ஞாநி என்ற பெயரால் அறியப்படும் ஞாநி சங்கரன் 1954-ம் ஆண்டு ஜனவரி மாதம் 4-ம் தேதி செங்கல்பட்டில் பிறந்தார். பால்யத்திலயே அரசியல், சமூக செயல்பாடுகளில் வெளிப்படையான கருத்துகளுடன் களச்செயல்பாட்டாளராக வெளிப்பட்டவர்.
செங்கற்பட்டு புனித சூசையப்பர் பள்ளியில் 11-ம் வகுப்பு வரை படித்தார். பள்ளிக்கூடத்தில் படித்தபோதே ஆசிரியர் வேணுகோபாலின் தூண்டலினால் கையெழுத்துப் பத்திரிகை ஒன்றையும் தயாரித்து வந்தார். இவரது தந்தை வேம்புசாமியும் கூட ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் பத்திரிகையாளராக பணியாற்றியவர்.
அப்போதே பேச்சு, எழுத்து, நாடகம் ஆகியவற்றில் பங்கெடுத்துக்கொண்டவர். பின் சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் மேற்படிப்பைத் தொடர்ந்த அவர் தமிழ்ப்பேரவை செயலாளராக இருந்தார்.
1971-ம் ஆண்டு, காமராஜர்-ராஜாஜி-சோ ஆகியோரின் கூட்டணியை எதிர்த்தும், இந்திரா காந்தி – கருணாநிதி கூட்டணியை ஆதரித்தும் பிரசாரம் செய்தார்.
2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து போட்டியிட்டார் ஞாநி.
இதில் தோல்வியைச் சந்தித்த அவர் பின்னாளில் ஆம் ஆத்மிக்கு உடல் நலம் சரியில்லை என்று விமர்சித்து கட்சியிலிருந்தும் விலகினார்.
நாடகங்களுக்குகாக பரீக்ஷா என்ற நாடகக் குழுவை நடத்தி வந்தவர். ஜனரஞ்சக நாடகங்கள் மிகுந்திருந்த காலத்தில் நவீன நாடகங்களை மேடையேற்ற முக்கியமான நாடகக் குழுவாக பரீக்ஷா இருந்தது.
ஞாநி இக்குழுவுக்காக பலூன், வட்டம், எண் மகள், விசாரணை, சண்டைக்காரிகள் போன்ற நாடகங்களை எழுதி இயக்கினார்.
சில காலம் இடைவெளி கண்ட இந்தக் குழுவின் இயக்கம், கடந்த சில ஆண்டுகளாக மீண்டும் உயிர்பெற்றுள்ளது. பரீக்ஷா சார்பில் சென்னையில் நாடங்கள் அரங்கேறியுள்ளன.
இலக்கிய விவாதங்களுக்காக கேணி என்ற அமைப்பை ஏற்படுத்தி தனது வீட்டிலேயே பல கூட்டங்களை நடத்தியவர். கோலம் என்ற அமைப்பை நிறுவி அசோகமித்திரன் சிறுகதைப் போட்டியை 2018-ல் நடத்தினார்.
ஆண்டு தோறும் இந்த பரிசை அளிக்க எண்ணிய அவர், முதல் ஆண்டு பரிசு வழங்கும் விழாவிலேயே முன்னுதாரணத்தை அளித்துச்சென்றார். விருது விழாவில் பரிசு பெற்ற இளம் சிறுகதையாளர்கள் அனைவருக்கும் அசோகமித்தரனின் சிறுகதைகள் மொத்தத் தொகுப்பையும் பரிசாகக் கொடுத்தார்.
அத்துடன் பரிசு பெற்ற சிறுகதைகள் அனைத்தையும் சிறு நூலாக வெளியிட்டு இலவசமாக விழாவுக்கு வந்தவர்களுக்கு வழங்கினார்.
ஓவியத்திலும் நாட்டம் கொண்டவர் ஞாநி. அவரது பாரதியின் முகச்சித்தரம் இப்போது இளைஞர்களின் டீ-சர்ட் வரை புகழ்பெற்றுள்ளது. இந்த ஓவியத்தின் சாயலுடன் கூடிய பாரதியின் முகச்சித்திரத்தை ட்ராஸ்கி மருது பிற்காலத்தில்தான் வரைந்துள்ளார்.
திரைத்துறையிலும் ஈடுபாடு கொண்டிருந்த ஞாநி, அய்யா என்ற பெயரில் பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை குறும்படமாக எடுத்தவர். ஜேம்ஸ் இப்போது என்ன செய்ய வேண்டும் என்ற மற்றொரு குறும்படத்தையும் எடுத்திருக்கிறார்.
ஞாநி அவரது விரிவான வாழ்க்கை அனுபவங்களை எழுத்தில் பதிவுசெய்ய வேண்டும் என்று அவரது நீண்டகால நண்பர் பாஸ்கர் சக்தி தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறார்.
எழுதிவிடுவதாக அவருக்கு ஒவ்வொரு முறையும் நம்பிக்கை கொடுத்து வந்த ஞாநி, அந்த நம்பிக்கை பூர்த்தியாகாமலேயே காலத்தில் கலந்திருக்கிறார்.
ஞாநி இச்சமூகத்திற்கு அளித்த கொடை அவருடன் பழகிய பல்துறை வல்லுநர்களால் ஒவ்வொரு காலத்திலும் பதிவாகும் என்பதில் சந்தேமில்லை.
- நன்றி: சமயம் இதழ்