ஊழல் ஒழிப்பைச் சாத்தியப்படுத்துவோம்!

2003 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ம் தேதியன்று நடைபெற்ற ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் மாநாட்டில், ஊழலுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 9-ம் நாளன்று பன்னாட்டு ஊழல் எதிர்ப்பு நாள் (International Anti-Corruption Day) கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஊழலுக்கு எதிரான பொது விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், ஊழலற்ற, களங்கமற்ற மனிதர்களாக வாழ உரிய வாழும் வழிமுறைகளை அனைவருக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே இந்நாளின் முக்கிய நோக்கமாக இருக்கிறது.

ஊழல் (Corruption) என்பது, வழங்கப்பட்ட அதிகாரத்தையோ அல்லது பதவியையோத் தவறாகப் பயன்படுத்தி, தனிப்பட்ட முறையிலானப் பயன்களைப் பெற்றுக் கொள்வதைக் குறிக்கிறது. ஊழல் என்பதில், லஞ்சம், கையாடல் போன்றவை உள்ளடங்குகின்றன.

அரசாங்கத்தின் பொறுப்பான பதவியில் இருப்பவர்கள் அல்லது அரசுப் பணியில் இருக்கும் பிற ஊழியர்கள், அலுவல் முறையில் தனிப்பட்ட நலன்களுக்காகச் செயல்படும் போது அரசாங்கம் அல்லது அரசியல் வழியாக ஊழல் இடம் பெறுகிறது.

அரசியல் துறைப் பேராசிரியரான ஸ்டீபன் டி. மொரிசு என்பவர், அரசியல் ஊழல் என்பது, தனிப்பட்ட நலன்களுக்காகப் பொது அதிகாரத்தைச் சட்டத்துக்குப் புறம்பாகப் பயன்படுத்துவதாகும் என்கிறார்.

ஊழல் பல அளவுகளில் இடம் பெறக்கூடும். பொதுவாக குறைவான எண்ணிக்கையான மக்களிடையே, சிறு சலுகைகள் பெறுதல் என்ற அளவில் ஊழல்கள் இடம் பெறுவது உண்டு. இது சிறு ஊழல்.

அரசாங்கத்தைப் பாதிக்கக் கூடிய அளவுக்குப் பெரிய அளவில் ஊழல்கள் இடம் பெறலாம். இது பெரும் ஊழல்.

இவற்றை விட, நாளாந்த சமூக அமைப்பின் ஒரு பகுதியாக ஊழல்கள் இருப்பது உண்டு. இவை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுக்கான அறிகுறிகளாகவும் இருக்கின்றன. இது ஒழுங்கமைந்த ஊழல் என்றும் வகைப்படுத்தப்படுகின்றன.

பன்னாட்டு அளவில் நடத்தப்பட்ட ஆய்வில், ஊழல் மிகக் குறைந்த180 நாடுகளின் பட்டியலில்,

90 புள்ளிகளுடன் டென்மார்க் முதலிடத்திலும்,

87 புள்ளிகளுடன் பின்லாந்து இரண்டாமிடத்திலும்,

85 புள்ளிகளுடன் நியூசிலாந்து மூன்றாமிடத்திலும்,

84 புள்ளிகளுடன் நார்வே நான்காமிடத்திலும்,

83 புள்ளிகளுடன் சிங்கப்பூர் ஐந்தாமிடத்திலும்,

82 புள்ளிகளுடன் ஸ்வீடன் மற்றும் சுவிட்சர்லாந்து ஆறாவது இடத்திலும்,79 புள்ளிகளுடன் நெதர்லாந்து ஏழாவது இடத்திலும்,

78 புள்ளிகளுடன் ஜெர்மனி மற்றும் லக்சம்பர்க் எட்டாவது இடத்திலும்,

77 புள்ளிகளுடன் அயர்லாந்து ஒன்பதாவது இடத்திலும்,

76 புள்ளிகளுடன் கனடா மற்றும் எஸ்டோனியா பத்தாமிடத்திலும் இருக்கின்றன.

இப்பட்டியலில், இந்தியா, 39 புள்ளிகளுடன் 93 ஆம் இடத்தில் இருக்கிறது என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

அரசியலாளர்கள் மற்றும அரசுப் பணியிலிருப்பவர்கள் அனைவரும் ஊழலற்றவர்களாகவும், களங்கமற்றவர்களாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் அரசின் பொதுநலத் திட்டங்கள் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையும்.

மேலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் மேம்படும் என்பதை ஒவ்வொரு அரசியலாளரும், அரசுப் பணியிலிருப்பவர்களும் உணர வேண்டும்.

மேலும், ஊழல் செய்பவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை மிகக் கடுமையானதாக இருக்க வேண்டும் என்றும், உலகம் முழுவதும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

நாமும் இந்நாளில் அவர்களுடன் இணைந்து ஊழலற்ற நிருவாகம் செயல்படுவதற்கு உறுதுணையாக இருப்போம்.

– தேனி மு.சுப்பிரமணி

  • நன்றி: கல்கி இதழ்
You might also like