாக வரும் ஆர்.சுந்தர்ராஜன், தாயாக வருபவர், நக்கலைட்ஸ் சாவித்திரி உட்பட உறவினர்களாக வருபவர்கள் என்று சுமார் மூன்று டஜன் பேராவது இதில் தலைகாட்டியிருப்பார்கள். பாலாஜி சக்திவேலும் இதில் நடித்திருக்கிறார்.
‘குட்நைட்’ படத்தில் குடும்பமாக திரையரங்குகளுக்கு வந்தவர்களை வரவேற்ற மணிகண்டன், ‘லவ்வர்’ படத்தில் இளையோரை மட்டுமே ஈர்த்தார். ‘டாக்ஸிக் லவ்’ பற்றிப் பேசிய அப்படத்தில் இருந்து முற்றிலுமாக மாறுபட்டு சாதாரண மக்களின் வாழ்க்கையை, அதில் நிறைந்திருக்கும் கஷ்டங்களைச் சிரிக்கச் சிரிக்கப் பேசியிருக்கிறது ‘குடும்பஸ்தன்’.
இந்தக் கதையில் நாயகன் சில தில்லுமுல்லுகளைச் செய்வதாகக் காட்டப்பட்டிருக்கிறது. அதிலிருந்து ரொம்பவே விலகி, சமரசங்களுக்கு இடம் கொடுத்து தன்மானத்தை விட்டுக் கொடுக்காதவராகவும் அவரைக் காட்டுகிறது திரைக்கதை.
சில மனிதர்கள் எதிர்கொள்ளும் அவலங்களைக் கூட வாய்விட்டுச் சிரிக்கும் வகையில் காட்சியாக்கம் செய்த இயக்குனர், அந்த விஷயத்திலும் கூடுதல் கவனத்தைச் செலுத்தியிருக்கலாம். அது போன்ற ஓரிரு குறைகளையும் கூடத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். அந்த வகையில், இந்த ஆண்டின் ‘மிகச்சிறப்பான திரைப்படம்’ எனும் வரிசையில் சேர்கிறது ‘குடும்பஸ்தன்’.
‘நமக்கு அதெல்லாம் சரிப்படாதுங்க. வெட்டு குத்து கொலை குற்றம்னு இருந்தாதாங்க படம் பார்க்க முடியும்’ என்பவர்களைத் தவிர மற்றனைவருக்கும் இந்த ‘பேமிலி’படம் நிச்சயம் பிடிக்கும்!
- உதயசங்கரன் பாடகலிங்கம்