மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணிக்கு மகுடம் சூட்டிய மகளிர்!

சரிந்தது, ஜாம்பவான்கள் செல்வாக்கு!

மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு, அரசியலில் ஒரு பிரளயத்தையே ஏற்படுத்தியுள்ளது. அந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

பாஜக தலைமையிலான ‘மகாயுதி’ கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவியது.

தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளும், பிந்தைய கணிப்புகளும், அந்த வணிக தலைநகரின் கோட்டையைப் பிடிக்க, கடும் போட்டி நிலவுவதாக கணித்திருந்தன.

கணிப்பு காகிதங்களை அரபிக்கடலில் அமிழ்த்துவிட்டு, ‘மகாயுதி’ கூட்டணி வரலாற்று வெற்றியை நிகழ்த்தியுள்ளது.

பாஜக தலைமையிலான ‘மகாயுதி’ கூட்டணி 235 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்க வைத்துள்ளது.

கூட்டணியில் உள்ள கட்சிகளுக்குக் கிடைத்த இடங்கள் :

பாஜக – 132
சிவசேனா (ஷிண்டே ) – 57
தேசியவாத காங்கிரஸ்
(அஜித் பவார்) – 41

இந்தக் கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகள் ஓரிரு இடங்களில் வென்றுள்ளன )

எதிர்க்கட்சிகள் கட்டமைத்த ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணி, இந்தத் தேர்தலில் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஒட்டுமொத்தமாக அந்த அணிக்கு 50 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

அதன் விவரம் :

சிவசேனா (உத்தவ்) – 20
காங்கிரஸ் – 16
தேசியவாத காங்கிரஸ்
(சரத் பவார்) – 10
சமாஜ்வாதி – 2
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 1

பல ஆண்டுகாலம், மகாராஷ்டிர அரசியல், சரத்பவாரை மையம் கொண்டே சுழன்றுள்ளது. இந்தத் தேர்தலில் அவரது கட்சி வெறும் 10 இடங்களை மட்டும் பிடித்துள்ளது. இதனால் சரத்பவாரின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தின் சிங்கமாக கருதப்பட்ட, பால் தாக்கரேயின் மகன் உத்தவ் தாக்கரேயும், இந்த தேர்தலில், தனது அடையாளத்தை தொலைத்து விட்டார். முதலமைச்சர் கனவில் மிதந்த உத்தவின் கட்சி, 20 தொகுதிகளில் மட்டும் வென்றுள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் இல்லை

‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணியின் மோசமான தோல்வி காரணமாக, மஹாராஷ்டிரா சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி அந்தஸ்து யாருக்கும் கிடைக்க வாய்ப்பில்லை.

பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெறுவதற்கு, மொத்தமுள்ள எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையில் 10% இடங்களை, ஒரு கட்சி பெற்றிருக்க வேண்டும்.

288 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் 28 உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு உரிமை கோர முடியும் என தேர்தல் விதிகளில் கூறப்பட்டுள்ளது.

எந்த எதிர்க்கட்சிக்கும், அந்த அளவுக்கு எம்.எல்.ஏ.க்கள் பலம் இல்லை என்பதால், எந்தக் கட்சியும் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு உரிமை கோர முடியாது.

மகாராஷ்டிராவில், கடந்த 60 ஆண்டுகளில், எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் இருப்பது, இதுவே முதல் முறை.

போதிய எண்ணிக்கையில் எம்.எல்.ஏ.க்கள் இல்லாததால், கடந்த 1962-ம் ஆண்டிலும் 1967-ம் ஆண்டிலும் மகாராஷ்டிர சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி யாருக்கும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்க்கட்சிகள் சறுக்கியது ஏன்?

எதிர்க்கட்சிகளின் ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணி, மண்ணை கவ்வியதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், அந்த மாநில அரசு, கடைசி நேரத்தில் அமல்படுத்திய ‘அன்புச் சகோதரி‘ (லாட்கி பகின்) என்ற திட்டமே, ஆளுங்கட்சியின் அபார வெற்றிக்கு, துருப்புச் சீட்டாக அமைந்து, பெண்களின் வாக்குகளைக் குவித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், மகளிருக்கு மாதம் தோறும் 1500 ரூபாய் வழங்கப்பட்டது, தேர்தலுக்கு மூன்று மாதம் முன்பாக இந்த கவர்ச்சிகர திட்டத்தை அமல்படுத்தி, 5 தவணைகளில் பெண்கள் வங்கி கணக்கில் 7, 500 ரூபாய் வரவு வைக்கப்பட்டது.

வாக்களிக்க ‘கியூ’வில் நிற்கும்போது, மூன்றுமாதங்களில், அரசாங்கம் தந்த 7,500 ரூபாய் மனதில் நிழலாட, பெண்கள் ஒட்டுமொத்தமாக, பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சின்னங்களில், முத்திரை குத்தி, மீண்டும் நாற்காலியில் அமர வைத்து விட்டார்கள்.

அந்த மாநிலத்தில் உள்ள பெண் வாக்காளர்களில், ‘அன்புச் சகோதரி’ திட்டத்தால் பயன் பெற்றவர்கள் எண்ணிக்கை 2 கோடியே 30 லட்சம் பேர். கூட்டிக்கழித்து பார்த்தால், பாஜக அணியின் வெற்றி சூட்சுமம் புரியும்.

– பாப்பாங்குளம் பாரதி.

You might also like