நூல் அறிமுகம்: குன்றா வளம்!
வளர்ச்சி என்றால் என்ன? இயற்கையை அழிக்காமல் வளர்ச்சி என்பது சாத்தியப்படுமா? என்பதில் தொடங்கி, வளர்ச்சி பற்றிய பல்வேறு விசயங்களை இயல்பான மொழி நடையில், அறிவியல் தரவுகளோடு, பல்வேறு நூல்களின் துணையோடு உள்ளத்தைக் கிள்ளியபடியே பேசுகிறது இந்நூல்.
“ஆதி மனிதன் கல்லை எடுத்து வேட்டை ஆடினான். அடுத்த மனிதன் காட்டை அழித்து நாட்டைக் கட்டினான்” என்று ‘ஹெட்போன்’ மூலமாகப் பாட்டு கேட்டுக்கொண்டே ஆறுவழிச் சாலையில் பயணிக்கிறவர்கள், அந்தச் சாலைகளுக்காக அழிக்கப்பட்ட மரங்கள், கொல்லப்பட்ட அபூர்வ உயிரினங்கள், பல்லுயிர்ப்பெருக்கத்தின் மரணம் பற்றி சிந்திக்க வாய்ப்பில்லை.
இப்படிச் சிந்திப்பதால் அதி விரைவுச் சாலைகளை அமைக்கக்கூடாது என்று சொல்லவும் முடியாது.
பொருளாதார வளர்ச்சிக்காக மனிதர்கள் உருவாக்கிய உற்பத்தி முறைகளால் இந்தப் பூமிக்கும், இயற்கைக்கும் எவ்வாறெல்லாம் கேடுகள் ஏற்பட்டுள்ளன?
அந்தக் கேடுகளை சரிசெய்ய மனித இனம் எவ்வாறெல்லாம் தன்னுடைய உற்பத்தி முறையை சீர்படுத்திக்கொண்டே வந்துள்ளது என்பதில் தொடங்கி, ‘Sustainability’ எனப்படும் நிலையான, நீடித்த வளர்ச்சியைப் பெறுவதற்கு உலக நாடுகள் முன்னெடுக்க வேண்டிய செயல்பாடுகள் பற்றி தெளிவாக எடுத்துரைக்கிறது இந்த நூல்.
Sustainability, சூழலியல் அக்கறை போன்றவற்றை பொருளாதார வளர்ச்சிக்கு எதிரான செயலாகவே பார்க்கப்பட்டு வருவதற்கு மாற்றாக குன்றா வளர்ச்சி என பேசப்படும் sustainability என்பது தொழிற் வளர்ச்சியின் அடுத்த படிநிலை என மிக இயல்பாகவும் சுருக்கமாகவும் சொல்கிறது ‘குன்றா வளம்’.
******
நூல்: குன்றா வளம்
ஆசிரியர்: நிர்மல்
ஜீரோ டிகிரி பப்ளிசிங்
விலை: 120/-