அம்பேத்கரை தலித்துகளே ஏற்காத நிலைதான் இங்கு உள்ளது!

தொல்.திருமாவளவன் எம்.பி ஆதங்கம்

‘சேகுவேரா: ஒரு போராளியின் வாழ்க்கை’ நூல் வெளியீடு விழா:

ஜான் லீ ஆண்டர்சன் எழுதி, ஜெ.தீபலட்சுமி மொழிபெயர்ப்பில், பாரதி புத்தகாலயம் பதிப்பித்துள்ள ‘சே குவேரா ஒரு போராளியின் வாழ்க்கை’ எனும் 2 தொகுதிகள் கொண்ட நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமையன்று (டிசம்பர் -21, 2024) சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு தமுஎகச மூத்த தலைவர் ச.தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி நூலை வெளியிட, எழுத்தாளர் இரா.முருகவேள், அலோசியஸ் ஜோசப் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதன் சுருக்கம்:

அடையாள அரசியலை தகர்த்தெறியக் கூடிய பெயர் சேகுவேரா. சர்வதேச பார்வை கொண்டவராகவும், மக்களை பல நூற்றாண்டுகளாக சுரண்டி, ரத்தம் சிந்த வைக்கும் அற்ப தேசியவாதத்தை ஒழித்துக்கட்டுவதை லட்சியமாக கொண்டிருந்தார் சே.

இந்தியாவில் காங்கிரஸ் முன்வைத்த தேசியவாதம் வேறு; பாஜக வைக்கும் தேசியவாதம் வேறு. மொழி, இனம், மதத்தின் பெயரால் தேசியவாதம் முன்னிறுத்தப்படுகிறது. இவற்றுக்கு எதிராக சே இருந்தார்.

அம்பேத்கர் இயக்கங்களை இணைக்க செயல்திட்டம்:

தலித், பழங்குடிகளைப் பாட்டாளிகளாக அணுகி, அரசியல்படுத்தி, இடதுசாரி திசைவழியில் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு உள்ளது.

தலித் அமைப்புகளை சாதியவாதிகளாக விலக்கி வைப்பது; அடையாள அரசியலுக்கு உள்ளாகிறார்கள் என்று கூறி உறவாடுவதை தவிர்க்கக்கூடாது.

அம்பேத்கர் இயக்கத்தவர்கள் தன்னியல்பாக இடதுசாரிகளோடு இணைய வேண்டும்.

இடதுசாரிகளோடு தலித் மக்களை இணைய விடாமல் அத்தகைய இயக்கங்கள் தாக்கம் செய்கின்றன.

அதைத் தடுக்க வேண்டுமானால், அம்பேத்கர் பெயரில் செயல்படும் இயக்கங்களை இணைத்து செயல்பட செயல் திட்டத்தை வகுக்க வேண்டும்.

இடதுசாரி தேவை வரலாற்றுத் தேவை:

அம்பேத்கர் காலம் முதல் தலித் இயக்கங்கள் இடதுசாரிகளோடு இணைந்து செயல்படாதது ஏன் என்பதை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். மொழிவழி தேசியம் பேசும் இயக்கங்கள் குறுகிய பார்வை கொண்டவை என்று ஒதுக்கக்கூடாது.

இடதுசாரிகளின் தேவை வரலாற்றுத் தேவையாக மாறியுள்ளது. மக்களை அரசியல்படுத்தும் பொறுப்பு இடதுசாரிகளுக்கு உள்ளது.

ஏகாதிபத்தியத்தை எந்த வடிவில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும். இடதுசாரிப் பார்வை இருந்தால் தேசியவாத அரசியல், அடையாள அரசியல், சாதி, மத, மொழி அடையாள அரசியல் தகர்த்தெறியப்படும்.

எனவே, இடதுசாரி அரசியல் பார்வையை வலிமைப்படுத்துவதில் கூடுதல் அக்கறை செலுத்தினால்தான் வலதுசாரி அரசியலை வீழ்த்த முடியும்.

அடையாள அரசியலின் தாக்கம், தலித் சமூகத்தை சார்ந்தவர்களே அம்பேத்கர் எங்கள் தலைவர் இல்லை என்று கூறும் நிலை உள்ளது. அம்பேத்கரை ஏற்காதவர் எப்படி மார்க்சை ஏற்பார்?

மொழி அடையாள அரசியலால், வடமாநில தொழிலாளர்களை, சக தொழிலாளர்களை விரட்டும் நிலை உள்ளது.

இணைந்தே நிற்போம்!

மத தேசியவாதத்தை எதிர்ப்பதில் இடதுசாரிகள் மிக உறுதியாக நிற்கிறார்கள். பாஜக, சங்பரிவாரத்தை கொள்கை, கருத்தியல் ரீதியாக மிக உறுதியாக, மிக வலுவாக எதிர்ப்பவர்கள் இடதுசாரிகள். இதே அணுகுமுறையை பிற கட்சிகள் பின்பற்றவில்லை.

சங்பரிவாரத்தின் ஆபத்தை புரிந்துகொள்ள இடதுசாரிப் பார்வை தேவை. இடதுசாரிப் பார்வையை வளர்த்தெடுக்க வேண்டும்.

இடதுசாரி இலக்கியம் பெருக வேண்டும். சேகுவேரா போன்ற வரலாறுகளை இளம் தலைமுறையினரிடம் கொண்டு செல்ல வேண்டும்.

இடதுசாரிப் புரிதல் இருப்பதால்தான், எப்போதும் இடதுசாரிகளுடன் விடுதலைச் சிறுத்தைகள் இணைந்து நிற்போம் என்று உறுதியான நிலைப்பாடாக கொண்டுள்ளோம்.

களத்தில் கைகோர்த்து நிற்கிறோம். அது தொடரும் எனப் பேசினார்.

இந்நிகழ்வில் நூலை அறிமுகம் செய்து இந்திய மாணவர் சங்கத்தின் மத்தியக்குழு உறுப்பினர் எஸ்.மிருதுளா பேசினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், எழுத்தாளர்கள் ஜா.மாதவராஜ், பா.ஜீவசுந்தரி ஆகியோர் சிறப்புரையாற்றினர். மொழி பெயர்ப்பாளர் ஜெ.தீபலட்சுமி ஏற்புரையாற்றினார்.

முன்னதாக சிபிஎம் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா வரவேற்றார்.

தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் முன்னிலை வகித்தார். பாரதி புத்தகாலயம் க.நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

You might also like