இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தமிழ் திரையுலகில் ‘ஸ்டைலிஷான’ படைப்புகளைத் தந்தவராகக் கொண்டாடப்படுபவர்.
தமிழ்நாடு தாண்டி பிற மொழிகளிலும் அவருக்கு ரசிகர்கள் உண்டு. கௌதமை ‘ஸ்ஃபூப்’ செய்து வெளியாகும் படங்களைக் கொண்டாடுகிற அளவுக்கு, அவர்கள் மத்தியில் அவர் பரிச்சயம்.
குறிப்பாக, கேரளாவில் பல திரைக்கலைஞர்கள் அவரது ரசிகர்கள். சில ஆண்டுகளாக கௌதம் நடிக்கும் மலையாளத் திரைப்படங்களின் வழியே அதனை நம்மால் உணர முடியும்.
இப்படியொரு சூழலில், முதன்முறையாக மலையாளத்தில் அவர் நேரடியாக ஒரு படத்தினை இயக்குகிறார் என்பது ஈர்க்கும் விஷயம் தானே? அதுவே ‘டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்’ படத்தின் யுஎஸ்பி.
மம்முட்டி நாயகனாக நடித்திருப்பதோடு, இதனைத் தயாரிக்கவும் செய்திருக்கிறார்.
சுரேஷ்கோபியின் மகன் கோகுல், விஜி வெங்கடேஷ், சுஷ்மிதா பட், மீனாட்சி உன்னிகிருஷ்ணன், வினீத், விஜய் பாபு, சித்திக், லேனா, ஷைன் டாம் சாக்கோ, ரகுநாத் பலேரி உட்படப் பலர் நடித்துள்ள இப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்திருக்கிறார்.
‘இது ஒரு த்ரில்லர் படம்’ என்று உரைத்தது ட்ரெய்லர். அதற்கேற்ப, இப்படம் சிறப்பானதொரு ‘த்ரில்’ அனுபவத்தைத் தருகிறதா?
டொ.லே.ப. கதை!
ஒருகாலத்தில் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் டொமினிக் (மம்முட்டி). போலிச்சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த காரணத்திற்காக, அவர் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
தற்போது டொமினிக் ஒரு ‘டிடெக்டிவ் ஏஜென்ஸி’ நடத்தி வருகிறார். அதில், அவரது உதவியாளராகச் சேர்கிறார் விக்னேஷ் (கோகுல் சுரேஷ்).
டொமினிக் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் மாதுரி (விஜி வெங்கடேஷ்), ஒருநாள் ஒரு பர்ஸை கொண்டு வருகிறார். மருத்துவமனைக்குச் சென்றபோது, அங்கிருந்த சோபாவில் அதனைக் கண்டெடுத்ததாகச் சொல்கிறார்.
‘பர்ஸ் உரிமையாளரைக் கண்டுபிடித்து, அவரிடம் இதனைச் சேர்க்க வேண்டும்’ என்கிறார். பதிலுக்கு, ‘நான்கு மாத வாடகை பாக்கியைத் தர வேண்டாம்’ என்று கூறுகிறார்.
சுயநலமிக்க சிந்தனைகளைக் கொண்ட டொமினிக், வேறு வழியில்லாமல் அதற்கு சம்மதிக்கிறார்.
அந்தப் பர்ஸில் இருக்கும் ரசீது உள்ளிட்ட சில விஷயங்களைக் கொண்டு, அது பூஜா ரவீந்திரன் எனும் பெண்ணினுடையது எனக் கண்டறிகிறார். ஆனால், அப்பெண்ணை நான்கு நாட்களாகக் காணவில்லை என்கிறார் அவரது தோழி.
அதாகப்பட்டது, மிகச்சரியாக அந்தப் பர்ஸ் மாதுரியின் கைகளில் கிடைத்த அன்று அவர் காணாமல் போயிருக்கிறார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் தன்னை விட்டுப் பிரிந்த கார்த்திக்கை தேடி பூஜா சென்றதாகக் கூறுகிறார் தோழி.
பர்ஸில் இருக்கும் ஒரு மெமரி கார்டு கொண்டு கார்த்திக்கின் இருப்பிடத்தை அறிய முயற்சிக்கிறார். அதன் வழியே மூணாரில் இருக்கும் அவரது வீட்டைக் கண்டறிகிறார்.
ஆனால், அங்கு அவரது தங்கை நந்திதா (சுஷ்மிதா பட்) மட்டுமே வசிக்கிறார். அவரோ, தனது சகோதரனை இரண்டு ஆண்டுகளாகக் காணவில்லை என்கிறார்.
பூஜா என்னவானார் என்று தெரியாமல் குழம்பும் டொமினிக்கை இத்தகவல் மேலும் குழப்புகிறது. அப்போது, கார்த்திக் வேலை பார்த்த நிறுவனம் மீது அவரது கவனம் திரும்புகிறது.
அதன்பிறகு கார்த்திக் காணாமல் போனது எப்படி என்று டொமினிக் கண்டறிந்தாரா? பூஜா எங்கு சென்றார், என்ன ஆனார்?
இப்படிப் பல கேள்விகளுக்குச் சாவகாசமாகப் பதிலளிக்கிறது ‘டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்’ படத்தின் மீதி.
இது இயக்குநர் படமா?
மம்முட்டியின் நடிப்பையோ, டொமினிக் எனும் பாத்திரத்தை எவர் எப்படி கையாண்டிருக்கிறார் என்பதையோ தனியே விவரிக்கத் தேவையில்லை.
ஆனால், அப்பாத்திரத்தின் குணாதிசயங்களை ‘அண்டர்லைன்’ செய்யாமல் தவிர்த்திருப்பது பார்வையாளர்களைச் சற்றே குழம்பச் செய்கிறது.
மம்முட்டி வீட்டு உரிமையாளராக வரும் விஜி வெங்கடேஷ் சட்டென்று நம்மை நிமிர்ந்து பார்க்க வைக்கிறார். நந்திதா ஆக வரும் சுஷ்மிதாவையும் அந்த வரிசையில் சேர்க்கலாம்.
விக்னேஷாக வரும் கோகுல் சுரேஷ் ஆங்காங்கே நம்மை புன்முறுவல் பூக்க வைக்கிறார். அதேநேரத்தில், அவருக்கு இப்படத்தில் பெரிய முக்கியத்துவம் இல்லை.
இவர்கள் தவிர்த்து வினீத், விஜய்பாபு, லேனா உட்படப் பலர் உண்டு. ஷைன் டாம் சாக்கோ போன்று இதில் இயக்குனர் கௌதமும் ஒரு காட்சியில் தலைகாட்டியிருக்கிறார்.
கௌதம் வாசுதேவ் மேனன் படம் என்றாலே அதன் உள்ளடக்கத்தில் சில ஆச்சர்யங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். குறிப்பாக, காட்சியாக்கத்தில் அவர் சில மாயாஜாலங்களைச் செய்வார் என்பது அதிலொன்று.
ஆனால், அவரே ‘நடுநிசி நாய்கள்’ மாதிரியான பரீட்சார்த்த முயற்சிகளைச் செய்து நம்மைச் சோதித்திருக்கிறார்.
அதனால், ‘இயக்குநர் படமாக டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் அமைந்திருக்கிறதா’ என்ற கேள்வி இயல்பானது.
திரையில் படம் பார்க்கும்போது, ‘இதில் இயக்குநர் முத்திரை இருக்கிறதா’ என்று தேட வேண்டியிருக்கிறது.
கதை, காட்சிகள் ரீதியாக அவர் வேறொரு தளத்தை அடைந்திருந்தாலும், ரசிகர்களின் எதிர்பார்ப்பை மீறிய காட்சியாக்கத்தைத் தருவதில் அதிருப்தியே மிஞ்சுகிறது.
‘வெந்து தணிந்தது காடு’, ‘அச்சம் என்பது மடமையடா’ படங்களில் கைகளில் கேமிராவை தூக்கிக்கொண்டு ஒளிப்பதிவாளரை ஓட விட்டிருப்பார் கௌதம். இதிலும் அதையே செய்திருக்கிறார்.
முன்பாதியில் அது வழமையான மலையாளப் படம் பார்த்த உணர்வை ஏற்படுத்துகிறது. நல்லவேளையாக, பின்பாதியில் அந்த எண்ணம் உயரவில்லை.
விஷ்ணு தேவ் ஒளிப்பதிவு, ஆண்டனி படத்தொகுப்பு, ஷாஜி நடுவில் தயாரிப்பு வடிவமைப்பு ஆகியன இயக்குனர் உருவாக்க விரும்பிய உலகை நமக்குக் காட்ட உதவியிருக்கின்றன.
தர்புகா சிவாவின் பின்னணி இசை பின்பாதியில் நம்மைத் திரையோடு ஒன்றச் செய்கிறது. பாடல்கள் நம்மில் துள்ளலை விதைக்கின்றன.
டாக்டர் நீரஜ் ராஜன் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டது இப்படத்தின் கதை. அவருடன் இணைந்து சூரஜ் ராஜன், கௌதம் இருவரும் திரைக்கதை வசனம் அமைத்திருக்கின்றனர்.
பெரிதாக ஹீரோயிசமோ, நகைச்சுவையோ திரையில் வெளிப்படாத வண்ணம், எல்லா அம்சங்களையும் சிறியளவில் கொண்டிருப்பதாக நாயக பாத்திரத்தை வடிவமைத்திருக்கின்றனர்.
கோகுல் உட்படப் பலரது பாத்திரங்களுக்கு இதில் பின்னணி தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
அதேநேரத்தில், கதையின் மையமான கார்த்திக் பாத்திரம் போதுமான அளவுக்குத் திரைக்கதையில் விவரிக்கப்படவில்லை. அதுவே இப்படத்தின் முக்கியமான குறையாகத் தெரிகிறது.
குறைவான பாத்திரங்களைக் கொண்டதாக இக்கதையை வடிவமைத்திருப்பதோடு, கதாபாத்திரங்களின் பின்னணியில் நடமாடுபவர்களையும் எண்ணிக்கையில் குறைவாக இருக்குமாறு பார்த்துக் கொண்டிருக்கிறார் இயக்குநர்.
தனித்து தெரிகிறது..!
சமகால மலையாளத் திரைப்படங்கள் மேற்கத்திய திரையுலகுக்குச் சவால் விடும் வகையில்,
பட்ஜெட் குறித்த எண்ணங்களுக்கு இடமளிக்காதவாறு சிறப்பான உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கின்றன.
அந்த வரிசையில் இடம்பெறாமல் தனித்து தெரிகிறது இப்படம்.
ஒருவேளை நாம் தமிழில் பார்த்த கௌதமின் ‘கிளாசிக்’ படங்கள் அனைத்தும் கொஞ்சம் பெரிய பட்ஜெட்டில் தயாரானவை என்பது அதற்கான காரணமாக இருக்கலாம்.
அனைத்துக்கும் மேலே, மம்முட்டி கம்பெனி தயாரிப்பில் இதுவரை வெளியான படங்கள் தந்த ‘கூஸ்பம்ஸ் மொமண்ட்’களை ‘டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்’ தருகிறதா என்றால் இடம் வலமாகவும் மேலும் கீழும் மாற்றி மாற்றித் தலையாட்ட வேண்டியிருக்கிறது.
காட்சிகள் நகர்வைக் காட்டிலும் பாத்திர வார்ப்பில் தெளிவில்லாமல் போயிருப்பது அதற்கான காரணமாக இருக்கலாம். எனினும், வேறு கதாசிரியர்களிடம் இருந்து ‘ஸ்கிரிப்ட்’ வாங்குவது என்ற இயக்குனரின் முடிவை வரவேற்க வகை செய்கிறது இப்படம்.
முந்தையப் படங்களில் இயக்குநர் தவறவிட்டதைச் சரி செய்வதற்கு, இம்முடிவை ஒரு வாய்ப்பாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதன் பின்னும் ‘துருவநட்சத்திரம் படத்தைச் சிறப்பானதாக கௌதம் தருவார்’ என்ற நம்பிக்கையை நம்மில் உயிர்ப்போடு வைத்திருக்கச் செய்திருப்பது தான் அவர் பெற்றிருக்கும் வெற்றி!
– உதயசங்கரன் பாடகலிங்கம்.