மலைகளைக் காப்போம்; எதிர்காலத்தைக் கட்டமைப்போம்!

டிசம்பர் 11 – சர்வதேச மலைகள் தினம்:

’உடம்பும் சரியில்ல, மனசும் சரியில்ல’ என்பவர்களைப் பார்த்து, ‘ஏதாவது ஒரு மலைப்பிரதேசத்துக்குப் போய் கொஞ்ச நாள் இருந்தா எல்லாம் சரியாயிடும்’ என்று சொல்கிற காலமொன்று இருந்தது.

அதாவது, மருந்து மாத்திரைகளைவிட இயற்கையின் அழகு முழுமையாகத் ததும்பும் மலைப்பகுதிகளில் வாழ்கின்றபோது உடலும் மனமும் புத்துணர்வு கொள்ளும் என்ற எண்ணம் மருத்துவர்களிடம் மேலோங்கியிருந்தது.

’அன்பே வா’ படத்தின் திரைக்கதையில் முதல் திருப்பமே அப்படித்தான் அமைக்கப்பட்டிருக்கும்.

நாயகன் தனது மனத்தளர்ச்சியைப் போக்க, ’ஒரு மலைப்பாங்கான பகுதிக்குச் செல்லுங்கள்’ என்று மருத்துவர் பரிந்துரை செய்வதாக அக்காட்சி இருக்கும்.

அதன்பிறகு அவரும் சிம்லா செல்வதாகப் படம் விரியும்.

மேற்சொன்னவற்றில் இருந்து மலைகளும் மலைகள் சூழ்ந்த இடமும் எத்தகைய மனப்பாங்கை நம்மிடத்தில் உருவாக்கும் என்று புரிந்து கொள்ளலாம். அப்படிப்பட்ட மலைகளின் சிறப்புகளை நாம் முழுதாக அறிந்திருக்கிறோமா?

மலைகளின் சிறப்புகள்!

உலகின் மொத்த மக்கள்தொகையில் 13 சதவிகிதம் பேர் மலைப்பாங்கான பகுதிகளில் வசிக்கின்றனர்.

மலைப்பிரதேசங்கள் தான் பல்லுயிர் பெருக்கத்திற்கான ஆதாரமாக விளங்குகின்றன. நிலப்பகுதியில் நிகழும் 25 சதவிகிதப் பல்லுயிர் பெருக்கம் அங்குதான் நிகழ்கிறது.

உலகம் முழுவதும் கிடைக்கும் நன்னீரில் 60 முதல் 80 சதவிகிதம் வரை மலைகளில் உற்பத்தியாகிறது. டோக்கியோ, நியூயார்க் போன்ற மிக முக்கியமான பெருநகரங்கள் அதைச் சார்ந்தே இருக்கின்றன.

நீர் மட்டுமல்லாமல் உணவு, மரபுசாரா ஆற்றல் போன்றவற்றுக்கும் அவையே ஆதாரமாகத் திகழ்கின்றன.

உலக அளவில் சுற்றுலாத்துறையில் 20 சதவிகிதப் பங்களிப்பைத் தந்து வருகின்றன மலைவாசஸ்தலங்கள்.

மலைகளில் விளையும் கிழங்கு வகைகள், தானியங்கள், மசாலா பொருட்கள் நம் உணவில் பெரும்பங்கு வகிக்கின்றன.

பழுப்பு நிற கரடி, பனிச்சிறுத்தை, பெரிய கொம்புள்ள ஆடுகள், மலை முயல், சாம்பல் நிற ஆந்தை என்று வேறெங்கும் காண முடியாத சில உயிரினங்கள் மலைப்பகுதிகளில் மட்டுமே இருக்கின்றன.

நீர், பனிச்சறுக்கு சார்ந்த விளையாட்டுகளுக்கும், மலையேறுதலுக்கும் அவை காரணமாக விளங்குகின்றன. இப்படி மலைகளின் சிறப்புகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

மலைகளின் உருவாக்கம்!

பூமியின் மேலடுக்கில் உள்ள டெக்டோனிக் தட்டுகள் ஒன்றோடொன்று மோதி மேல்நோக்கித் தரையை நோக்கி நகரும்போது மலை உருவாவதாகச் சொல்கின்றனர் புவியியல் வல்லுநர்கள்.

அதனால், இப்போது மலை இருக்குமிடத்தில் ஒருகாலத்தில் கடல் இருந்ததாகச் சொல்லும்போது நமக்குள் ஆச்சர்யம் பீறிடும். இமயமலைத்தொடர் அதிலொன்றாகத் திகழ்கிறது. ஆனால், சில லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்த மாற்றம் அது.

இன்று உலகம் அடைந்திருக்கும் முன்னேற்றம் காரணமாகவும் மலைகளில் சில மாற்றங்கள் நிகழ்கின்றன.

உலகளாவிய வெப்பமயமாதல் அப்படியொன்றை உக்கிரமாக நிகழ்த்தி வருவதாகச் சொல்லப்படுகிறது.

அதன் காரணமாக, கடந்த சில ஆண்டுகளில் சுமார் 600 பனிப்பாறைகள் துருவப்பகுதிகள் உருகியிருக்கின்றன. இதனால் கடல் மட்டம் நாளும் உயர்கிறது.

பூமியின் இதர பகுதிகளிலுள்ள மலைகளில் நிகழும் வெப்பமயமாதலால் நீர்பரப்பு மற்றும் விளைச்சலின் அளவு முற்றிலுமாகப் பாதிக்கப்படுகிறது. அதன் காரணமாக மலைகளில் வாழும் மக்களின் வாழ்க்கையும் பாதிப்புக்குள்ளாகிறது.

கடந்த 12 ஆண்டுகளில் சுமார் 329 மில்லியன் பேர் இவ்வாறு பாதிப்புக்குள்ளாகியிருப்பதாகச் சொல்கிறது ஐநாவின் அங்கமான உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு.

அது மட்டுமல்லாமல் மலைப்பகுதி மக்கள் சமூக, அரசியல், பொருளாதார ரீதியிலான பிரச்சனைகளையும் காலம்காலமாகச் சந்தித்து வருகின்றனர். போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளற்ற நிலையில் அவர்கள் இருந்து வருகின்றனர்.

அவ்வசதிகளைச் செய்து தரும் போர்வையில், அவர்களையும் அவர்கள் வாழும் இடங்களையும் சுரண்டுகிற வேலையும் தொடர்ந்து வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

மலைகள் தினம்!

மலைகளையும் அங்குள்ள சூழலமைப்பையும் மக்களையும் காக்கும்விதமாக, அது தொடர்பான விழிப்புணர்வை ஊட்டும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 11-ம் தேதியன்று ‘சர்வதேச மலை தினம்’ கொண்டாடப்படுகிறது.

ஐநா பொதுச்சபையின் பரிந்துரையின் பேரில் உலக நாடுகள் கடந்த 2003-ம் ஆண்டு முதல் இதனைப் பின்பற்றி வருகின்றன.

பருவநிலை மாற்றங்கள் பேரழிவுகளை நிகழ்த்தி வருவதை இன்றைய தலைமுறை நேரில் கண்டு வருகிறது.

அதேநேரத்தில், மலைச்சூழலில் நிகழ்ந்துவரும் கொடுமைகளைக் கண்டு மௌனம் சாதித்து வருகிறது.

இந்த இரட்டை வேடம்தான் இன்னும் சிக்கல்கள் அதிகமாகக் காரணமாக உள்ளது.

சுத்தமான காற்று, நீர், உணவு கிடைக்கிற மலைப்பகுதிகளைக் காக்க வேண்டியது நம் அனைவரது கடமை.

சரிவில் விழுகிற ஒருவரைக் கைப்பிடித்து தாங்குகிற ஒரு நபரைக் கொண்டாடாவிட்டாலும், அவரைப் பின்னிருந்து தள்ளுகிற வேலையைச் செய்வது போல முட்டாள்தனம் வேறில்லை.

அந்த நபர் தான் உங்களின் காலுக்குக் கீழிருக்கும் நிலம் நழுவாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் எனும்போது, நமது எண்ணமும் செயல்பாடும் அவருடன் பிணைந்து கொள்வதாகத்தான் இருக்க வேண்டும்.

அந்த வகையில் நாம் அனைவரும் ‘மலைச்சூழல் பாதுகாப்பில்’ ஒன்றிணைய வேண்டியது அவசரம். நம்மைக் காத்துக்கொள்ளவும் எதிர்காலத்தைச் சிறப்பானதாகக் கட்டமைத்துக்கொள்ளவும் அது மிக அவசியம்.

  • மாபா
You might also like