படைப்பாளிக்குத் தந்திரங்கள் தெரியாது!

எழுத்தாளர் பிரபஞ்சன்

“துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா?’’

பிரபஞ்சன் அடிக்கடி ராகத்துடன் முணுமுணுக்கும் இந்தப் பாடலுக்கும் அவருடைய வாழ்வுக்கும் நெருங்கிய தொடர்புண்டு.

“காலம் என்னை எப்படியெல்லாம் வழிநடத்தியதோ அப்படியே அதன் வழியில் போயிருக்கிறேன்’’ – என்று தன்னைப் பற்றிச் சொல்லியிருக்கிறார் பிரபஞ்சன்.

அவருடைய இயற்பெயரான வைத்தியலிங்கம் என்று கூப்பிடுகிறவர்கள் கொஞ்சப் பேர்கள் தான்.

தன்னுடைய அப்பா நடத்தி வந்த கள்ளுக்கடையைப் பற்றியும், அதற்கு வந்த கூட்டத்தைப் பற்றியும், ஒரே நாளில் கள்ளுக்கடையை அப்பா கைவிட்டுவிட்டதைப் பற்றியும் நிறைந்த சிரிப்புடன் பிரபஞ்சன் சொல்லும்போது அருமையான கச்சேரியைக் கேட்கிற அனுபவம் கிடைக்கும்.

அப்பாவை வியந்து அடிக்கடி பேசுகிறவரின் எழுத்திலும் அப்பாவைப் பிரதியெடுத்திருக்கிறார்.

ஓட்டல் வைத்து அதில் நஷ்டம் ஏற்பட்டு குடும்பம் சிரமத்தைச் சந்தித்தபோது அவருக்கு ஆறுதல் அளித்த விஷயம் புத்தக வாசிப்பு.

வீட்டுத் திண்ணையில் சின்ன நூலகம். கையெழுத்துப் பத்திரிகை. புதுவை பொன்னித் துறைவன், இலக்கியன் என்கிற புனைப்பெயர்களைக் கடந்து பிறகு தான் ‘பிரபஞ்சன்’.

மயிலத்திற்குத் தமிழ் படிக்கப் போனவர் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் சக மாணவர்களுடன் கைதாகிச் சிறைக்குப் போய் கல்லூரியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு தஞ்சைத் தமிழ்ச் சங்கத்தில் புலவர் படிப்பு. ஐந்து ஆண்டுகள்.

தஞ்சைப் பிரகாஷ் போன்றவர்களுடன் உருவான நட்பு. ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா, தி.ஜானகிராமன் என்று விரிந்தது வாசிப்பு. சிறிது காலம் இடைச் செருகலாக வீணையைக் கற்றுக் கொண்டார்.

படிப்பை முடித்து மறுபடியும் புதுவை. உயர்நிலைப்பள்ளி ஆசிரியராகியும் வேலையில் நீடித்து ஒட்டமுடியவில்லை. சொந்தமாக பாரதி அச்சகத்தைத்துவக்கி ஏக நஷ்டம். டுட்டோரியில் சில காலம் ஆசிரியர். மாலைமுரசில் நிருபர் வேலை.

பிறகு சென்னை வாழ்க்கை. இலக்கியவாதிகளுடன் தொடர்பு உருவானது. தாமரையில் தொடர்ந்து எழுத ஆரம்பித்தார். கங்கை கொண்டானுடன் சேர்ந்து “கண்ணீரில் எழுதாதே’’ படத்தின் உதவி இயக்குநராகி, பாக்கியராஜ் நடித்த ‘ஊமை ஜனங்கள்’ படத்தில் வசனத்தில் பணியாற்றி அலுத்துப் போயிருந்த நேரத்தில் அவருடைய எழுத்து அடையாளத்தை உணரும்படி வெளிவந்தது அவருடைய முதல் தொகுப்பான ‘ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள்’.

எண்பதுகளின் துவக்கம் அது. சென்னையிலிருந்து அப்போது ‘அஸைட்’ என்கிற ஆங்கிலப்பத்திரிகை ‘சென்னைக்கான பத்திரிகை’ என்கிற அடையாளத்தோடு வித்தியாசமான வடிவமைப்பில் வெளிவந்து கொண்டிருந்தது.

அதன் ஆசிரியராகவும், உரிமையாளராகவும் இருந்தவர் ஆபிரகாம் இராலி. பிரபல பத்திரிகை ஒன்றிலும் பணியாற்ற அப்போது பார்த்து எனக்கு அழைப்பு வந்திருந்தது. எந்தத் திசை போவது?

மதுரைக்கு அப்போது வந்திருந்த பிரபஞ்சன் சென்னைக்கு வந்து தன்னோடு பணியாற்ற அழைத்து நானும் சென்னைக்கு வந்தேன். ‘செய்தி ஒலி’ – நாங்கள் திட்டமிட்டிருந்த இதழின் பெயர். சில மாதங்களுக்கான உள்ளடக்கம் எல்லாம் தயார். ஆனால் பத்திரிகை வெளிவரவில்லை.

அதையடுத்து சுதேசமித்திரன் குழுமத்திலிருந்து ஒரு வார இதழைக் கொண்டுவர முயற்சித்து அதுவும் முடியாமல் போனது.

வேலையில்லாமல் சில மாதங்கள் நீடித்தன.

திருவல்லிக்கேணியில் இருந்த ஜானிஜான்கான் சாலையில் உள்ள விடுதியில் ஒடுங்கிய அறைகளில் நாங்கள் தங்கியிருந்தோம்.

கையில் பணமே இல்லாத வறண்ட நாட்கள் பல. சில நாட்கள் முழுப்பட்டினி கிடந்து இரவு வேளையில் ஒரே ரொட்டியைப் பகிர்ந்து தூங்கப் போயிருக்கிறோம். பசி பழக்கப்பட்டுப் போயிருந்தது.

அந்தச் சமயத்தில் விடுதியில் எங்களுக்குப் பழக்கமாக இருந்த கழிவறைத் துப்புரவுத் தொழிலாளியிடம் கொடுத்து கையில் அணிந்திருந்த வாட்சை அடகு வைக்கச் சொன்னார் பிரபஞ்சன். ஐம்பது ரூபாய் கிடைத்தது.

ஒரு சமயம் பசித்த வயிற்றுடன் கிண்டி வரை மின்சார ரயிலில் ஏறி அங்கிருந்து நான்கு கி.மீ தூரத்தில் இருந்த ஒரு பத்திரிகை அலுவலகத்திற்கு பிரபஞ்சனும், நானும் பேசிக்கொண்டு நடந்தே போனோம் அங்கு பணியாற்றிய நண்பரைப் பார்க்க.

போனதும் வெளியே வந்த நண்பரிடம் சிரமத்துடன் நாங்கள் பசித்திருப்பதை மெதுவாகச் சொன்னோம்.

பதறிய நண்பர் சட்டைப் பையில் இருந்த பாக்கெட்டிலிருந்த ரூபாயையும், சில்லறைகளையும் அள்ளி எடுத்துக் கொடுத்து எங்களை முதலில் சாப்பிடச் சொன்னபோது பிரபஞ்சன் கண் கலங்கியதைப் பார்க்க முடிந்தது.

மதுரையிலுள்ள எங்கள் வீட்டிலிருந்து மணியார்டர் வரும். வரும் தகவல் சொன்னதும் வழக்கமான குழந்தைத்தனமான சிரிப்புடன் பிரபஞ்சன் சொன்னார்.

“நல்லது. வரட்டும். வந்ததும் உங்களுக்குப் பாதி. எனக்குப் பாதி. என்ன?’’

பணம் வந்ததும் அதைச் செலவழிப்பதில் அவர் காட்டுகிற வேகம் அலாதியானது.

அறையில் குளித்து முடித்து மலர்ச்சியான முகத்துடன் கிளம்புவார். கைவிரலுக்கிடையில் சிகரெட் புகைந்து கொண்டிருக்கும். உதட்டில் மெல்லிய ராகம் இழையோடும். அவரது வலது கைவிரல் காற்றில் எதையோ எழுதிக் கொண்டிருக்கும். முழுக்க மனம் நிறைந்த மாதிரி இருப்பார்.

தி.நகரில் அப்போது பிரபலமாக இருந்த ஸ்வீட் கடையில் விலை உயர்வான ஸ்வீட்டைச் சாப்பிட்டுவிட்டு அறைக்கும் ஒரு பாக்கெட் வாங்கிக் கொள்வார். குடிப்பதற்குக் கொஞ்சம் செலவிடுவார்.

இரண்டே நாட்களில் கைக்கு வந்த பணம் செலவழிந்துவிடும். ராயப்பேட்டையில் ஓடு வேய்ந்த நிலையில் இருந்த அப்போதைய பொன்னுசாமி ஹோட்டலுக்குப் போய் அவருக்குப் பிடித்தமான இறால் வறுவலைச் சாப்பிட்டுத் திரும்புவதில் அவ்வளவு விருப்பம் அவருக்கு.

“இவ்வளவு கஷ்டத்திற்கிடையில் கிடைத்த பணத்தை இவ்வளவு அவசரமாகச் செலவழிக்க வேண்டுமா?’’ – கேட்டால் புன்சிரிப்புடன் சொல்வார்.

“அதை நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம். இன்றையப் பொழுது இனிதாகக் கழிந்ததா… இல்லையா?’’

இது தான் அவருடைய இயல்பு.

வாழ்வின் நீர்க்குமிழியான கணங்களை உணர்ந்தே அந்தக் கணத்தில் வாழ்வதைப் போன்ற உணர்வுடன் இருந்தார்.

“பாலைவனத்தில் பெய்கிற மழையைப் போலத்தான் எழுத்தாளனுக்கு வரும் பணமும். அது வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்கு உதவாது’’.

சென்னையின் அப்போதைய வாழ்க்கையின் நெடி தாங்காமல் நான் மதுரைக்குக் கிளம்பியபோது பேருந்து கிளம்பும் வரை அணைத்துக் கைகொடுத்துக் கையசைத்தபடி நின்றிருந்தார் பிரபஞ்சன்.

குமுதம் வார இதழில் நான் பணியாற்றியபோது எழுதி வந்த ‘நதிமூலம்’ தொடருக்காக புதுச்சேரிக்குப் போயிருந்தபோது அவரும் அங்கிருந்தார். அவருடைய நண்பர்கள் இளங்கோ, ராஜகோபால், கண்ணன் என்று பலரைச் சந்திக்க வைத்தார். அவருடைய உறவினர்களையும் அறிமுகபடுத்தினார்.

“என் குழந்தைகளுக்கு நல்ல தகப்பனாக, மனைவிக்கு நல்ல புருஷனாக என்னால் இருக்க முடியலை. ஆனால் என் மனைவி நல்ல மனைவியாக, நல்ல அம்மாவாக இருந்தாங்க’’
– என்று நெகிழ்ச்சியாகச் சொன்னவர், அவருடைய வீட்டில் மதியச் சாப்பாட்டுக்குப் பிறகு மனைவியான பிரமிளா ராணியிடம் என்னைப் பேசச் சொன்னார்.

அவர் மிகவும் தயக்கம் காட்டியபோது ஒரு அறையில் எங்களை உட்கார வைத்துவிட்டு, “என்னோட நண்பர் தான் இவர். தெரியுமில்லையா? தைரியமா நீ நினைச்சதைப் பேசு’’ என்று சொல்லிவிட்டு அறைக்கு வெளியே போய்விட்டார் பிரபஞ்சன்.

அதன்பிறகு ஒன்றரை மணிநேரம் வரை பிரபஞ்சன் என்கிற மனிதரைப் பற்றி மிகவும் உணர்வுவயப்பட்ட நிலையில் அவருடைய ஆதங்கங்களைக் கண்ணீர் மல்க அவருடைய மனைவி பகிர்ந்து கொண்டபோது அவருடைய குரல் கீழறங்கிய தருணம் கேட்டுக் கொண்டிருந்த என்னைச் சங்கடப்படுத்தியது.

“இந்த ஓட்டு வீட்டில் ஒரு தனியறையில் உட்கார்ந்து தான் எத்தனையோ கதைகளை அவர் எழுதியிருக்கார். என்ன கஷ்டம் இருந்தாலும் அவரிடம் சொல்ல மாட்டேன்’’ என்று அவர் சொல்லி முடித்ததும் உள்ளே நுழைந்த பிரபஞ்சன் “என்ன சொல்லி முடிச்சாச்சா? என்ன.. ஏதாவது ஒரு பாராவாவது உங்களுக்குத் தேறுமா?’’ என்றார் அவருடைய மலர்ச்சியான சிரிப்புடன்.

பத்திரிகையுலகிற்கும் அவருக்கும் உள்ள உறவு எப்போதும் சிக்கலாகவே இருந்திருக்கிறது. தமிழில் உள்ள முன்னணிப் பத்திரிகைகள் அனைத்திலும் அவர் பணியாற்றியிருக்கிறார்.

வாரப்பத்திரிகை ஒன்றில் பணியாற்றியபோது அவர் கலந்து கொண்ட விழாவில் வாசகர் கேட்ட கேள்விக்கு “நான் பணியாற்றுவது குப்பைப் பத்திரிகையாக இருக்கலாம். அதில் நான் என்ன எழுதுகிறேன் என்பது தான் முக்கியம்’’ என்று அவர் வெளிப்படையாகச் சொன்ன பதிலால் அவர் வேலையை விட்டு நீக்கப்படும் சூழ்நிலை உருவானது. எந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குள்ளும் அவரால் பொருந்தி இருக்க முடியவில்லை.
இப்படித்தான் பல பத்திரிகைகளில் அவருடைய அனுபவங்கள்.

“உணர்ச்சிவசப்பட்டு பத்திரிகை உரிமையாளர்களின் முகத்திற்கு எதிராக உண்மைகளைப் பதிவு செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறவன் நான்.

இப்படிப்பட்ட இயல்பு கொண்ட படைப்பாளிகள் பத்திரிகை அலுவலகங்களிலிருந்து பொதுவாக ஓரங்கட்டப்பட்டு விடுவார்கள். படைப்பாளிகளுக்குத் தந்திரங்கள் தெரியாது. ஆனால் நிர்வாகம் தொடர்ந்து இருக்கிற இடத்திற்கு விசுவாசமாக இருங்கள்; கடுமையாக உழையுங்கள். எப்போதும் தர்மம் உங்களைக் கைவிடாது’ என்று சொல்லிக் கொண்டே இருக்கும். ஒருபோதும் தர்மம் எவனையும் காப்பாற்றியதாக வரலாறே கிடையாது’’ என்றார் பின்னாளில் நான் தீராநதிக்காக எடுத்த நேர்காணலின் போது. ( மே- 2005 )

நிறைய வாசிப்பது அவருடைய இயல்பின் ஒரு பகுதி ஆகியிருந்தது. புதிதாக எழுத வருகிறவர்களின் எழுத்துக்களைப் படித்து அதை அவர்களிடம் சொல்லிக் கொண்டாடுகிறவராகவும் இருந்தார். பெண் படைப்பாளிகள் பலரைத் தொடர்ந்து ஆதரித்து எழுதியும், பேசியும் வந்திருக்கிறார்.

எண்பதுகளின் துவக்கத்தில் அவருடைய சிறந்த சிறுகதைகளில் ஒன்றான ‘பிரும்மம்’ இலக்கியச் சிந்தனைப் பரிசைப் பெற்றிருந்தது. அதற்கான விழாவில் அவரைப் பேச அழைத்தபோது பேசத்திணறிப் போனதை ஒரு பத்திரிகை குறிப்பிட்டு எழுதியிருந்தது.

சிறிது காலம் தான். அதற்குள் மேடைகளில் தொடர்ந்து பேசி மேடைப் பேச்சை வசப்படுத்தியிருந்தார். ஆவேசமும், நையாண்டி, உருக்கம் கலந்து கதை சொல்லும் பாணியில் அமைந்த அவருடைய பேச்சுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

“மேடைப் பேச்சும் எளிமையான சூத்திரம் தான். எந்தச் சமயத்தில் குரலை மேலேற்றிக் கீழிறக்கி அழுத்தம் கொடுத்துப் பேசினால் போதும். பேச்சின் எந்த இடைவெளிக்குக் கைதட்டல் ஆரவாரம் கிடைக்கும் என்கிற எளிய விதி புரிந்துவிடும். திராவிட இயக்கத்துக்குக்காரர்களுக்கு இந்த வித்தை அத்துபடி’’ என்று சிரிப்புடன் காரணமும் சொல்வார்.

பிறருடைய பார்வையில் தன்னுடைய தோற்றம் எப்படி இருக்க வேண்டும் என்கிற கவனம் கொண்டவருக்கு உடல்நலத்தின் மீது எந்த அளவுக்கு அக்கறை இருந்தது?

நேர்ப்பேச்சில் இதுபற்றிக் கேட்டபோது சிகரெட், மது எல்லாமே உடல் நலத்திற்குத் தீங்கை விளைவிக்கும் தான். இது மூளைக்குத் தெரியாமல் இல்லை. இருந்தும் இதை எல்லாம் மீறித்தான் அதை நாடுகிற நிலை இருக்கிறது.

சாக வாய்ப்பிருக்கிறது என்பதை உணர்ந்தே இதைச் செய்கிறேன் என்றால் அதற்குப் பல அழுத்தங்கள் காரணம். இதெல்லாம் நம் உயிரை நாமே வதைத்துக் கொள்வதற்கான அறிகுறிகள்’’ என்றவர், தனது உடலைப் பொறுத்துத் தனது வாழ்வுக்குக் கெடு வைக்கிற மாதிரிச் சொன்னார்.

“அநேகமா 65 வயசு வரைக்கும் நான் உயிரோடு இருப்பேன்னு நினைக்கிறேன்’’ (சொன்னது 18.9.1997 – ல்)

வாழ்க்கை அவருடைய கெடுவைத் தளர்த்தி அவரை எழுபத்தி மூன்று வரை நகர்த்திக் கொண்டு போயிருக்கிறது.

மனைவி இறந்தபிறகு அவர் கூட்டங்களுக்குப் போவதைக் குறைத்துக் கொண்டார். உடல்நலக்குறைவு அடிக்கடி அவரை வதைத்துக் கொண்டிருந்தது. தன்னுடைய குடும்பத்திற்குத் தான் சரிவர உதவ முடியவில்லை என்கிற ஏக்கமும், நிராதரவும் அவருடைய பேச்சில் தொனித்தன. புதுவை சார்ந்து இன்னும் நிறைய எழுத வேண்டும் என்கிற துடிப்பு மட்டும் அவரிடம் வற்றவே இல்லை.

“ஒவ்வொரு எழுத்தாளனுக்கும், அவனுடைய மொழி சார்ந்து, இனம் சார்ந்து சில தார்மீகப் பொறுப்புகள் உண்டு. தான் வாழ்ந்த சமூகத்திற்கு அவன் உண்மையாக இல்லை என்றால் அவனுடைய எழுத்து ஒருபோதும் மதிக்கப்படாது’’ என்றவரிடம் அவருடைய எழுத்துக்களைப் பற்றி சுயவிமர்சனமாகச் சொல்லியிருப்பது அவருடைய ததும்பாத மனநிலையைக் காட்டுகிறது.

“புதுச்சேரி மாநிலத்தைப் பற்றிய முழுமையான நூல் ஒன்றை எழுத வேண்டும். இதுவரை நான் எழுதிய புத்தகங்களில் என் இறப்புக்குப் பிற்பாடு பத்து புத்தகங்கள் நிற்கும். சிறுகதைகளில் இருபது சிறுகதைகள் தேறும்.

ஆனால் இதில் எனக்குத் திருப்தியில்லை. இனி இயற்கை அருள்கிற மிஞ்சிய வாழ்க்கையில் இதுவரை எழுதியதைக் காட்டிலும், மேலான, கூடுதலான நுட்பம், தரத்துடன் எழுத ஆசைப்படுகிறேன். எழுதுவேன் என்று நம்புகிறேன். நம்பிக்கை தானே வாழ்க்கை’’ என்று சொல்லிக் கொண்டிருந்த பிரபஞ்சன் மறைந்திருக்கிறார் அந்த நம்பிக்கையின் கதகதப்போடு.
*
பரிதி பதிப்பகம் வெளியிட்டுள்ள மணா-வின் “மிருதுவாய்ச் சில அஞ்சலிகள்“ நூலில் இருந்து ஒரு கட்டுரை.

You might also like