ஜார்க்கண்டில் ஆட்சியைத் தக்க வைத்த ‘இந்தியா‘ அணி !

சோரன் மனைவியின் பிரச்சாரத்தால் வீழ்ந்த பாஜக

ஜார்க்கண்ட் மாநிலத்தில், கருத்துக் கணிப்புகளை எல்லாம், சுக்கு நூறாக உடைத்து எறிந்து விட்டு ‘இந்தியா’ கூட்டணி, மீண்டும் கோட்டையைக் கைப்பற்றியுள்ளது. எந்தச் சூழலில் அந்த மாநிலம், தேர்தலை எதிர்கொண்டது என்பதை முதலில் பார்க்கலாம்.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்.) தலைவரும், ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சருமான ஹேமந்த் சோரனை, மத்திய அரசின் ஏஜென்சியான அமலாக்கத்துறை, ஜனவரி மாதம் கைது செய்தது. பண மோசடி வழக்கில் அவரை கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பதவியை அவர் ராஜினாமா செய்ததால், சம்பாய் சோரன் முதலமைச்சர் ஆனார். ஆறு மாத சிறை வாசத்துக்கு பின், ஹேமந்த், ஜுன் மாதம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மீண்டும் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

இந்த நிலையில்தான் அந்த மாநிலத்தின் சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அங்குள்ள 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

‘இந்தியா‘ கூட்டணியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்), காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல்.எல்) ஆகிய கட்சிகள் போட்டியிட்டன.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, ஜார்க்கண்ட் மாணவர் கூட்டமைப்பு, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜன சக்தி ஆகிய கட்சிகள் இடம் பெற்றிருந்தன.

இரு தரப்பிலும் அனல் பறக்கும் பிரச்சாரம் நடைபெற்றது. பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்தனர்.

கடந்த 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது. தேர்தலில், ‘இந்தியா‘ கூட்டணி, 56 தொகுதிகளை அள்ளியுள்ளது. ஒவ்வொரு கட்சிக்கும் கிடைத்த இடங்கள் வருமாறு:

ஜேஎம்எம் – 34
காங்கிரஸ் – 16
ராஷ்டிரிய
ஜனதா தளம் – 4
இந்திய கம்யூனிஸ்ட்
(எம்எல்-எல்) – 2

கடந்த தேர்தலில் வென்ற இடங்களை விட, 9 தொகுதிகளை கூடுதலாக கைப்பற்றி ‘இந்தியா’ அணி சாதனை படைத்துள்ளது.

ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி, ஒட்டு மொத்தமாக 24 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளது. அந்த அணியிலுள்ள கட்சிகளுக்கு கிடைத்த இடங்கள்:

பாஜக – 21
ஜார்க்கண்ட்
மாணவர் கட்சி – 1
லோக் ஜன சக்தி- 1
ஐக்கிய
ஜனதா தளம் – 1

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 25 தொகுதிகளில் வெற்றிபெற்ற பாஜகவுக்கு தற்போது 21 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது.

பூ ஒன்று புயலானது.

ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதால் எழுந்த அனுதாப அலையை, ஆதரவு அலையாக மடை மாற்றி, அதனை வாக்குகளாக அறுவடை செய்ததில், அவரது மனைவி கல்பனாவுக்கு பெரும் பங்குண்டு.

ஹேமந்த் சோரன் கைது செய்யப்படும் வரை, அவரது மனைவி கல்பனாவுக்கு பெரிய அளவில் அரசியல் ஆர்வமோ, ஈடுபாடோ கிடையாது. ஹேமந்த் கைதான அடுத்த நிமிடமே, முழு மூச்சாய் அரசியலில் இறங்குவது என தீர்மானித்தார்.

கட்சியின் மூத்தத் தலைவர்கள், பாதை மாறி சென்று விடக்கூடாது என்பதால் அவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று நம்பிக்கை ஊட்டினார். ‘உங்கள் பின்னால் ஒட்டுமொத்த கட்சியும் நிற்கும்’ என உறுதி அளித்தார்.

ஜே.எம்.எம். கட்சியின் வேர்களாகவும், விழுதுகளாகவும் கருதப்படும், பழங்குடியின மக்களை நேரடியாக சந்தித்துப் பேசி அளவளாவினார். அவர்களில் மனதில் இடம் பிடித்தார்.

நூற்றுக்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பேசினார். கல்பனாவை பார்க்கவும் பேச்சைக் கேட்கவும் மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்தார்கள்.

அவை ஓட்டுகளாகி, ஹேமந்த் சோரனை மீண்டும் அரியணையில் அமர வைத்துள்ளது.

‘இந்தியா’ கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களால், சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஹேமந்த் சோரன், வரும் 28-ம் தேதி முதலமைச்சராகப் பதவி ஏற்கிறார்.

– பாப்பாங்குளம் பாரதி.

You might also like