புத்தகத் திருவிழாவும் புதிய படைப்பாளிகளும்!

இந்தத் தலைப்பு வெறும் சொல்லுக்குள் அடங்கிவிடும் முறையில் எழுதப்படவில்லை. எழுதுகிறவர்களுக்கும் எழுதப்போகிறவர்களுக்கும் சொல்ல முனைந்த மதிப்புரை தான் .

சென்னை புத்தகத் திருவிழா வரும் போதெல்லாம் புதிய வகையான புத்தகங்கள் அறிமுகமும் எழுத்தாளர்களின் புதிய பரிணாமங்களும் வெளிப்படுத்துவது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

ஒரு புத்தகம் என்ன செய்யும் என்பதை, அது வாசகர் பரப்பில் சென்றடையும் வரைக்கும் அதன் காத்திரமான எந்த விமர்சனங்களும் ஒருமித்த நிலையினை அடைந்து விடாது என்பதை எல்லா படிப்பாளிகளும் அறிவார்கள்.

ஒரு எழுத்தாளர் அல்லது படைப்பாளி வாசகனாக இருந்து தான் படைப்பாளியாக மாறுகிறார். வாசக மனநிலையில் தான் எல்லாப் படைப்புகளும் ஒன்று சேருகிறது.

ஒரு வாசகன் எழுத்துக்களுக்கு மேலிருக்கும் அளப்பரியான ஆவல் அவரை இன்னொரு தளத்திற்குள் கொண்டு வந்து நிற்க வைக்கிறது அல்லது வைத்து விடுகிறது. அதுவே அவருடைய படைப்பின் ஊட்கிடமான பொருளாக அமைந்து புதிய படைப்பாக்கத்தை உருவாக்கி விடுகிறது.

புத்தகத்தை உருவாக்கும் படைப்பாளிகள் புது வகையான யுத்தி முறைகளைப் பயன்படுத்தி பல்வேறு விதமான படைப்புகளை எழுதிக் கொண்டு இருக்கிறார்கள்.

சிறார் இலக்கியப் படைப்புகள் தற்போது பெருகி வரும் நிலையில் கார்ட்டூன் சார்ந்த கதை வெளியும் அதிக பெருக்கமும் வேண்டியது உள்ளது.

அதே நேரத்தில் நேர்மை தன்மையும் வேண்டியது இருக்கிறது.

எழுத்தாளர் உதயசங்கர் இதனை சரியான முறையில் செய்து கொண்டிருக்கிறார். குழந்தை மன உலகம் உணர்ந்து எழுதும் சிறந்த படைப்பாளி.

நாடகப் பனுவலாக்கம் மிக சொற்பமான முறையில் சென்று கொண்டிருக்கிறது. கே.ஏ. குணசேகரன், வெளி. ரங்கராஜன், கருஞ்சுழி ஆறுமுகம், வேலு. சரவணன், ச. முருகபூபதி போன்றவர்களைத் தாண்டி நாடக ஆக்கம் வரவேண்டியது உள்ளது.

கவிதை பனுவலுக்கு என்று நேயர்கள் இருக்கிறார்கள். கவி மனம் பித்துக்கொண்ட இவர்கள் அதைத் தேடிக் கண்டுபிடித்துக் கொள்கிறார்கள்.

சக்தி ஜோதி, உமா மகேஸ்வரி, யவனிகா, மு.முருகேஷ், றாம் சந்தோஷ், மதார், முருக சுந்தரபாண்டியன், கவிதைக்காரன் இளங்கோ, வெய்யில், கதிர் பாரதி, இப்படி ஒரு பட்டியலுடைய தொடர்ச்சி வந்து கொண்டுள்ளது.

கவிஞர்களுடைய ஆழ்மன வெளிப்பாட்டை நுட்பம் போன்ற இணையதளங்கள் மீட்டுருவாக்கம் செய்து கொண்டிருக்கிறது.

அடுத்து ஆய்வு தளம் சார்ந்து கட்டுரைகளும் ஆய்வாளர்களும் பெருகிக்கொண்டே இருக்கின்றார்கள். இவர்களே மிக முக்கியமாக எழுத்துலகிற்கு தேவைப்படுபவர்கள். ஒரு புனைகதை ஆசிரியர் எழுதியிருக்கும் கட்டுரைக்கும் ஆய்வாளர்கள் எழுதும் கட்டுரைக்கும் வேறுபாடுகள் அதிகம் உள்ளன.

ஒரு எழுத்தாளர் எழுதும் கட்டுரையில் கதை வெளிப்போக்கு அமைந்திருக்கும். இது ஆய்வு கட்டுரையே அல்ல. அது மதிப்பீடு அல்லது மதிப்புரை சார்ந்தவை தான்.

ஆய்வு முறைகள் நுட்பமான உத்திகளைக் கொண்டது. கதையோ அல்லது பண்பாட்டுப் பொருள் அடையாளங்களோ ஏதோ ஒரு புள்ளியின் இருந்து நமக்கு பதிலியாகச் செயல்படும். இதனை படைப்பாசிரியர் கையாண்டு இருப்பதைத் தேடிக் கண்டடைந்து கூற வேண்டிய பொறுப்பு ஆய்வாளரிடம் இருக்கிறது.

மேலும், ஒரு கதையின் பின்புலம் (புறம்) எவ்வாறாக உருவாகியிருக்கும் என்பதைச் சொல்லக்கூடிய நிலை ஆய்வாளர்களுக்கு கூடுதலாகச் சாத்தியப்படுகிறது.

ஒருதலை சார்புத் தன்மை என்பது ஆய்வாளர்களுக்கு இருக்கக் கூடாது. அது நேர்மையைக் குறைத்து விடும். படைப்பை சரியான முறையில் இனங்காண முடியாமல் போய்விடும்.

ஆய்வாளர்கள் தேவையால் மட்டுமே இலக்கிய உலகத்தின் வகைமைக் கோட்பாடுகளைச் சரியான முறையில் சொல்ல முடிகிறது.

ஆய்வு வெறும் பிற்போக்குத்தனமானவை அல்ல. மிக நுட்பமான பண்பாட்டு வெளிகளோடு கொண்டு விளங்குவதை நாம் அனைவரும் அறிய வேண்டியது உள்ளது.

எல்லா புனைகதைகளுக்குள்ளும் அல்லது இலக்கிய வெளிகளுக்குள்ளும் பொருள் பொதிந்த அமைப்பில் எழுதும் நுட்ப உத்திகளைக் கையாண்டு சொல்லும் தரமான ஆய்வாளர்கள் இன்னும் அதிகம் தேவை என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும்.

புனைகதை மேல் விருப்பம் இருக்கும் நேயர்களுக்கு பசி தாகம் தீர்க்க பல்வேறு படைப்புகள் புதுயுக நோக்கத்தோடு உருவாக்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

ஒரு எழுத்தின் மேன்மையான வாழ்க்கை என்பது அதை உருவாக்கி வைத்திருக்கும் வரையில் முடிந்து விடுகிறது. அதன் அடுத்த நிலை புத்தகமாக உருவாக்கப்படுவதில்லை. பதிப்பகம் சென்று அது வெளிவரும் நிலையில் முழுமை அடைகிறது.

எழுத்துக்களை கையாள தற்போதைய காலம் வசதி வாய்ப்புகளைப் பல பெருகி வைத்திருக்கிறது.

இணையதளத்திலும் அதிகம் பகிரப்படக்கூடிய நிலையில் வந்துள்ளமையால் தரம் காண வேண்டிய சூழலும் வர வேண்டியது உள்ளது. அதிக விற்பனையான புத்தகம் தரமானவையாக ஏற்றுக் கொள்ள முடியாது.

ஒரு புத்தகத்தின் நோக்கம் எந்தத் தள அமைப்பில் உள்ளவர்களுக்கு எழுதப்படக்கூடியது என்கிற தரக்கட்டுப்பாடு வைத்து எழுதுதல் வந்த நிலையில், எழுத்துக்களைச் சரியான முறையில் காட்டப்பட வேண்டியதும் உள்ளது.

காலத்திற்கு ஏற்ப புத்தகங்கள் காலத்தின் முன் படைக்கப்படுவதும் காலம் காலமாக நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒருமுகப்படுத்தப்பட்ட இலக்கிய வகைகளை அமைத்து விடுகிறது.

தொடர்ந்து காலத்தின் மேல் வைக்கப்படும் அனைத்து புத்தகங்களும் நல்ல விமர்சகர்களால் முன்னிலைப்படுத்தப்படுகிறது.

தற்போது பதிப்பகங்கள் பெருகி இருக்கக்கூடிய நிலையில் ஒரு புத்தகத்தின் உருவாக்குவதற்கான மெனைக்கெடல்களும் அவர்களுக்கு இருக்கத்தான் செய்கிறது.

அந்த அடிப்படையில் இந்த சென்னை புத்தகத் திருவிழா புதிய படைப்புகளை வரவேற்பதும் பழைய படைப்பாளிகளை வாழ்த்து கூறுவதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

– மா.ச. இளங்கோமணி, கல்லூரிப் பேராசிரியர்.

You might also like