பெண் கல்வியின் முன்னத்தி ஏர் சாவித்திரி பாய் பூலே!

ஒரு பெண்ணாக இன்று பொறியாளராகவோ, மருத்துவராகவோ, ஆசிரியராகவோ ஏதோ ஒரு துறையில் படித்து முன்னுக்கு வந்தவராக நீங்கள் இருக்கிறீர்கள் என்றால், நீங்கள் ஒருவருக்கு நிச்சயமாகக் கடமைப்பட்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

அக்காலகட்டத்தில் இந்தியச் சமூகத்தில் குலக்கல்வி முறையே கல்வியாக இருந்தது. அது மூடநம்பிக்கையும் பிற்போக்குத்தனங்களையும் உயர்த்திப் பிடிக்கும் கல்வி முறையைக் கொண்டதாக இருந்தது.

அப்படியிருக்கும் கல்விமுறையில்கூட உயர்சாதி ஆண்கள் மட்டுமே பயில முடியும். பெண்களின் நிலையோ நரபலிகள், உடன்கட்டை ஏறுதல், கைம்பெண் மறுமண மறுப்பு என்ற ஆதிக்கங்களால் பெண்கல்வி மற்றும் பெண்ணுரிமை மறுக்கப்பட்டுவந்தன.

அந்த ஆதிக்க மனநிலைக்கு எதிராக அறிவென்னும் கல்லை ஓங்கி ஒருவர் எறிந்தார். அது சமத்துவச் சலனங்களை உண்டாக்கி, கல்வியைப் பெண்களிடமும் கொண்டு சேர்த்தது. அந்த ஒருவர்தான் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியரான ‘சாவித்திரி பாய் பூலே.’

கல்வியை அனைவருக்கும் மறுக்கும் ஆதிக்க அதிகாரத்தை உடைத்து ஆங்கிலக் கல்வி முறை 1813-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது.

அதிலிருந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு 400 பேர் கொண்ட கிராமத்தில் 18 ஆண்கள் மட்டுமே கல்வி கற்றனர் என்றொரு புள்ளி விவரம் சொன்னது. அதில் ஒரு பெண்கூடக் கிடையாது என்பது முக்கியச் செய்தி.

குலக்கல்வியின் தாக்கமும், இஸ்லாமிய மதராசக்களின் தாக்கமும் ஆங்கிலக் கல்வி முறை வந்த பின்னரும் கல்விக்கு எதிராக பெண்களை இரும்புச் சங்கிலி போட்டது. அந்த அடிமைச் சங்கிலியை 1848-ம் ஆண்டு உடைத்தெறிந்தார் சாவித்திரி பாய் பூலே.

தனது 17-ம் வயதில் கணவர் மகாத்மா ஜோதிபா பூலேவின் உதவியுடன் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியாரானார். உயர்சாதி ஆண்களால் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்களையும், தன் இளம் வயதில் முதியவர்களுக்கு மண முடிக்கப்பட்டுக் கைம்பெண்ணான 75 பெண்களைக் கொண்டு பூனாவில் தனது முதல் பள்ளியை 1848-ல் தொடங்கினார் .

இந்தச் சமூகம் அவர் ஆசிரியை பணி செய்வதை சுமுகமாகச் செய்துவிட அனுமதிக்கவில்லை. அவர் காலையில் பள்ளிக்கு நடந்து வருகையில் விலங்குகளின் கழிவுகள், அழுகிய முட்டை போன்ற குப்பைகளை அவர் மேல் கொட்டி பள்ளிக்கு அவரை வரவிடாமல் தடுத்தனர்.

இந்த எதிர்ப்புகளால் மனம்தளராத சாவித்திரி பாய் அதற்காக ஒரு மாற்றுச் சேலையை எப்போதும் தன் பையில் வைத்திருந்தார் பள்ளி வந்தவுடனே அதை மாற்றிவிட்டு கல்வி சேவையைத் தொடர்ந்தார்.

ஏட்டுக்கல்வியைத் தாண்டி கைவினைப் பொருள்கள், ஓவியம், தையல் என்று பன்முகத் திறமைகளைக் கற்றுத்தந்தார்.

இதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் பல பொய் வழக்குகள் அவர் மேல் தொடரப்பட்டன. அந்த அவதூறுகளை தன் கணவர் ஜோதிராவ் பூலேவோடு இணைந்து, சத்தியசோதக சமாஜ் என்கிற அமைப்பை ஏற்படுத்தி தைரியமாக வென்றெடுத்தார்.

1852-ம் ஆண்டு அவரது பள்ளி மாணவமணிகளின் எண்ணிக்கை 150 ஆகவும், 1854-ம் ஆண்டு 200-ஐயும் எட்டியது. ‘பாலஹத்திய பிரதி பான்கட் கிரஹா’ என, கைவிடப்பட்ட பெண்களுக்காக இல்லம் ஒன்றையும் நடத்தினார். 1890ஆம் ஆண்டு பம்பாய் பகுதிகளில் பிளேக் (Plague) நோய் பரவியது.

பல சாமானிய மக்கள் அந்தக் கொள்ளை நோய்க்கு பலியானார்கள். அதில் பாதிப்படைந்த தீண்டப்படாத மக்களின் குழந்தைகளுக்கு மருத்துவர்களே சிகிச்சை தர மறுத்தனர்.

அப்படி சிகிச்சை மறுக்கப்பட்ட 200 குழந்தைகளைத் தனது கல்விச் சாலைக்கு அழைத்துச் சென்று, அவர்களைத் தொட்டு மருந்திட்டு ஒரு நல்ல ஆசிரியருக்கு முன்னுதாரணமாக சமூகக் கடமையைச் செய்தார் சாவித்திரி. பின்னாளில் அதே நோயால் தாக்கப்பட்டு மறைந்தார்.

அவர் இறந்து பல ஆண்டுகள் கழித்து ’காவியா பூலே’ என்னும் நிகழ்ச்சி, அவரிடம் படித்த மாணவர்களால் நடத்தப்பட்டது. அதில் சாவித்திரிபாய் எழுதிய கவிதை நூல் வெளியிடப்பட்டது.

அந்த புத்தகத்தின் முன்னுரையிலே அவரது வாழ்க்கையின் பெரும்பங்கை உணர்த்தும் விதமாக ஒரு செய்தி இருந்தது. அது அவர் ஆசிரியர் ஆனது மட்டுமல்லாமல் தன்னிடம் படித்த 417 மாணவர்களை ஆசிரியர்களாக உருவாக்கியிருக்கிறார் என்பதே.

அன்றைய காலகட்டத்தில் உயர் சமூகம் என்று சொல்லப்படுகிற சமூகத்தில் பிறந்தால்கூட மனுசாஸ்திரப்படி பஞ்சமர்களுக்கும் கீழானவள் பெண் என்னும் நிலையே இருந்தது.

அத்தகைய காலகட்டத்தில் அதற்கு எதிராகப் போராடிக் கல்வி பயின்று, பள்ளி தொடங்கி, தனது வாழ்நாளையே அர்ப்பணித்துக் காவியமான சாவித்திரி பாய் பூலே, இந்தியப் பெண்கல்வியின் முன்னத்தி ஏர்!

நன்றி: ஆனந்த விகடன்

You might also like