நாம் பெரிதாகக் கேள்விப்பட்டிராத, கவனித்திராத, அதேநேரத்தில் வசீகரிப்பை ஏற்படுத்துகிற சூழலைத் திரைப்படங்களில் காண்கையில் மனம் சுவாரஸ்யத்தை உணரும்.
அந்தக் களம் தரும் புத்துணர்வே கதையும் காட்சியமைப்பும் பழமையாக இருப்பதை மறக்கச் செய்யும்.
கிட்டத்தட்ட அப்படியொரு நிலைக்கு நம்மை ஆளாக்குகிறது ‘ரைபிள் கிளப்’ மலையாளத் திரைப்படம். இதன் ட்ரெய்லர் சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி ஈர்ப்பை ஏற்படுத்தியது.
இப்போது கிறிஸ்துமஸ் வெளியீடாக தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.
‘ரைபிள் கிளப்’ தரும் திரையனுபவம் எப்படிப்பட்டதாக உள்ளது?
திருப்பம் உண்டாக்கும் ஜோடி!
மங்களூரைச் சேர்ந்த ஆயுத வியாபாரி தயானந்த் பரேவுக்கு (அனுராக் காஷ்யப்) இரண்டு மகன்கள். திடீரென்று நேரிட்ட அசம்பாவிதத்தினால், அவரது இளைய மகனை ஒரு காதல் ஜோடி தாக்கிவிட்டுச் செல்கிறது. அதில் அவர் உயிரிழக்கிறார்.
இதனிடையே, அந்தக் காதல் ஜோடியைத் துரத்திக்கொண்டு தயானந்தின் மூத்த மகன் பீரா (ஹனுமான்கைண்ட்) தனது ஆட்களோடு செல்கிறார். அந்த ஜோடி கண்ணூரில் உள்ள ஒரு ரைபிள் கிளப்புக்கு சென்றதை அறிகிறார்.
கண்ணூர் ரைபிள் கிளப்புக்கென்று ஒரு பாரம்பரியம் உண்டு.
ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்னதாக, திப்பு சுல்தான் காலத்தில் வெடிமருந்து கிடங்காக இருந்த இடம் அது.
அந்த ரைபிள் கிளப்பை நிறுவியவர்களில் ஒருவரான லோனப்பன் (விஜயராகவன்) இப்போதும் அதே பெருமிதத்துடன் வாழ்ந்து வருகிறார்.
ஆனால், அவரால் நடக்க முடியாது. காரணம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் காட்டுப்பன்றி தாக்கியதில் அவரது கால்கள் செயலிழந்ததுதான்.
அவரது மருமகன் ஆவரன் (திலேஷ் போத்தன்) அந்தக் கிளப்பை நடத்தி வருகிறார். ஒரு படத்தில் ஆக்ஷன் பாத்திரத்தில் நடிப்பதற்காக, அந்தக் கிளப்புக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி பெற வருகிறார் மலையாள நடிகர் ஷாஜகான் (வினீத் குமார்). அவருடன் சில நபர்களும் வருகின்றனர்.
அதனை அறிந்து, அந்த காதல் ஜோடியும் அந்த ரைபிள் கிளப்புக்கு வருகிறது. அவர்கள் இருவரும் ஏற்கனவே ஷாஜகானுக்கு அறிமுகமானவர்கள்.
அந்த ஜோடி ரைபிள் கிளப்பில் இருப்பதை அறிந்ததும், தனது ஆட்களுடன் நவீன ரகத் துப்பாக்கிகளை எடுத்துக்கொண்டு அங்கு நுழைகிறார் பீரா. அதேநேரத்தில், ஷாஜகானை அழைத்துக்கொண்டு காட்டுக்குள் பன்றியை வேட்டையாடச் செல்கிறார் ஆவரன்.
அதன்பிறகு என்னவானது என்று சொல்கிறது இப்படத்தின் மீதிப்பாதி.
இந்தக் கதையில் திருப்பத்தை உண்டாக்குவது அந்தக் காதல் ஜோடி தான். ஆனால், இடைவேளைக்குப் பிறகு அவர்களுக்கான முக்கியத்துவம் திரையில் குறைந்தே காணப்படுகிறது.
அதேநேரத்தில், அந்த ரைபிள் கிளப்பைச் சார்ந்த பாத்திரங்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் திரையில் வெகு ஸ்டைலிஷாக, ஆக்ஷன் நிறைந்ததாகக் காட்டப்பட்டுள்ளன.
நட்சத்திரக் கூட்டம்!
முன்னணி நட்சத்திரங்கள் இடம்பெறாதபோதும், ‘ரைபிள் கிளப்’ பார்க்கும் எந்தவொரு மலையாள ரசிகரும் ‘கூஸ்பம்ஸ்’ அடையலாம். அந்தளவுக்கு இப்படத்தில் ‘சினிமாட்டிக்’ மொமண்ட்கள் நிறைய இருக்கின்றன.
இதில் லோனப்பனாக விஜயராகவன், அவரது மகன் காட்ஜோ ஆக விஷ்ணு அகஸ்தியா, மருமகள் குஞ்சுமோளாக ‘ஹ்ருதயம்’ படப்புகழ் தர்ஷனா, மகள் சிசிலியாக உன்னிமாயா, ஆவரன் ஆக திலேஷ் போத்தன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இவர்கள் தவிர்த்து சுரபி லட்சுமி, சுரேஷ் கிருஷ்ணா, வாணி விஸ்வநாத், பிரசாந்த் முரளி, வினீத்குமார், ராஃபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அவர்களது நடிப்பு கனகச்சிதமாக அமைந்துள்ளது.
வில்லன் பீரா ஆக ராப் பாடகர் ஹனுமான்கைண்ட்டும், அவரது தந்தை தயானந்தாக இயக்குநர் அனுராக் காஷ்யப்பும் இதில் நடித்துள்ளனர்.
இவர்கள் தவிர்த்து சிலரும் இதில் தலைகாட்டியிருக்கின்றனர். அனைவருமே முன்னணி நட்சத்திரங்களாகத் திரையில் தெரிகின்றனர்.
இப்படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் என்று இரண்டு விஷயங்களைச் சொல்லலாம். முதலாவது தயாரிப்பு வடிவமைப்பாளர் அஜயன் சலிசேரியின் பங்களிப்பு, இரண்டாவது சுப்ரீம் சுந்தரின் சண்டைக்காட்சி வடிவமைப்பு. இரண்டுமே இப்படத்தின் யுஎஸ்பியை தீர்மானித்திருக்கின்றன.
‘டமால் டுமீல்’ என்று துப்பாக்கி சத்தத்துடன் சண்டைக்காட்சிகளை வடிவமைப்பது புதிதல்ல.
ஆனால், அப்படியொரு சண்டை நிகழ்கிற விதத்தை அருகில் இருந்து பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது இப்படம்.
இயக்குநர் ஆஷிக் அபு இப்படத்தின் ஒளிப்பதிவாளரும் கூட. அதனால், காட்சியமைப்பைத் தனது மனதுக்குப் பிடித்தாற்போலத் தீர்மானித்திருக்கிறார். அதனால், படத்தின் பட்ஜெட் குறித்த சிந்தனையே நம் மனதில் எழவில்லை.
படத்தொகுப்பாளர் சாஜன் எந்தக் காட்சியில், எங்கு அமைதி தென்பட வேண்டும் என்பதை அறிந்து காட்சிகளை அடுக்கியிருக்கிறார். அதுவே இப்படத்திற்கு ‘கிளாஸ்’ அந்தஸ்தை தந்துவிடுகிறது.
தொண்ணூறுகளில் நிகழ்வதாகச் சொல்லப்படுகிற கதை என்பதால், அந்த விஷயம் படத்தின் பின்னணி இசையிலும் பிரதிபலிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் ரெக்ஸ் விஜயனின் இசை படத்தில் சில மாயாஜாலங்களை நிகழ்த்தியிருக்கிறது.
படத்தில் காட்சிகள் புதிதல்ல என்றபோதும், ரைபிள் கிளப் எனும் களத்தையும் அதில் உறுப்பினர்களாகச் சில வித்தியாசமான ஆளுமைகளையும் திரையில் காட்டி சுவாரஸ்யத்தை தந்திருக்கிறார் இயக்குநர் ஆஷிக் அபு.
அதற்கு எழுத்தாக்கத்தைக் கையாண்ட ஷ்யாம் புஷ்கரன், சுஹாஸ், திலேஷ் நாயர் மூவரும் உறுதுணையாக இருந்திருக்கின்றனர்.
‘இது பாயிண்ட் 25, அடுத்து பாயிண்ட் 35 வரும்’ என்பது போன்ற சின்னச் சின்ன வசனங்கள் கூட கைதட்டி ஆர்ப்பரிக்கும் அளவுக்கு ‘ஷார்ப்’பாக இருக்கின்றன.
பொதுவாக, இது போன்ற ஆக்ஷன் படங்களில் ஆண் பாத்திரங்களுக்கே முக்கியத்துவம் தரப்படுவது வழக்கம். இதில் அதனை உடைத்தெறிந்திருக்கிறது படக்குழு.
வாணி விஸ்வநாத், உன்னி மாயா, தர்ஷனாவுக்கு என்று தனித்துவமான காட்சிகள், ஷாட்கள் இதில் குறைவு.
என்றபோதும், அவர்களது பாத்திரங்கள் நம் மனதோடு ஒட்டிக்கொள்வது அருமை.
இந்தப் படத்தில் விலங்குகளின் இறைச்சி குறித்த வர்ணனை சிலருக்கு ஏற்பற்றதாக இருக்கலாம்.
அந்தக் காட்சி சித்தரிப்பு அருவெருப்பை உண்டாக்கலாம். அவற்றைத் தாண்டி, இந்தப் படம் வித்தியாசமானதொரு கமர்ஷியல் படம் பார்த்த திருப்தியை நிச்சயம் வழங்கும்.
அதேநேரத்தில், இதன் கதையிலோ, திரைக்கதையிலோ மிகப்பெரிய ‘ட்ரெண்ட்செட்டிங்’ அம்சங்கள் இல்லை என்பதையும் சொல்லியாக வேண்டும்.
ரசிகர்கள் தியேட்டரில் கொண்டாடுகிற அளவுக்கு இப்படம் இருப்பது உண்மை. அது நிகழ, நீங்கள் ஆக்ஷன் பட பிரியராக இருக்க வேண்டும். இரண்டும் ஒன்றிணைந்தால், ‘ரைபிள் கிளப்’ தரும் அனுபவம் ‘வாவ்’ ரகத்தில் இருக்கும்..!
– உதயசங்கரன் பாடகலிங்கம்