சிவா இருக்குமிடத்தில் நிறையும் கலகலப்பு!

‘அ.. ஆ.. இ.. ஈ..’ என்று தமிழ் பாடம் எடுப்பது போல ஒரு நாயகனோ, நாயகியோ வசனம் பேசினால் நாம் சிரிப்போமா..? நிச்சயமாக இல்லை. ஒரு நகைச்சுவை நடிகரோ, நடிகையோ அப்படியொரு காட்சியில் இடம்பெறும்போது, கண்டிப்பாகச் சிரிப்பதற்கான சூழல் அதிலிருக்கும் என்ற எண்ணம் தோன்றும். அப்படி எதுவுமே இல்லாமல் ஒரு நாயகன் அது போன்றதொரு வசனத்தை உதிர்த்தால் நாம் சிரித்தே தீருவோம். அந்த நாயகனாக சிவா இருந்தால் மட்டுமே அது நிகழும். அப்படியொரு பிம்பத்தைத் தமிழ் ரசிகர்கள் மத்தியில் கட்டமைத்திருக்கிறார் சிவா. அதுவே அவரது பெரும்பலமாகவும் முக்கியமான பலவீனமாகவும் விளங்குகிறது.

சீரான முன்னேற்றம்!

சென்னையில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, பெருநகரத்திற்கே உண்டான கலவையான அனுபவங்களைப் பெற்று, அதிலிருந்து கிடைத்த உத்வேகத்தோடு வாழ்வின் அடுத்த கட்டத்தை அடைவதும், அதனைத் தக்க வைக்கும் முயற்சியில் ஈடுபடுவதும் ஒரு வகை தவம்.

பல துறைகளில் அப்படிப்பட்ட மனிதர்கள் இருந்தபோதும், திரையுலகைச் சேர்ந்தவர்கள் நம்மை எளிதாக வசீகரித்து விடுகின்றனர். அதிலொருவர் தான் நடிகர் சிவா. ரேடியோ மிர்ச்சி எஃப்எம் வழியாகச் சென்னை மக்களுக்கு அறிமுகமானவர்.

பத்தாவது வரை படிப்பு. அதன்பிறகு என்ன செய்யலாம் என்ற யோசனையோடு நிகழ்ந்த ஒரு தேடல். ஒருகட்டத்தில் தன்னிடமுள்ள நடிப்பார்வத்தை வெளிப்படுத்த இயல்கிற வாய்ப்புகளைத் தேடித் தேடிக் கண்டடைவது என்றிருந்த சிவா, இயல்பாகவே தான் சார்ந்த சமூகத்திற்குத் தொண்டாற்ற வேண்டும் என்கிற மனப்பான்மையையும் கொண்டிருந்தார்.

அந்த காலகட்டத்தில் நாடக நடிப்பு மட்டுமல்லாமல் சினிமாவில் கிடைத்த சிறு வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்கிற முடிவில் இருந்தார் சிவா. அதன் காரணமாக 12பி, ஆளவந்தான், விசில் ஆகிய படங்களில் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக இடம்பிடித்தார்.

அதேநேரத்தில், தான் செய்யும் எந்தவொரு விஷயமும் சுற்றியிருப்பவர்களைச் சிரிக்க வைக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார். அதற்கேற்ப அவரது நடிப்பு, பேச்சு, ரசனை என அனைத்தும் அமைந்தன.

அந்த அனுபவங்களே, சினிமா ஆர்வத்தோடு இருந்த சிவாவை ரேடியோ மிர்ச்சி எஃப்எம்மில் ’ரேடியோ ஜாக்கி’யாக ஆக்கியது. மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சிக்காக முதன்முதலாக ‘மைக்’ பிடிக்க வைத்தது. அன்று முதல் ரசிகர்களுக்கு அவர் ‘மிர்ச்சி’ சிவா ஆனார்.

ஹாலிவுட் சினிமாக்களை சென்னையில் உருவாக்கினால் எப்படியிருக்கும் என்கிற தொனியில் அமைந்த வாராந்திர சிறப்பு நிகழ்ச்சிக்காகவே, ஒரு கூட்டம் காத்திருக்கும் அளவுக்கு ‘ட்ரெண்டை’ உருவாக்கினார் சிவா. அவரது ‘மொக்க மோகன்’ துணுக்குகள், ‘காதலா காதலா’ நிகழ்ச்சியைக் கேட்டவர்களுக்கு, இன்று அவர் அடிக்கும் காமெடி பஞ்ச்களை கண்டு கேட்டு ரசிப்பதெல்லாம் ‘ஜுஜுபி’யாக தெரியும்.

பண்பலை வானொலிக்காக ‘ஸ்கிரிப்ட்கள்’ எழுதிய அனுபவம், அவரை முழுநீள நகைச்சுவைப் படம் உருவாக்க வேண்டுமென்ற உத்வேகத்தை அதிகப்படுத்தியது. அந்த காலகட்டத்தில், அவர் தமிழ் திரையுலகைச் சேர்ந்த பல விஜபிகளை சந்தித்து வந்தார். அதன் தொடர்ச்சியாகத் திரைப்படங்கள் சார்ந்த விழாக்களைத் தொகுத்து வழங்கும் வாய்ப்புகளைப் பெற்றார். ‘மன்மதன்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவைப் பாடகி சுசித்ரா உடன் சேர்ந்து சிவா தொகுத்து வழங்கியது இன்றும் நினைவில் இருக்கிறது.

மாதாந்திர சம்பளம், புதிய நண்பர்கள், புதிதாகத் திறந்த கதவுகள் என்று அதுவரை கண்டிராத இன்னொரு உலகைக் கண்டபோதும், தன்னிலையைத் தவறவிடாமல் தரையிலேயே இருந்தார் சிவா. அதுவே, சீரான முன்னேற்றத்தை அவர் தொடர்ந்து காணச் செய்தது.

ஒரு நிகழ்வில் எப்படிப் பேச வேண்டும், எதையெல்லாம் பேசக் கூடாது என்பதிலும் தெளிவு இருந்தது. அதுவே, அவரது கேலிகளையும் கிண்டல்களையும் கண்டு தொடக்கத்தில் ‘ஜெர்க்’ ஆகும் திரையுலகினரையும் பின்னர் ‘கூலாக’ இருக்கச் செய்தது. இன்றும் கூட, அதனைத் தனது பாணியாகவே பின்பற்றி வருகிறார் சிவா.

வானொலி, திரையுலக நிகழ்ச்சிகள் என்று மெதுவாகத் தனது நீள்வட்டப் பயணத்தை விரிவாக்கிய சிவா, 2007ஆம் ஆண்டு வெங்கட்பிரபு இயக்கிய ‘சென்னை 600028’ படத்தில் தோன்றி ரசிகர்களை மகிழ்வித்தார்.

இன்னொரு தொடக்கம்!

‘சென்னை 600028’ படமே நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது. அதனால், படம் முழுக்கச் சிரித்த முகத்தோடு வந்த சிவாவை நகைச்சுவையாளராக மட்டுமே நோக்கியவர்கள் பலர். உண்மையில், அந்த படத்தில் அவருக்கு ‘எமோஷனலான’ காட்சிகள் அதிகம் இருந்தது. ஆனாலும், விதி வலியதாகிப் போனதால் அவருக்கும் வேறு வழியில்லாமல் போனது.

சிவா, பிரேம்ஜி, சரண், வைபவ் நால்வரும் சேர்ந்து வேகாவைக் காப்பாற்றுவதாக அமைந்த ‘சரோஜா’வில் கூட சீரியசாக பல காட்சிகள் உண்டு. ஆனால், நம்மைச் சிரிக்க வைத்த தருணங்கள் அனைத்தும் சிவாவை ஒரு ‘காமெடி ஹீரோ’வாகவே அடையாளப்படுத்தின.

அந்த பிம்பத்தின் கனத்தைச் சுமந்த காரணத்தால், தனக்கான கதைகள் அனைத்தும் தனி பாணியில் இருக்க வேண்டுமென்று முடிவு செய்தார் சிவா. அப்படித்தான் தமிழின் முழுநீள ‘ஸ்பூஃப்’ படமான ‘தமிழ்படம்’ அமைந்தது. ‘வ’ குவார்ட்டர் கட்டிங்கும் இருந்தது.

இதே காலகட்டத்தில் ‘பதினாறு’ படத்திலும் நடித்தார் சிவா. அதில் யுவன்சங்கர் ராஜாவின் பாடல்கள் கவனிக்கப்பட்டன. ஆனால், படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை.

அதையடுத்து தான் எதிர்பார்த்த கதைகள் கிடைக்காமல் திணறிப்போனார் சிவா. அந்த காலகட்டத்தில் அவரை ஆசுவாசப்படுத்தியது சுந்தர்.சியின் ‘கலகலப்பு’ பட வாய்ப்பு.

ட்ரெண்டை உணர்ந்து, அதனைத் தனது பாணிக்கேற்ப பயன்படுத்திக் கொள்வதில் சுந்தர்.சி மாபெரும் கில்லாடி. அந்த வகையில், அவருக்கு இன்னொரு ‘உள்ளத்தை அள்ளித்தா’வாக அமைந்தது அப்படம்.
பிறகு தில்லுமுல்லு ரீமேக், சொன்னா புரியாது, யா யா, வணக்கம் சென்னை படங்களில் நடித்தார் சிவா. நீண்ட காத்திருப்புக்குப் பிறகு வெளியான ‘மசாலா படம்’ வித்தியாசமான படைப்பு எனப் பாராட்டப்பட்டது.

சி.வி.குமார் தயாரிப்பில் வந்த ‘144’, அந்த காலகட்டத்தில் உரிய வெளிச்சம் பெறாமல் முடங்கியது.

அதனைத் தொடர்ந்து ‘அட்ரா மச்சான் விசிலு’, ‘சென்னை 600028 பாகம் 2’வில் நாயகனாக நடித்தவர், ‘கலகலப்பு 2’இல் வெறுமனே நகைச்சுவையாளராக வந்து போனார்.

தமிழ்படம் 2, இடியட் என்று தொடர்ந்து அவரது நடிப்பில் சில படங்கள் வெளியானாலும், ரசிகர்களோ நீண்ட நாட்களாக வெளிவராமல் இருக்கும் ‘பார்ட்டி’யில் சிவாவின் ‘அட்ராசிட்டி’யை காணத்தான் காத்திருக்கின்றனர்.

திரைப்பட வாய்ப்பு என்பது சிவாவுக்கு இன்னொரு தொடக்கமாக அமைந்தாலும், திரையுலகில் தனக்கான இடம் என்ன என்பதில் அவருக்குக் குழப்பமே இருந்ததில்லை. எண்பதுகளில் எஸ்.வி.சேகர், சந்திரசேகர், கவுண்டமணி போன்றவர்கள் எப்படி நகைச்சுவைப் படங்களில் நாயகர்களாக வெளிப்பட்டார்களோ, அது போன்றதொரு திரைப் பிம்பத்தை உருவாக்கவே அவர் மெனக்கெட்டார்.

ஒருகட்டத்தில் அது பலவீனமாக வெளிப்படக்கூடும் என்று மாற்றிக்கொள்ள முயன்றார். அதற்கேற்ற சூழல் இப்போதுதான் கனிந்திருக்கிறது.

தற்போது ‘சூது கவ்வும் 2’, இயக்குனர் ராம் இயக்கும் படம் உட்படச் சிலவற்றில் நடித்து வருகிறார் சிவா. அதேநேரத்தில், இன்றும் திரையுலகம் சம்பந்தப்பட்ட மிகப்பெரிய நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குகிறார். ’செலிப்ரெட்டி கிரிக்கெட்’ நிகழ்வுகளில் சக நடிகர்களோடு தோளோடு தோள் சேர்ந்து நிற்கிறார். அது போன்ற நிகழ்ச்சிகளில் அவர்களில் ஒருவராக நின்று, அந்த இடத்தையே கலகலப்பாக மாற்றுகிறார்.

‘போரடிக்குதே’ என்று எண்ணும்போதெல்லாம், ஒரு நிகழ்விலோ, திரையிலோ ஒருவரது இருப்பு நம்மைக் காப்பாற்றும். தன்னை மறந்து சிரிக்க, ரசிக்கச் செய்யும். அப்படியொரு ஆளுமையே சிவா.

சிவா தந்த பேட்டிகளைத் தொலைக்காட்சியிலோ, யூடியூப் தளங்களிலோ பார்ப்பவர்களுக்கு, கேட்பவரைச் சுவாரஸ்யப்படுத்தும் நகைச்சுவையான பேச்சு பாணியைத் தாண்டி அவர் சொல்ல வரும் ‘சீரியசான’ கருத்துகளும் நிச்சயம் பிடிக்கும். தற்போதைய வாழ்க்கை முறையில் இருந்து விலகியிருக்கும் விஷயங்களும் கூட அதிலிருக்கும். ஆனால், அதையும் ‘காமெடியாக’ பேசி தனது நிலைப்பாட்டை விளக்குவார். இதையே துணையாகக் கொண்டு, அவர் திரைக்கதைகளையும் எழுத வேண்டும் என்பதே நமது விருப்பம்.

சர்ச்சைகளில் சிக்காமல், சக மனிதர்களை வருத்தமுறச் செய்யாமல், தனது பாதையில் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்கிற சிவாவின் விருப்பம் பாராட்டத்தக்கது.

அதேநேரத்தில், திரையில் மட்டுமே அவரைக் காண முடியும் என்ற நிலையிலிருக்கும் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் அதிக எண்ணிக்கையிலான படங்களில் அவர் நடிக்க வேண்டும்.

  • மாபா
You might also like