கேரளாவின் மூத்த எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் காலமான அறிவிப்பு மனோரமா இணைய இதழில் பார்த்தேன்.
எம்.டி.வி தன் 91 வயதில் மறைந்திருக்கிறார். அவரைப்போல் இந்தியாவில் ஓர் எழுத்தாளர் வாழ்ந்திருக்க முடியாது. நிறை வாழ்வு அவருடையது. 2015-ல் துஞ்சன் பரம்பில் எம்.டி.வி அவர்களைச் சந்தித்தேன். ஒரு மணிநேரம் இருக்கும். அவரோடு உரையாடிக் கொண்டிருந்தேன்.
தமிழ் இலக்கியச் சூழல் குறித்து அவருக்கு முழுமையாகத் தெரியும். ஆனாலும், எனது பார்வையை தெரிந்துகொள்ள அவர் விரும்பியிருக்கலாம். எல்லாவற்றையும் விட, ஒரே சந்திப்பில், தன்னோடு இருப்பவரை, நெருக்கமாக்கிக் கொள்கிற, கரிஷ்மேடிக் தன்மை அவரிடமிருந்தது.
ஆண்டுதோறும் துஞ்சன் பரம்பில் மலையாள இலக்கியத்தின் தந்தை, துஞ்சன் இராமாநுசன் எழுத்தச்சன் அவர்களது நினைவைப் போற்றும் நிகழ்வை நடத்திவந்தார் எம்டிவி.
அப்படி ஒரு நிகழ்வுக்கு தமிழ்க் கவிஞர்களின் பிரதிநிதியாகப் சென்றிருந்தேன். மொழிபெயர்ப்பாளர், திசை எட்டும் ஆசிரியர் குறிஞ்சிவேலன் என்னை தேர்வு செய்திருந்தார்.
எண்ணெய் ஆட்டிப்பிழியும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் எழுத்தச்சன். கம்பர் இராமாயணத்தை தமிழில் எழுதியது போல், இவர் மலையாளத்தில் எழுதியுள்ளார்.
அன்றைய சூழலில் ஒரு பிற்படுத்தப்பட்டவர் ராமாயணம் போன்ற இதிகாசத்தை எழுத முடியாது என்பதால், கிளி ஒன்று சொல்ல தான் ராமாயணத்தை எழுதியதாக, ஒரு புனைவை அவர் உருவாக்கியிருந்தார்.
அப்படி ஒருவரைக் கொண்டாட, மலையாளத்துக்கு கிடைத்த ஆளுமை எம்.டி.வி.
துஞ்சன் பரம்பை மகா கலைக்கூடமாக உருவாக்கியிருப்பவர் எம்.டி.வாசுதேவன் நாயர். இந்தப் பணியில் நடிகர் மம்முட்டியும் எம்.டி.வியோடு இணைந்திருந்தார். அவருக்கு எம்டிவி மேல் மிகுந்த மரியாதை. மம்முட்டி, மோகன்லால் போன்ற ஸ்டார்களை நடிகர்களாக்கியவர் எம்டி.
சாகித்திய அகாடமி, ஞானபீடம் போன்ற விருதுகளைப் பெற்றவர். திரைப்படத்துறையில் இயங்கியதற்காக நான்குமுறை தேசிய விருதைப் பெற்றிருந்தார். இந்திய அரசு அவருக்கு பத்ம பூஷன் விருதளித்து கவுரவித்தது.
சிறுகதை, நாவல், கட்டுரை, சிறுவர் இலக்கியம், திரைக்கதை, வசனம், இயக்கம் என இலக்கியம், திரைத்துறை இவற்றின் அனைத்து பகுதிகளிலும் தடம்பதித்தவர் எம்.டி.வி.
மலையாள சினிமாவின் சிறந்த படங்களில் ஒன்றாகக் கருதப்படும் நிர்மால்யம் உட்பட 6 திரைப்படங்களை இயக்கியவர். அவரது முதல் நாவல் நாலுகட்டு வீடு, முதல்படம் நிர்மால்யம். முதல் முயற்சிகளிலேயிலேயே தேசிய விருதுகளைப் பெற்றார்.
நிந்தின் ஓர்மைக், ஒரு வடக்கன் வீரகதா, போன்ற அவரது படங்கள் காலத்தால் அழிக்க முடியாத காவியங்கள். கேரள நிலவுடமை சமூகத்தின் ஒளியையும் இருளையும் காட்டியவை.
தான் வாங்கிக் குவித்த விருதுகள் அனைத்தையும் எம்டிவியில் காலடியில் வைக்க விரும்பியவர் மம்முட்டி. சாதி, மதப் பாகுபாடுகளை, தன் கலைவடிவத்தால் களைந்தெறியும் முயற்சியில் தொடர்ந்து செயல்பட்டவர்.
எழுத்தாளர்கள் திரைத்துறைக்கு வரும்போது, சுயமரியாதையோடும் கம்பீரத்தோடும் இயங்க வேண்டும் என நம்முன்னே வாழ்ந்துகாட்டியவர் எம்டிவி.
தன் மண்ணின் மாபெரும் எழுத்தாளனுடைய மறைவை அனுசரிக்கிறது கேரளா. அவரது கரம்பிடித்து வளர்ந்த பிள்ளைகளுள் கரிகாலனும் ஒருவன்.
எம்.டி.வி ஒரு விளக்கு. தன்னை நெஞ்சில் ஏற்றிக் கொள்ளும் வாசகரின் மன இருளை அழிக்கும் விளக்கு. எல்லா காலத்திலும் மானுடத்தின் மாண்பைப் பிரகாசிக்கச் செய்யும் நித்திய ஒளி கூடிய விளக்கு .
- முகநூல் பதிவிலிருந்து…