இந்திய மண்ணில் பிறந்த ஒவ்வொரு குடிமகனின் கடமைகளில் ஒன்று தமது தாய் நாட்டின் தூய்மையைப் பாதுகாப்பது.
இந்தியக் குடியுரிமைச் சட்டத்தில் நாட்டின் சுத்தம் அங்கீகரிக்கப்பட சட்ட விதிமுறை.
மீறும் பட்சத்தில் அதற்குச் சட்டரீதியன தண்டனைகளும் உண்டு.
‘தூய்மை இந்தியா இயக்கம்’ (சுவச் பாரத் அபியான்) என்ற திட்டம் 2014-ம் ஆண்டு இந்திய அரசால் கொண்டுவரப்பட்டது. அதனை பிரதமர் மோடி 02/10/2014 அன்று டெல்லியில் உள்ள காந்தி நினைவிடமான ராஜ்காட்டில் அதிகாரப் பூர்வமாக அமல்படுத்தினார்.
இந்திய அரசு தாய்மண்ணைப் பாதுகாப்பதற்கு எத்தனை சட்டங்களை உருவாக்கினாலும் அதை நடைமுறைப்படுத்துவதில் தனிமனிதனின் பங்கு மிகவும் முக்கியமானது.
கிராமப் புறங்களைக் காட்டிலும் நகர்ப் புறங்களில் வாழும் மனிதர்கள் தாய் மண்ணின் தூய்மையைக் கருத்தில் கொள்வது என்பது மிகவும் குறைவாக இருக்கிறது.
ஒரு சில ஆண்கள் தெருக்களில், பொது இடங்களில் உள்ள சுவர்களில், சாலை ஒரங்களில் மரம், செடிகள் அடர்ந்துள்ள பகுதிகளில் சிறுநீர் கழித்தல், புகைப்பிடித்தல் போன்றவற்றைப் பொதுமக்கள் முன்னிலையில் சிறிதும் தயககமுமின்றி செய்கின்றனர்.
இச்செயல் அந்த வழியில் செல்லும் பெண்கள், சிறுவர்களுக்கு அருவெறுப்பு மனநிலையை ஏற்படுத்துகிறது.
மேலும் பொது இடங்களில் துர்நாற்றம் வீசுவது ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. இதனால் பொதுமக்கள் மட்டுமன்றி, இயற்கையும் பாதிப்படைகிறது.
பொது இடங்களைப் பாதுகாப்பது என்பது அனைத்து மக்களின் கடமை.
அரசாங்கம் மக்களின் தேவைக்காக பொது இடங்களில் ‘பொதுக் கழிவறை’ வசதி அமைத்துக் கொடுத்துத் தான் இருக்கிறது.
ஆனால், சிலர் அதனைப் பயன்பாடுத்தாமல் பொது இடங்களை அசுத்தம் செய்வது மிகவும் தவறான செயல். இதனால் சுற்றுப்புறச் சுழலின் சுத்தமும் பாதிப்படைகிறது.
2014-2019-க்கு இடையில் 90 மில்லியன் ரூபாய் செலவில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் கழிவறைத் திட்டத்தைக் கொண்டுவந்து, அதனை இன்றளவும் செயல்படுத்தி வருகிறது.
இவ்வாறு இருந்தும் என்ன பயன்?
மக்கள் கழிவறைக்கு பதிலாக, தொடர்ந்து வெளிப்புறப் பொது இடங்களைப் பயன்படுத்துகின்றனர்.
இதேபோல், சாலை ஒரங்களில் காணப்படுகின்ற சிற்றுண்டிக் கடைகளில் உண்பவர்கள், உண்டு முடித்தபின் அப்படியே அதே இடத்தில் அந்த வாழை இலைகளை வீசி விடுகின்றனர். அருகில் ஒரு குப்பைத் தொட்டி வைத்திருந்தாலும் அதனை அவர்கள் கண்டு கொள்வதே இல்லை.
”திருமூலர்’ ”உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே” என்னும் கூற்றின் மூலம் உடல், உணவு, ஆரோக்கியம் பற்றிக் குறிப்பிட்டு இருக்கிறார்.
ஆரோக்கியத்தின் முக்கிய பங்கு சுத்தம் .
சுத்தமான உணவு முக்கியம்.
அதை எப்படிப்பட இடத்தில் இருந்து நாம் சாப்பிடுகிறோம்? சுற்றுப்புறச் சூழலை அசுத்தம் செய்யாமல், குப்பைகளைக் குப்பைத் தொட்டிகளில் போட்டால், சுத்தமான, ஆரோக்கியமான சூழலை உருவாக்க முடியும்.
அதே போல் சில தேநீர்க் கடைகளில் சுத்தம் என்பதே இருக்காது. பால் பாக்கெட், தேயிலை தூள்கள், சிகரெட் துண்டுகள் எல்லாம் கடையின் வெளிப்புறங்களில் சிதறிக்கிடக்கிறது.
தேநீர், காப்பி தயாரிக்கும் பகுதிகளை சுத்தம் செய்வதே இல்லை, வெளியில் இருந்து பார்க்கும் மக்களுக்கு இவை உவப்பாக இல்லை.
இம்மாதிரியான கடைகளில் தான் பலரும் தேநீர் வாங்கிக் குடிக்கின்றனர். இது அவர்களின் ஆரோக்கியத்தை மிகவும் பாதிக்கும் செயல்.
தழிழ் நாட்டில் தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம் 2011ம் ஆண்டு அறிமுகப்படுதப்பட்டு பின் 05, ஜுலை 2013-ம் ஆண்டு ஜனாதிபதியின் ஆணையாக அறிவிக்கப்பட்டது,
பின்னர் 12 பிப்ரவரி 2013-ம் ஆண்டு அதிகாரப் பூர்வமாக சட்டமாக்கப்பட்டது. இன்றும் இயக்கத்தில் இருந்துவருகிறது. இது போல இன்னும் பல சட்டங்களும் இருக்கின்றன.
ஆனால் இவ்வாறான சட்ட முறைமைகளை மீறும் வகையில் சில உரிமையாளர்கள் செயல்படுகின்றனர், இது தண்டனைக்குரிய செயல்.
அது மட்டுமல்ல, சிலருக்குச் செல்லப்பிராணிகள் (நாய்) வளர்ப்பது மிகவும் பிடித்தமான செயல், அது அவர்களின் தனிப்பட சுதந்திரமும் கூட.
ஆனால் அவர்கள் இந்த விலங்குகள் கழிவுகளைக் கழிப்பதற்கு பொது சாலைகளைப் பயன்படுத்துவது சுகாதாரமானது அல்ல. காலை, மாலை நடைபயிற்சி செய்பவர்கள் நாய்களைக் கூட்டிக்கொண்டு வந்து தெருக்களில் மலம் கழிக்க விடுவதைக் காணமுடிகிறது.
இதனால் சுற்றுபுறச்சூழலின் சுத்தம் பாதிப்படைகிறது. இச்செயல் பொதுச்சாலைகளை சுத்தம் செய்யும் தொழிலாளிகளுக்கு மன கஷ்டத்தையும், சிரமத்தையும் ஏற்படுத்துவதை நேரில் காணமுடிகிறது.
இதுபோல் சுற்றுப்புறச் சூழலை மாசுப்படுத்தும் செயல்களை ஏராளமாகச் சொல்லிக்கொண்டு போக முடியும்,
இதில் சுற்றுலாத் துறையையும் சொல்லமுடியும், சுற்றுலா செல்பவர்கள் அங்கு உணவு, மற்றும் தண்ணீர் போத்தல்கள் மற்றும் ஏனைய பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டுவந்து அப்படியே வீசிவிட்டுச் செல்கின்றனர்,
பொது இடங்கள் அனைத்து மக்களின் சொத்து, அதைத் தூய்மையாக பாதுகாப்பது என்பது அனைவரின் கடமையும், பொறுப்பும் ஆகும்.
இவை ஒரு புறம் இருக்க நம் தாய் மண்ணையும், மண்ணின் துய்மையையும், வளர்ச்சியினையும் நேசிக்கும் பலரும் இங்கு இருக்கின்றனர்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்களின் நினைவாகவும், அவரின் வேண்டுகோளுக்கு இணங்க நடிகர் விவேக், ‘பசுமை கலாம் திட்டம்’ என்ற பெயரில் ஒரு கோடி மரங்கள் இந்தியா முழுவதும் நட்டுவைக்கும் முயற்சியைத் துவக்கி வைத்தார். அதில் ஓரளவுக்கு அவர் வெற்றியும் கண்டார்.
துரதிக்ஷ்ட வசமாக விவேக் மரணம் அடைந்து விட்டபோதும் அவரின் மனைவி அருள்செல்வி அவர்கள் அத்திட்டத்தை இன்றுவரையிலும் செயல்படுத்துகிறார்.
இது இந்திய மண்ணின் பசுமை, நீர் வளம், சுத்தமான காற்று என்ற பொது நலன் கருதிய திட்டமாகும்.
மேலும் இந்திய மண்ணின் தூய்மையில் ராணுவப் படையின் பங்களிப்பு இன்றியமையாத ஒன்றாகும்.
அனைத்து மக்களும் தாய்மண்ணின் தூய்மையைப் பாதுகாப்பதில் கவனத்தில், கொள்ள வேண்டும், அனைத்து மக்களின் மனதிலும் தூய்மை எண்ணம் தோன்ற வேண்டும், அவ்வாறு தோன்றினால் தூய்மையான பாரததேசத்தை நாம் உருவாக்க முடியும்.
சுத்தம் இறை நம்பிக்கையின் ஒரு பாதியாகும்! (முகமது நபி)
– தனுஷா