யாருக்கும் நான் வெண்சாமரம் வீசியதில்லை!

சட்டப்பேரவையில் பொங்கிய எம்,ஜி.ஆர்

அதிமுக எனும் மக்கள் பேரியக்கத்தை ஆரம்பித்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். 1977-ம் ஆண்டு முதன் முறையாக முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தார். சூழ்ச்சியால் பதவி பறிக்கப்பட்டாலும் அதே அரியணையை 1980-ம் ஆண்டு மீண்டும் அலங்கரித்தார்.

இரண்டாம் முறை அவர் ஆட்சி செய்த காலக்கட்டத்தில், 1983-ம் ஆண்டு நவம்பர் மாதம், சட்டப்பேரவையில் தமிழக அரசு மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தன.

‘மத்திய அரசுக்கு எம்.ஜி.ஆர். வெண்சாமரம் வீசுகிறார் – அவருக்கு தமிழ் உணர்வு இல்லை’ என்றெல்லாம் எதிர்க்கட்சிகள், புரட்சித்தலைவர் மீது புழுதிவாறித் தூற்றின. புன்னகையோடு, அதனை கேட்டுக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர். நவம்பர் 15-ம் தேதி, பேரவையில், சுடச்சுட, பதில் அளித்தார்.

அதன் சுருக்கம் இங்கே:

‘’இராமச்சந்திரன் தலைமையில் இயங்கும் அமைச்சரவை மீது நம்பிக்கை இல்லை என்று பல கட்சிகள் தீர்மானம் கொண்டுவர முயன்றுள்ளனர். அவர்கள் சொல்லிய கருத்துகள், குற்றச்சாட்டுகள் 3 ஆண்டுகளுக்கு முன்பே பதில் சொல்லித் தீர்ந்துவிட்டவை.

விரைவில் தேர்தல் வரப்போகிறது – நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது பேசும் கருத்துகள், தேர்தலுக்கான விளம்பரமாக அமையட்டும் என்ற நினைப்பில், இதனைக் கொண்டு வந்துள்ளார்களோ என ஐயப்படுகிறேன்.

ஏன் அப்படி சொல்கிறேன்?

‘எந்தக் கட்சி, எந்த கட்சியோடு சேரப்போகிறது? எந்தக் கட்சிக்கு ஆதரவு கொடுக்கலாம்? என்பது பற்றித்தான் அதிகமாக இங்கே விவாதம் நடந்தது. நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது தொடர்புடைய கருத்துக்களைக் குறைந்த அளவுதான் சொல்லி உள்ளீர்கள்.

மத்தியில் எந்த ஆட்சி வந்தாலும் நான் ஆதரிப்பதாகக் குற்றம் சொன்னார்கள் – அவர்களை நான் ஒன்று கேட்க விரும்புகிறேன் – மத்தியில் ஓர் ஆட்சி உள்ளது – மாநிலங்களில் ஆட்சிகள் இருக்கின்றன – மத்திய ஆட்சியை ஆதரிக்காமல் சண்டையிட்டுக்கொண்டே இருக்க வேண்டுமா?

எந்த நிபந்தனையும் இல்லாமல் ஜனதாக் கட்சியை ஆதரித்தேன் என்றார்கள் – ஏன் ஆதரிக்கக் கூடாது?

உணவுக்கு வேலைத் திட்டம் கொண்டு வந்தார்கள் – ஆதரிக்கக்கூடாதா?கன்னியாகுமரியில் ரயில்பாதை அமைத்தார்கள் – ஆதரிக்கக்கூடாதா? இப்படி எவ்வளவோ சொல்லிக்கொண்டே போகலாம்.

வெண்சாமரம் வீசுகிறோம் என்று சொன்னார்கள் – எங்கே வெண்சாமரம் வீசுகிறோம் என்பது புரியவில்லை. நாடகத்திலே, சினிமாவிலே வீசி இருப்பேன் – ஏதாவது சினிமாவைப் பார்த்து விட்டு, தூங்கும்போது, கனவு கண்டிருப்பார்கள் –

இதுவரையில் நான் யாருக்கும் வெண்சாமரம் வீசியதில்லை – வீச விரும்பி இருந்தால் அறிஞர் அண்ணா ஒருவருக்குத்தான் வீசி இருப்பேன் – ஆனால் அண்ணா அதனை எதிர்பார்த்தவர் அல்ல – யாரும் தனக்கு வெண்சாமரம் வீசவேண்டும் என்று அவர் எண்ணியவர் அல்ல, அதனை ஏற்றுக்கொண்டவரும் அல்ல.

என்னைப்பற்றி தயவுசெய்து யாரும் தப்புக்கணக்கு போடாதீர்கள் – எனக்கு சட்டம் தெரியாமல் இருக்கலாம் – ஓரளவு படித்திருக்கலாம் – சட்ட நுணுக்கங்கள் தெரியாமல் இருக்கலாம் – ஆனால் மக்கள் மனதின் நுணுக்கங்கள், அவர்களில் உணர்வுகள் எனக்கு தெரியும் – அவர்கள் எதனை வேண்டுகிறார்கள் – எதை தேடுகிறார்கள் என எனக்கு தெரியும்’ என சட்டப்பேரவையில் பொங்கி எழுந்தார், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.

‘இன்னொன்றையும் சொல்கிறேன் – நான் அதிகம் பேசத்தயாராக இல்லை – இந்த ஆட்சியை பொறுத்தவரையில், மக்கள் ஆதரிக்கின்ற வகையில் நாங்கள் இருப்போம் – அதுவரை முதலாளித்துவத்தை எதிர்ப்போம் – சமத்துவம் வேண்டும் – அதற்காக உழைப்போம் – இதுதான் எங்கள் லட்சியம் ‘எனக்கூறி, தனது உரையை எம்.ஜி.ஆர். நிறைவு செய்தார்.

– பாப்பாங்குளம் பாரதி.

#எம்ஜிஆர் #அதிமுக #புரட்சித்_தலைவர் #mgr #admk #puratchi_thalaivar

You might also like