வாசிப்பின் ருசி:
லா.ச.ரா.வை வாசிக்கும்போதெல்லாம் இலக்குகளைப் பற்றிய கவலையற்று ஒரு வாசகன் பயணத்தை அனுபவிக்க வேண்டும் என்பதை அவனுக்குப் புரிய வைக்கவும், பயணம் தான் ஒரு வாசகன் அடையவேண்டிய (வாசிப்பின்) இலக்கு என்பதை தன் எழுத்துப்பாணியின் மூலம் வாசக மனத்தில் அனிச்சையாக நிறுவுவதிலுமே அவர் தன் படைப்புச் செயல்பாட்டை நிகழ்த்தினார் என்று தோன்றும்.
அபிதா அப்படி ஒரு குறு நாவல் தான். பயணமே அதன் இலக்கு. அதன் மொழிநடையே அது சொல்ல வருகிற செய்தி, அல்லது கொடுக்க நினைக்கிற தாக்கம்.
“நீ எங்க விட்டுட்டுப் போனியோ அங்கேயே தான் நிக்கிறேன்” என்கிற ரசமான காதல் அனுபவத்தை தமிழ் நாவலில் முதலில் தந்தது லா.ச.ரா.வாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
அந்த ஒருவரியை, உணர்வை ஜீவனாகச் சுமந்து எழுதப்பட்டதுதான் அபிதா.
அம்பி, மறக்க முடியாத தன் காதலியான சகுந்தலாவைப் பற்றிய நினைவை மீட்டெடுக்க மீண்டும் அவருடைய ஊருக்குத் திரும்புகையில், சகுந்தலைக்குத் திருமணமாகிவிட்டதென்றும் அவள் இறந்துவிட்டாள் என்றும் அறிகிறார்.
ஆனால், சகுந்தலையின் வீட்டில் அவளைப் போலவே இருக்கிற அவளுடைய மகள் அபிதாவைப் பார்த்ததும். சகுந்தலையே மீண்டும் பிறந்து வந்ததாகத் தோன்றுகிறது அவருக்கு.
சகுந்தலாவை எந்த வயதில் அம்பி விட்டுவிட்டுச் சென்றாரோ, அதே வயதில் அதே தோற்றத்தில் இருக்கிற அபிதாவைப் பார்த்து தன் பழைய நினைவுகளையெல்லாம் கற்பனையிலேயே மீட்டிப் பார்க்கிறார்.
அபிதா என்ன ஆகிறார், அம்பி என்ன ஆகிறார் என்பது மீதிக் கதை.
அபிதாவிலிருந்து கதை சொல்லல் முறையில் தமிழ் இலக்கிய உலகம், எழுத்துலகம் எவ்வளவோ முன்னேறிவிட்டது என்பது உறுதி. ஆனால் அபிதாவையோ, லா.ச.ரா.வையோ எதற்கு வாசிக்கவேண்டுமென்றால் அதன்/அவரின் மொழிநடைக்கு, அதன் கவித்துவத்திற்கு.
உரைநடையை கவிதையாக்கியதில் லா.ச.ரா எழுதிய காலத்தில் லா.ச.ரா.வுக்கு நிகர் வேறொருவர் இல்லை என்றே சொல்லவேண்டும்.
ஆனால் அதற்குப் பிறகு ஒருவர் வந்தார். அவரும் லா.ச.ரா.விடமே சென்றுவிட்டார். பிரான்ஸிஸ் கிருபா, லா.ச.ரா. இருவரும் உரைநடையில் பெரும் அலங்காரப் பிரியர்கள். எழுத்து ஒவ்வொன்றிலும் இசை கொட்டும்.
கொட்டும் அந்த இசைதாம் இவர்களுடைய இலக்கு. இவர்களது பாணி. இவர்களது பயணம்.
அந்த இசைமயமான எழுத்திற்காக லா.ச.ரா.வை வாசித்துத்தான் ஆகவேண்டும்.
மற்றபடி தமிழிலக்கியம் இந்த விதமான கதை சொல்லல் முறையிலிருந்து பெரும் பரிணாம வளர்ச்சியை அடைந்துவிட்டது. ஜெயமோகனின் குமரித்துறைவி ஏனோ நினைவுக்கு வருகிறது.
காதலும், காதல் பிரிவும், மொழியின் மீது தீராத தாகமும், காதலும் கொண்டவர்கள் வாசிக்கலாம்.
பல்வேறு பதிப்பகங்கள் பதிப்பித்திருக்கிறார்கள். இணையத்தில் தேடி பிடித்த பதிப்பகத்தில் வாங்கிக்கொள்ளுங்கள்.
– நன்றி: பிரபாகரன் செல்வராஜ்