டிசம்பர்-17: ரைட் பிரதர்ஸ் தினம்.
அமெரிக்காவைச் சேர்ந்த ‘ரைட் சகோதரர்கள்’ விமானத்தைக் கண்டுபிடித்த தினம் இன்று. ரைட் சகோதரர்கள் என அழைக்கப்படும் ஓர்வில் ரைட், வில்பர் ரைட் என்ற இருவரும் பல கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர்கள்.
இவர்களுக்கு முன் பலர் மேற்கொண்ட அரிய முயற்சிகளைக் கண்டு பிரமித்துப் போயிருந்தனர். அந்த முயற்சிகளால் பெறப்பட்ட அறிவைக்கொண்டு பல கோணங்களில் இருவரும் சிந்திக்கத் தொடங்கினர்.
அதன் தொடர்ச்சியாக 1899-ல் அவர்கள் வானில் பறப்பது பற்றி யோசிக்கத் தொடங்கினர். அவர்களது முயற்சியின் பலனாக 4 ஆண்டு உழைப்பிற்குப் பிறகு 1903 டிசம்பரில் விமானம் வானில் பறக்கத் தயாரானது.
அவர்களின் விடாமுயற்சியால் டிசம்பர் 17, 1903-ல், ரைட் சகோதரர்கள் தங்கள் கண்டுபிடித்த விமானமான ரைட் ஃப்ளையர், இதில் ஏறி ஓர்வில் ரைட், வில்பர் ரைட் முதன்முதலில் விமான பயணம் செய்தனர்.
உலகின் முதல் வெற்றிகரமான மோட்டார் இயக்கப்பட்ட விமானம் இதுதான்.
வட கரோலினாவில் உள்ள கிட்டி ஹாக்கில் வெற்றிகரமாக இருவரும் பறந்தனர்.
இந்த கண்டுபிடிப்பானது ரைட் சகோதரர்களை உலக முழுவதும் பிரபலமாக்கியது. இவர்களின் அசாத்திய திறமையை பெருமைப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் டிசம்பர் 17 ரைட் பிரதர்ஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
அவர்கள் கண்டுபிடித்த முதல் விமானம் 115 வது ஆண்டு நிறைவு செய்துள்ளது. இது விமான வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல் என்றே சொல்ல வேண்டும்.
ஓர்வில் மற்றும் வில்பர் ரைட் இன்றைய விமானங்களின் அடிப்படையிலான பல கண்டுபிடிப்புகளை உள்ளடக்கிய ஒரு முன்மாதிரியை அவர்கள் அன்று உருவாக்கி இருந்தனர்.
ஓர்வில் ரைட், வில்பர் ரைட் வரலாறு:
மில்டன் ரைட், சுசான் கேத்ரின் தம்பதியர்களுக்கு வில்பர் ரைட் 1867-ம் ஆண்டு இண்டியானாவில் உள்ள மில்வில்லே என்ற இடத்தில் பிறந்தார். ஒர்வின் ரைட் 1871-ம் ஆண்டு ஒஹையோவின் டேட்டன் என்ற இடத்தில் பிறந்தார்கள்.
இவர்களின் தந்தை 1878-ல் சர்ச் ஆஃப் தி யுனைடெட் பிரெத்ரென் இன் கிறிஸ்ட்டில் ஆயராக இருந்தார். அவர்கள் விளையாடுவதற்கு ஹெலிகாப்டர் பொம்மை ஒன்றை வாங்கித்தந்தார் தந்தை.
வான்வழி தொலையளவின் முன்னோடியான அல்ஃபோன்ஸ் பேனாட் என்ற பிரஞ்சு நாட்டவரின் கண்டுபிடிப்பு தான் அந்த ஹெலிகாப்டர்.
இந்த பொம்மை காகிதம், மூங்கில், கார்க்கு, இரப்பர் வளையம் ஆகியவற்றால் ஒரு அடி நீளத்திற்கு உருவாக்கப்பட்டிருந்தது.
இந்த பொம்மையுடன் இருவரும் அதிக நேரத்தை செலவிட்டனர். இதுதான் அவர்களை வானில் பறக்க ஆர்வத்தைத் தூண்டியது.
இவர்கள் இருவரும் உயர்கல்வி வரை படிப்பை முடித்திருந்தாலும் அதற்கான பட்டயங்கள் ஏதும் பெறவில்லை. வில்பர் ரைட் பனி சறுக்கில் விளையாடி கொண்டிருந்த போது அவருக்கு விபத்து ஏற்பட்டு முன் பற்கள் உடைந்தது.
வெளியில் வர கூச்சப்பட்ட அவர் வீட்டிலேயே இருக்க ஆரம்பித்தார். சில வருடம் வீட்டில் இருந்த வில்பர் சகோதரர் ஆலிவர் ரைட் வில்பரின் உதவியுடன் அச்சுக்கூடத்தை தொடங்கினார். இது மேற்கத்திய செய்திகள் என பெயரில் வெளிவந்தது.
இதற்கு ஆர்வில் வெளியிடுவோராகவும், வில்பர் ஆசிரியராகவும் இருந்தனர். காலப்போக்கில் நாளிதழாக மாற்றி ‘தி ஈவினிங் ஐடெம்’ என்ற பெயரில் வெளியிட்டனர்.
அதன் பிறகு சூழ்நிலை காரணமாக அந்த நாளிதழ் நான்கு மாதம் வரை வெளிவந்த பிறகு நின்று போனது.
அதன் பிறகு பல தொழில் செய்தாலும் 1896-ல் தொடங்கப்பட்ட ரைட் மிதிவண்டி நிறுவனம் மட்டுமே அவர்களுக்கு வருமானத்தைக் கொடுத்தது.
இந்த வருமானம் தான் அவர்களது ஆய்வுக்கு பெரும் உதவியாக இருந்தது.
அவர்களின் 4 ஆண்டு உழைப்பிற்குப் பிறகு 1903 டிசம்பரில் அவர்களது முயற்சி வெற்றி பெற்றது.
விமானம் கண்டுபிடிப்பது அவர்களது வாழ்க்கையின் லட்சியமாக கொண்டிருந்தனர். அதனால் ரைட் சகோதரர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
– யாழினி சோமு