விடைபெற்றார் ‘பொருளாதார மேதை’ மன்மோகன் சிங்!

மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 92. அவருடைய மறைவுக்கு அரசியல் மற்றும் உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்தச் சூழலில் அவருடைய பின்னணியைப் பார்க்கலாம்.

யார் இந்த மன்மோகன் சிங்?

மன்மோகன் சிங், 26 செப்டம்பர் 1932 அன்று பஞ்சாப்பில் பிறந்தார். தனது உயர்க் கல்வியை பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் தொடங்கினார். 1952 மற்றும் 1954-ம் ஆண்டுகளில் பொருளாதாரத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களைப் பெற்றார்.

அங்கிருந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்குச் சென்ற அவர், 1957இல் பொருளாதார டி.ஃபில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1962இல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் டி.ஃபில் பட்டம் பெற்றார். 1971ஆம் ஆண்டு வர்த்தக அமைச்சகத்தில் பொருளாதார ஆலோசகராக அவரது அரசியல் வாழ்க்கை தொடங்கியது.

அதைத் தொடர்ந்து அவர் தலைமைப் பொருளாதார ஆலோசகர் மற்றும் நிதி அமைச்சகத்தின் செயலாளர் போன்ற முக்கிய பதவிகளை வகித்தார்.

1987-1990 வரை ஜெனீவாவில் உள்ள UNCTAD செயலகத்தில் பணியாற்றிய பிறகு, அவர் தெற்கு ஆணையத்தின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

அடுத்து நிதி அமைச்சகத்தின் செயலாளர், திட்டக் கமிஷனின் துணைத் தலைவர், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர், பிரதமரின் ஆலோசகர் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் ஆகிய பதவிகளையும் வகித்தார்.

நரசிம்ம ராவ் ஆட்சியின்போது நிதியமைச்சர்

அதைத் தொடர்ந்து மன்மோகன் சிங் 1991ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நரசிம்ம ராவ் ஆட்சியின்போது அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வானார்.

நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் நிதியமைச்சராக இருந்தார். அதுவரை நிதியமைச்சர்களாக அரசியல்வாதிகளே செயல்பட்டுவந்த சூழலில், ராவ் தலைமையிலான அரசு, ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த மன்மோகன் சிங்கை மத்திய நிதியமைச்சராக்கியது.

பின்னர், 2004ஆம் ஆண்டில் இருந்து 2014ஆண்டு வரை இந்தியாவின் 14ஆவது பிரதமராக இருந்தார். 2019ஆம் ஆண்டு ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்குச் சென்ற அவரின் பதவிக்காலம் நடப்பாண்டு (2024) ஏப்ரல் மாதம் 3ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதைத் தொடர்ந்து அவர் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.

இந்தியாவை பொருளாதார சக்தியாக ஆக்க வழிவகுத்த மன்மோகன் சிங்

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3-ம் தேதி நடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது, டெல்லி தேசிய தலைநகர் பிராந்திய அரசு (திருத்த) மசோதா மக்களவையில் நிறைவேறியது. அப்போதுகூட, மன்மோகன் சிங் சக்கர நாற்காலியில் அவைக்கு வந்து மசோதாவிற்கு எதிராக வாக்களித்தார்.

தொடர்ந்து நாட்டிற்காக உழைத்த அவர் 1987இல் பத்ம விபூஷண், 1993ஆம் ஆண்டின் நிதி அமைச்சருக்கான யூரோ பண விருது, 1993 மற்றும் 1994 ஆகிய இரண்டிலும் ஆண்டின் நிதி அமைச்சருக்கான ஆசிய பண விருது மற்றும் 1995இல் இந்திய அறிவியல் காங்கிரஸின் ஜவஹர்லால் நேரு பிறந்த நூற்றாண்டு விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

அவரது கடின உழைப்பு மற்றும் அவரது பணிவு, மென்மையான நடத்தை ஆகியவற்றிற்காக அறியப்படும் மன்மோகன் சிங், தனது தொலைநோக்கு பார்வைக்காக மட்டுமல்லாமல், இந்தியாவை ஒரு பொருளாதார சக்தியாக ஆக்குவதற்கும் வழிவகுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • நன்றி: புதிய தலைமுறை
You might also like