சேது – 25ஐக் கடந்தும் இளமைக் கோலம்!

ஒவ்வொரு காலகட்டத்திலும் ‘ட்ரெண்ட்செட்டர்’ என்று சொல்லும்படியாகச் சில திரைப்படங்கள் வெளியாகும். அலையாடும் கடற்கரை பரப்பைப் போல, பின்வரும் படங்கள் அனைத்தும் அதன் வழியைப் பற்ற முயற்சிக்கும். அந்தத் தாக்கம் நெடுங்காலம் நீடிக்கும்.

ஆனால், அதே திரைப்படம் தியேட்டர்களில் வெளியாவதற்கு முன்னர் ‘தோல்விப்படம்’ என்றே பலரால் கணிக்கப்பட்டிருக்கும். ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’, ‘நீர்க்குமிழி’, ‘16 வயதினிலே’, ’ஒரு தலை ராகம்’, ’அபூர்வ சகோதரர்கள்’ என்று அதற்குப் பல உதாரணங்கள் உண்டு.

அந்த வகையில், திரையுலகில் சொல்லப்படும் ‘வேர்ட் ஆஃப் மவுத் பப்ளிசிட்டி’ வழியே வெற்றி பெற்ற படைப்புகளில் ஒன்றாகத் திகழ்கிறது ‘சேது’.

இயக்குனர் பாலாவின் முதல் படைப்பான இது, 1999-ம் ஆண்டு டிசம்பர் 10-ம் தேதியன்று வெளியானது.

ஒரு குறுகிய காலத் தயாரிப்பாக, மூன்றரை ஆண்டுகளுக்கு முன்னரே வெளியாகியிருக்க வேண்டிய படம் அது. தயாரிப்பாளர், நாயகன் நாயகி, தொழில்நுட்பக் கலைஞர்கள் என்று அனைத்து தரப்பிலும் மாற்றத்தைக் கண்டு, பட உருவாக்கத்திற்குப் பின்னர் சுமார் ஓராண்டு காலம் பல  ‘ப்ரிவியூ’க்களை கண்டு, அதன் பிறகே இப்படம் தியேட்டரில் தவழ்ந்தது.

அப்போதும், திரையுலகப் பண்டிதர்களால் ‘சேது’ நிராகரிக்கப்பட்டது. ஆனால், சுமார் ஒரு வார காலத்திற்குப் பிறகு இப்படம் அடைந்த உயரம் அப்படக்குழுவினரே எதிர்பாராத வகையில் அமைந்தது.

கமர்ஷியல் அம்சங்கள்!

‘கரகாட்டக்காரன்’ படத் தயாரிப்பில் ஈடுபட்டபோதும், தனித்தயாரிப்பாளராகத் திரையுலகில் கந்தசாமி மிகப்பெரிய அனுபவங்களைப் பெற்றிருக்கவில்லை. தன்னிடம் இருந்த வசதி வாய்ப்புகளைக் கொண்டு, அவர் சிறுகச் சிறுகத் தயாரித்த படமே ‘சேது’.

பாலாவின் நட்பு வட்டத்தில் இருந்த ஒரு நண்பரின் சகோதரர் அமீர். அவர் இப்படத்தில் உதவி இயக்குனராகச் சேர்ந்தார். தயாரிப்பாளர் கந்தசாமியின் உறவினரான சசிகுமாரும் இதில் உதவி இயக்குனராகப் பணியாற்றினார். இது போக இன்னும் மூன்று பேர் இயக்குனர் குழுவில் உண்டு.

விளம்பரப் படங்களில் பணியாற்றிய அனுபவமிக்கவர் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு. அவர் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகியிருக்க வேண்டிய படமிது. ஆனால், அதற்கு முன்னரே அரவிந்தன், சந்திப்போமா படங்களில் அவரது அழகியல் ரசனை வெளிப்பட்டது.

சிவபிரசாத்தின் கலை வடிவமைப்பில் ‘பாண்டி மடம்’ சம்பந்தப்பட்ட காட்சிகள் நம்மை அதிர்வுக்குள்ளாக்கும். கல்லூரித் தேர்தல் களேபரங்களைக் காணும்போது, ‘பிரேமம்’ படக் காட்சிகள் எதிர்பக்கத்தில் அணி வகுக்கும்.

இது போக ரங்கசாமியின் ஆடை வடிவமைப்பு, ரகுபாபுவின் படத்தொகுப்பு என்று பல நுட்பங்கள் இதில் சிறப்பாக அமைந்திருக்கும்.

இவர்களைத் தாண்டி பாடல்களில் துள்ளலையும் துடிப்பையும் சரியான விகிதத்தில் கலந்திருப்பார் இசையமைப்பாளர் இளையராஜா. உன்னி கிருஷ்ணனின் திரை வாழ்க்கையில் முத்திரை பதித்த பாடல்களாக, இதில் வரும் ‘மாலை என் வேதனை கூட்டுதடி’, ’நெனைச்சு நெனைச்சு’, ‘சிக்காத சிட்டொன்று’ ஆகியன இருந்தன.

டைட்டிலில் வரும் ‘சேதுவுக்கு சேதுவுக்கு’, ‘கானக் கருங்குயிலே’ பாடல்கள் தியேட்டரில் ரசிகர்கள் உற்சாகக் கூக்குரலிடும் ரகத்தில் இருந்தன.

’சரணம் பவ’, ‘வார்த்தை தவறிவிட்டாய்’, ‘எங்கே செல்லும் இந்தப் பாதை’ பாடல்கள் நெஞ்சைப் பிழிந்து சாறெடுக்கும் பணியைச் செய்திருக்கும்.

இது போகக் காட்சிகளின் தன்மையைக் கொஞ்சம் கூடப் பிசகாமல் ரசிகனின் மனதுக்குள் நேராகக் கடத்தும் பணியைச் செய்திருக்கும் ராஜாவின் பின்னணி இசை.

இசையைப் பொறுத்தமட்டில் ராஜா தனது ராஜாங்கத்தை அமைத்திடுவார் என்பது தெரிந்த விஷயம் தான். புதிய தொழில்நுட்பக் கலைஞர்கள் என்றபோதும், அந்த காலகட்டத்தில் அவர்களது வீச்சும் திறமையும் அற்புதமானதாக இருந்தன.

இவை அத்தனைக்கும் மேலெ மிகச்செம்மையான ‘காஸ்ட்டிங்’ சேதுவில் இருந்தது.

நாயகனாக வரும் விக்ரம், அழகு பூத்துக் குலுங்கும் பருவத்தில் இருந்த காலமது. ஒப்பனையை மீறி அது மிளிர்வதை நாம் காண முடியும். அதுவரை ‘இவரு நல்லாத்தான் நடிக்கிறாரு..’ என்று இழுத்தவர்களை, இப்படம் வியந்து பார்க்க வைத்தது.

நாயகனின் நண்பர்களாக வந்த ஸ்ரீமன், அஞ்சு மகேந்திரா, ஸ்ரீராம் கூட்டணி, யதார்த்தத்தில் நாம் பார்த்த எத்தனையோ கும்பல்களை நினைவூட்டும்விதமாக இருந்தது. அவர்களது கலாய்த்தல்கள், செல்லச் சண்டைகள் மிக இயல்பானதாகத் திரையில் தெரிந்தன. அக்காட்சிகளில் நகைச்சுவைக்கும் இடமிருந்தது.

இது போக சென்டிமெண்ட்டுக்கும் திரைக்கதையில் இடம் ஒதுக்கியிருந்தார் பாலா. சிவகுமார் – பாரதி சம்பந்தப்பட்ட காட்சியானாலும் சரி, நாயகி அபிதா, லாவண்யா, மோகன் வைத்யா சம்பந்தப்பட்ட காட்சியானாலும் சரி, அது சரியான விகிதத்தில் திரையில் வெளிப்பட்டிருந்தது.
இப்படி ஒவ்வொரு உணர்வும் மிகத்தெளிவாக, சரியாக, பொருத்தமாக, அதேநேரத்தில் வழக்கத்தில் இருந்து மாறுபட்டதாக, படத்தில் அமைந்திருந்தன.

ஒரு சிறப்பான ‘கமர்ஷியல் பிலிம் பேக்கேஜ்’ ஆக அவை இருந்தன என்பதைப் படத்தின் வெற்றிக்குப் பிறகே பலரும் அறிந்துகொண்டனர்.

‘சேது’வின் டைட்டில் அந்தக் காலத்தில் வந்த படங்களில் தனித்துவமானதாகத் தெரிந்தது. ஒரு பெயர், அதன் மீது பதியும் சில திருகுகள், அவை சுழற்றப்படுவதைக் காட்டுவதாக அமைந்தது.

நாயகனின் பெயர் காட்டப்பட்ட விதம் போலவே, அவரது கதாபாத்திர அம்சமும் இருக்கும் என்பதை முன்கூட்டியே உணர்த்துவதாக அது அமைந்தது.

இப்படித் தொடக்கம் முதல் முடிவு வரை, அனைத்தும் இயக்குனர் வடிவமைத்தவாறே திரையில் இருந்தன. இந்தச் சுதந்திரம் அவ்வளவு எளிதாக இயக்குனர்களுக்கு வாய்க்காது.

இப்போது, ‘சேது’வைப் பார்த்தாலும் இன்றைய தலைமுறையினரால் அதிலிருக்கும் இளமைக் கோலத்தைக் காண முடியும். ஒரு ‘கிளாசிக்’ சினிமா செய்கிற மாயாஜாலம் அதுவே!

மிரள வைத்த வெற்றி!

’ரெட்டைவால் குருவி’, ‘வீடு’ தொடங்கி ‘சதிலீலாவதி’ வரை இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் பாலா. அவரது பன்னிரண்டு ஆண்டு காலத் தவத்திற்குக் கிடைத்த பரிசாகவே ‘சேது’ வெற்றி இருந்தது. அதுவரை அவரது முகம் பார்த்துக் கடந்து போனவர்கள் எல்லாம், கைகளைப் பற்றிப் பாராட்டியவாறே இருந்தனர்.

அதுநாள்வரை பாலாவும் சரி, ‘சேது’வும் சரி, அவர்கள் கவனத்தை ஈர்க்காமல் விடுபட்டது எப்படி? காலத்தைத் தவிர வேறு எவராலும், எதனாலும் அதற்குப் பதில் சொல்ல முடியாது.

ஆனால், சேதுவின் வெற்றி தமிழ் திரையுலகையே மிரள வைத்தது. நாயகன் விக்ரமின் இன்னொரு ‘தொடக்கம்’ ஆக அப்படம் இருந்தது. இயக்குனர் பாலாவைத் தேடி முன்னணி நாயகர்கள் பலரது அழைப்புகள் வந்தன. ரத்னவேலு பல இயக்குனர்களால் விரும்பப்படுகிற ஒளிப்பதிவாளராக ஆனார். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

அப்படிப்பட்ட வாய்ப்புகள் இப்படத்தில் நடித்த இதர கலைஞர்களுக்குக் கிடைக்கவில்லை. சில தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் வாய்க்கவில்லை.

அடுத்தடுத்த படங்களில் வெவ்வேறு ஒளிப்பதிவாளர்கள், படத்தொகுப்பாளர்கள், இசையமைப்பாளர்கள், கலை இயக்குனர்களோடு பணியாற்றினார் பாலா. நடிப்புக் கலைஞர்களையும் அந்த வரிசையில் சேர்க்கலாம்.

சேது போன்ற ‘செம’ கமர்ஷியல் படங்களாக அவை அமையவில்லை என்றபோதும், பாலாவின் தனித்துவத்தைச் சொல்கிற விதமாகவே அப்படங்கள் இருந்தன. அவரது படங்களின் தாக்கத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் பல திரைப்படங்கள் உருவாகியிருக்கின்றன. அதையும் அவரது சாதனைகளில் ஒன்றாகவே கருதலாம்.

இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர், இப்போது அருண் விஜய், ரோஷிணி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின், ஜான் விஜய் என்று பெரும் பட்டாளத்துடன் ‘வணங்கான்’னை பொங்கல் வெளியீடாகக் கொண்டு வருகிறார் இயக்குனர் பாலா.

‘சேது’ தரும் மலரும் நினைவுகளோடு, அதனை விடப் பல மடங்கு தாக்கம் ஏற்படுத்தும் வகையில் ‘வணங்கான்’னை ரசிக்கலாமா? இது இன்னொரு ‘ட்ரெண்ட்செட்டர்’ ஆக இருக்குமா? இப்படம் சம்பந்தப்பட்ட அனைவரையும் அடுத்தகட்டத்திற்கு அழைத்துச் செல்லுமா? இது போன்ற பல கேள்விகளுக்குப் பதில் தெரிய, வரும் ஜனவரி 10-ம் தேதி வரை காத்திருக்கத்தான் வேண்டும்..!

மாபா

You might also like