மனங்களை மயக்கிய சென்னை ஓவியக் கண்காட்சி!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஓர் ஓவிய கண்காட்சியைப் பார்க்கும் வாய்ப்பு. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆர்ட் ஹவுஸில் ‘குரு சிஷ்யன்’ என்ற ஓவியக் காட்சி. 2 சீனியர்கள், 2 ஜூனியர்களின் ஓவிய அணிவகுப்பு. நான்கு பேருடைய ஓவியங்களிலும் மாறுபட்ட களங்கள், நிறங்கள்.

ஓவியர் கிருபானந்தம் ஓவியங்களில் மாடுகள் கூட்டம் கூட்டமாக மேய்கின்றன. அதன் கொம்பும் தலையும் தொன்மங்களின் அடையாளம்போல முக்கோண வடிவில் கூர்மையாக இருக்கின்றன.

கருப்பு வெள்ளையில் மாடுகள் கூட்டமாக இருப்பது போன்ற ஓவியம் நம்மைக் கவர்கிறது.

மஞ்சள், சிவப்பு, இளம்பச்சை நிறங்களில் மிக நேர்த்தியான அரூப ஓவியங்களைத் தந்திருக்கிறார் கிருபானந்தம்.

அரூப மற்றும் நீர்வண்ண ஓவியங்களைக் காட்சிக்கு வைத்திருக்கும் திருநாவுக்கரசு, பழைமையை வெளிக்காட்டும் சன்னமான வண்ணங்களைப் பயன்படுத்துகிறார்.

பரதம் ஆடும் ஒரு பெண்ணின் ஓவியம் அற்புதம். பரபரப்பான நகரங்களில் தெரியும் கட்டடங்களின் காட்சியை மிக தத்ரூபமாக நீர்வண்ணங்களில் தீட்டியிருக்கிறார்.

பார்ப்பதற்கு கவித்துவமாக இருக்கிறது. நாமும் அந்த தெருவில் நிற்பதைப் போன்ற உணர்வு.

பெங்களூருவில் பணியாற்றும் விஜயகாந்த், விகடனில் பணியாற்றும் பாரதிராஜா இருவரது ஓவியங்களும் தனித்தனியான ராகங்களைப் பாடுகின்றன.

மஞ்சளும் சிவப்பும் கட்டிப்புரளும் பிரம்மாண்ட சேவல்களை வரைந்திருக்கிறார். கிராமிய அடையாளங்களை கருப்பொருளாக பயன்படுத்துகிறார் பாரதிராஜா.

ஓவியர் விஜயகாந்துக்கு கருப்பு வெள்ளையில் காதல். பரதம் ஆடும் பெண்கள்தான் அவருக்குப் பிடித்தமானவர்களாக இருக்கிறார்கள். பல்வேறு நடன அசைவுகளை கருப்பு வெள்ளையில் வரைந்துள்ளார். பசுந்தளிராக துளிர்த்திருக்கும் மரங்களை அவர் வண்ணங்களில் பார்த்திருக்கிறார்.

வெயில் தெரியாத வெண்மேகங்கள் அலையும் வானம். லேசாக குளிரும் நண்பகல். பனித்தூறலாக சிறு மழை. புதிய ஆண்டு தொடங்கும் மார்கழி நாட்களில் ஓர் ஓவியக் காட்சியைப் பார்த்து ரசித்தது மனசுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

– சுந்தரபுத்தன்

You might also like