ஜேசன் ஸ்டேதம் போல வருமா?!

‘புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட மாதிரி’ என்றொரு பழமொழி உண்டு. உண்மையில் அதற்கு வாய்ப்பில்லை.

ஆனால், அது ஒரு அருமையான கற்பனை. அசலுக்கும் நகலுக்குமான வித்தியாசம் மிகப்பெரியது என்பதற்காகச் சொல்லப்பட்ட வார்த்தைகள் அவை.

‘ஹாலிவுட் மாதிரி இங்க ஏன் படம் எடுக்க மாட்றாங்க’ என்கிற வார்த்தைகளைக் கேட்கும்போதெல்லாம், மேற்கண்ட பழமொழி நினைவுக்கு வரும். ஏனென்றால், அவ்வாறு அமைந்த சில முயற்சிகள் அப்படித்தான் எண்ண வைத்தன.

அந்த வரிசையில், சில ஆண்டுகளாக ‘ஜேசன் ஸ்டேதம் மாதிரி ஒருத்தர் இங்க ஹீரோவாக முடியுமா’ என்கிற கேள்வி கேட்கப்படுகிறது. கன்னடத் திரையுலகில் ராஜ் பி ஷெட்டி அதற்கான பதிலாக உருவெடுத்து வருகிறார்.

இந்தியிலும் அக்‌ஷய் கன்னா போன்றோர் சிறப்பான பங்களிப்பைத் தந்து வருகின்றனர். அந்த வரிசையில் இன்னும் பலர் வரக்கூடும்.

ஆனாலும், ஜேசன் ஸ்டேதம் போல ஒரு நட்சத்திரமாக உருமாற முடியுமா என்பது சந்தேகம் தான்.

ஏனென்றால், அதுதான் அவரது தனித்துவம்.

சரி, இந்தக் கேள்விக்கு என்ன அவசியம்? கடந்த வாரம் ‘தி வொர்க்கிங் மேன்’ எனும் ஆங்கிலப் படத்தின் ட்ரெய்லர் வெளியானது. அதில் நாயகனாக நடித்திருப்பவர் ஜேசன் தான்.

அந்தப் படத்தில் அவர் ஒரு கட்டுமானத் தொழிலாளியாக நடித்திருக்கிறார். தான் வேலை பார்க்கும் நிறுவன உரிமையாளரின் மகள் கடத்தப்பட்டதை அறிந்ததும், அவரைத் தேடிப் பயணிக்கிறார் என்பதுவே அதன் கதை.

இப்படியொரு கதையில் நாயகனுக்கு எவ்வளவு ஆக்‌ஷன் காட்சிகள் இருக்குமென்பதைச் சாதாரண சினிமா ரசிகனால் மட்டுமே உணர முடியும். அப்படிப்பட்டவர்கள் அனைவருமே நிச்சயம் ஜேசன் ஸ்டேதமின் ரசிகர்களாக இருப்பார்கள்.

அந்த ட்ரெய்லர் வெளியான யூடியூப் பக்கத்தில் கூட, ‘ஒரேமாதிரியான பாத்திர வார்ப்பில் தோன்றினாலும் ஜேசனின் இருப்பு கொஞ்சம் கூட அலுப்பைத் தராது’ எனும் ரகத்தில் பல கமெண்ட்கள் இருக்கின்றன. அது மறுக்க முடியாத உண்மை.

பல வேலைகள்!

பிரிட்டனின் டெர்பிஷைரில் உள்ள ஷைர்ப்ரூக் நகரில் பிறந்தவர் ஜேசன். தந்தை பேரி ஸ்டேதம் ஒரு நடைப்பாதை வியாபாரி. தாயார் ஐலீன் நாட்டியமாடுபவர்.

பெயிண்டர், சுரங்கத் தொழிலாளி, பாடகர் என்று பல வேலைகளைத் தந்தை செய்து வந்ததை நேரில் கண்டவர் ஜேசன். அதனால், சிறு வயதிலேயே தந்தையைப் போல பல வேலைகளைச் செய்யக்கூடாது என்பதில் தீர்மானமாக இருந்தார்.

சீனத் தற்காப்புக்கலைகளைக் கற்றுக்கொண்டார். கால்பந்து விளையாட்டில் ஆர்வம் காட்டினார். நீச்சல் மற்றும் டைவிங்கில் ஈடுபட்டார்.

தொண்ணூறுகளில் பிரிட்டனின் தேசிய நீச்சல் குழுவில் ஜேசன் அங்கம் வகித்திருக்கிறார். ஒருமுறை காமன்வெல்த் போட்டியிலும் பங்கேற்றிருக்கிறார்.

இளைஞனான பிறகு தந்தையைப் போலவே வியாபாரத்தில் ஈடுபட்டார் ஜேசன். பின்னர் டாமி ஹில்பிகர், லெவி போன்ற நிறுவனங்களின் விளம்பரங்களில் மாடலாக தோன்றினார்.

அந்தக் காலகட்டத்திலேயே, ‘வழக்கமான ஆண் மாடல்களை போல அல்லாமல் மிகச்சாதாரண பிரிட்டன் இளைஞராகத் தெரிவதால் இவரைத் தேர்ந்தெடுத்தோம்’ என்று கூறின சில நிறுவனங்கள்.

அதுவே, இயக்குநர் கை ரிட்சியின் கண்களில் பட்டு ‘லாக் ஸ்டாக் அண்ட் ஸ்மோக்கிங் பாரல்ஸ்’ படத்தின் நாயகனாகத் தேர்ந்தெடுக்கவும் காரணமானது. பிறகு அவரது இயக்கத்தில் ‘ஸ்நாட்ச்’ படத்தில் நடித்தார் ஜேசன் ஸ்டேதம்.

அதனையடுத்து தி ஒன், மீன் மெஷின் போன்ற படங்களில் துணை கதாபாத்திரங்களில் தோன்றினார். செல்லுலர் எனும் பி கிரேடு ஆக்‌ஷன் படத்தில் வில்லனாக நடித்தார்.

இடைப்பட்ட காலத்தில் ‘தி ட்ராஸ்போர்ட்டர்’ படத்தில் நாயகனாகவும் இடம்பிடித்தார் ஜேசன்.

அதில் அவர் ஏற்ற பிராங்க் மார்ட்டின் பாத்திரம் ஆக்‌ஷன் பட பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமானது.

இன்று வரை அதே போன்ற பாத்திரங்களில் மட்டுமே நடிக்கிறார் என்று அவர் மீது குற்றம்சாட்டுவதற்கான அடித்தளத்தையும் அப்படமே அமைத்து தந்தது.

தி இத்தாலியன் ஜாப், கொலோட்டரல் படங்களில் சிறு பாத்திரங்களில் நடித்த ஜேசன் ஸ்டேதம், 2005க்கு பிறகு முழுமையான நாயகனாக மாறினார்.

ட்ரான்ஸ்போர்ட்டர் 2 மற்றும் 3 படங்கள் அவருக்கிருக்கும் ரசிகர்களின் எண்ணிக்கையைத் தெளிவாகக் காட்டியது.

ஒரேமாதிரியான பாத்திரங்கள்!

தி பேங்க் ஜாப், கிராங், தி பிங் பந்தர், டெத் ரேஸ், தி எக்ஸ்பேண்டபிள்ஸ், பார்க்கர், பாஸ்ட் அண்ட் பியூரியஸ் என்று அவர் தேர்ந்தெடுத்த கதைகள் அனைத்துமே அடுத்தடுத்த பாகங்களில் இடம்பெறும் அளவுக்கு வெற்றியைப் பெற்றன.

கடந்த ஆண்டு வெளியான ‘தி பீகீப்பர்’ படம் மிகச்சுமாரான எதிர்பார்ப்புடன் வெளியாகி சூப்பரான வெற்றியைப் பெற்றது.

உண்மையைச் சொன்னால், ஜேசன் நடித்த பல படங்கள் அப்படிப்பட்டவைதான்.

கஷ்டத்தில் மாட்டிக்கொள்ளும் சில மனிதர்களைக் காப்பாற்றுகிற ஆபத்பாந்தவன் பாத்திரங்களே அவருக்கு வாய்க்கின்றன.

ஒரேமாதிரியாக அவை தோற்றமளித்தாலும், ஆக்‌ஷன் பட ரசிகர்களுக்கு அது அயர்ச்சியைத் தராதிருப்பது ஆய்வுக்குரிய விஷயம்.

ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவராக அல்லது அது போன்ற பாதுகாப்பு படையொன்றில் இருந்தவராகவே அவரது பாத்திரங்கள் வடிவமைக்கப்படுகின்றன. மனைவி அல்லது காதலியின் அருகாமையை இழந்து வெறுமையோடு வாழ்வதாகக் காட்டப்படுகின்றன.

தோற்றம் மட்டுமல்லாமல், அவர் நடிக்கிற ஆக்‌ஷன் காட்சிகளோடும் அந்த வார்ப்பு பொருந்தி நிற்கிறது.

மெக்கானிக், ட்ரான்ஸ்போர்ட்டர், பீகீப்பர், உளவாளி என்று அவரது பாத்திரங்களைக் காட்டினாலும், திரையில் பார்ப்பதென்னவோ அடிதடியைத் தான். அதில் தெரிவது ஜேசன் மட்டுமே.

அதனால், ‘அடுத்த படங்களில் எலக்ட்ரிஷியன், சேல்ஸ்மேன், பிளம்பர், விவசாயி, சானிடரி இன்ஸ்பெக்டர், கொல்லர் என்று பல  பாத்திரங்களில் தோன்றலாம்’ என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஹாலிவுட்டில் ஒருகாலத்தில் ஸ்டீவன் செகல் போன்ற நட்சத்திரங்கள் இது போன்று தொடர்ந்து ஆக்‌ஷன் படங்களில் மட்டுமே நடித்து வந்திருக்கின்றனர்.

சமகாலத்தில் கூட லையம் நீசனின் பல படங்கள் ஒரேமாதிரியான கதையமைப்பைக் கொண்டவையாகவே தென்படுகின்றன. அவர் நடித்த ‘டேக்கன்’ படத்தை நினைவூட்டுகிறது ஜேசனின் ‘தி வொர்க்கிங் மேன்’.

இப்படத்தின் திரைக்கதையை இயக்குநர் டேவிட் அயர் உடன் இணைந்து எழுதியிருக்கிறார் ஹாலிவுட் நட்சத்திரமான சில்வெஸ்டர் ஸ்டேலோன்.

நாற்பதுக்கு வயதுக்கு மேல் வழுக்கை தலையுடன் முதிர்ந்த தோற்றத்தில் ஒருவர் நாயகனாகத் தோன்றுவது நம்மூரில் எடுபடுமா என்று தெரியவில்லை.

திரையில் ஜேசன் ஸ்டேதம் போன்று கனகச்சிதமான கம்பீரத்துடன் தோன்றினால் அது சாத்தியமாகக் கூடும்.

குறைந்தபட்சமாக, ஒரு ஆக்‌ஷன் படத்தில் இதுவரை பின்பற்றி வரும் சில கிளிஷேக்களை கண்டறிந்து கடாசும் நோக்கத்திலாவது நம்மூர் ஆக்‌ஷன் பட இயக்குநர்கள், நாயகர்கள், இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் இப்படத்தைக் கண்டு ரசிக்க வேண்டும்.

ஸ்டண்ட் இயக்குநர்கள் இப்படத்தைப் பார்க்க இப்போதே துண்டு விரித்திருப்பார்கள் என்று நம்பலாம்.

‘தி வொர்க்கிங் மேன்’ படம் எத்தகைய வெற்றியைப் பெறும் என்று நம்மால் சொல்ல இயலாது.

ஆனால், ‘இப்படம் வந்தபிறகு ஜேசன் ஸ்டேதமைப் போல வருமா’ என்கிற குரல்களில் எண்ணிக்கை நிச்சயம் அதிகமாகும் என்று உறுதியாகச் சொல்ல முடியும்.

ட்ரெய்லருக்கு குவிந்த கமெண்ட்கள் அதற்கான ஒரு சோறு பதமாக இருக்கின்றன.

-மாபா

You might also like