இந்தியாவின் அரசியல் புரட்சி இந்திரா காந்தி!

இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமர், உலகின் இரண்டாவது பெண் பிரதமர் என்ற பெருமைகளை கொண்டு கம்பீரத்துடன் நாட்டை வழிநடத்திய இந்திரா காந்தி குறித்து சில தகவல்களை அறியலாம்.

இந்தியாவின் இரும்பு பெண்மணி என வர்ணிக்கப்பட்டவர் இந்திரா காந்தி. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் மகள் என்ற பெருமையோடு தாய் கமலா நேருவின் முழு அரவணைப்பில் வளர்ந்தார் அவர்.

உள்நாட்டுக் கலவரம், போர் என இந்தியாவின் எந்த பிரதமரும் சந்திக்காத பிரச்னைகளை எதிர்கொண்டு, அவற்றை திறம்படக் கையாண்டவர்.

1917-ஆம் ஆண்டு நவம்பர் 19 தேதி பிறந்த இந்திரா காந்தி தனது 11-வது வயதில் இராமாயனத்தில் வருவது போன்று வானரப் படையை நிறுவினார்.

இந்த அமைப்பு சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு உணவு, குடிநீர் விநியோகம் செய்வது, விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு தலைமைறைவாக வாழ்பவர்களுக்கு மடல்களைக் கொண்டு சேர்ப்பது உள்ளிட்ட பணிகளைச் செய்தது.

1942-ம் ஆண்டு மார்ச் மாதம், தந்தை நேருவின் விருப்பத்திற்கு மாறாக பெரோஸ் காந்தியை மணந்தார் இந்திரா.

இவர்களின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நேரு, மகாத்மா காந்தி தலையிட்டு திருமணத்தை முறித்து வைக்கும்படி கேட்டுக்கொண்டார்.

ஆனால், இந்திரா காந்தி இதற்கு இணங்கவில்லை. திருமணம் ஆன 6 மாதங்களில் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்துகொண்ட இந்திராவும் பெரோஸ் காந்தியும் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் 5 ஆண்டுகள் சுமூகமான திருமண வாழ்க்கைப்பின் இவர்களுக்கு ராஜிவ் காந்தி, சஞ்சய் காந்தி என இரண்டு மகன்கள் பிறந்தனர்.

நேஷ்னல் ஹெரால்டு பத்திரிகையில் மேலாளராக பெரோஸ் காந்தி பணி புரிந்தபோது, அப்பத்திரிகையின் பெண்கள் பகுதியை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு இந்திராவிற்கு கிடைத்தது.

பிரதமராக இருந்த நேரு வெளிநாடுகளுக்கு சுற்றுபயணம் மேற்கொள்ளும் போதெல்லாம் அவருடன் பயணித்த இந்திராவுக்கு, வெளிநாட்டு தலைவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

1964-ம் ஆண்டு நேரு இறந்த பிறகு முதல் முறையாக நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திரா காந்தி, தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சரானார். 1966-ல் லால் பகதூர் சாஸ்திரி மரணமடைந்தபோது, அடுத்த பிரதமாராக யாரைத் தேர்ந்தெடுப்பது என்பது பற்றி, காங்கிரஸ் கட்சிக்குள் முரண்பட்ட கருத்துகள் நிலவின.

அப்போது, காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த காமராஜர் இந்திரா காந்தியின் பெயரை முன்மொழிய, இந்திரா காந்தி பிரதமராகப் பதவியேற்றார்.

இதன் மூலம் இந்தியாவின் முதல் பெண் பிரதமர் மற்றும் உலகின் இரண்டாவது பெண் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றார்.

பிரதமராகப் பதவியேற்ற அதே ஆண்டில், நாகாலாந்து, மிசோரம் மாநிலங்களில் தனி நாடு கோரி போராட்டங்கள் வெடித்தன. அவற்றை திறம்பட கையாண்டார் இந்திரா. 1969 ஆம் ஆண்டு வங்கிகளை தேசிய மயமாக்கும் நடவடிக்கையை இந்திரா தொடங்கி வைத்தார்.

இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கான வங்கிச் சேவைகளை மேம்படுத்தவும், வங்கிகளின் கிளைகள் விரிவடையவும் உதவியது. இதன் மூலம் பொருளாதாரம் விரிவடைந்து வேலை வாய்ப்புகளும் அதிகரித்தன.

1971-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக, பிரதமரானார் இந்திரா காந்தி. இந்த ஆட்சிக்காலத்தில் பல்வேறு அரசியல் திருப்பங்களை நாடு சந்தித்தது.

1971-ல் மேற்கு பாகிஸ்தானுக்கு எதிராக கிழக்கு பாகிஸ்தானில் நடைபெற்ற போராட்டங்களுக்கு இந்தியா ஆதரவு அளித்தது. இதன் காரணமாக, பாகிஸ்தான் இந்தியாவின் மீது தாக்குதல் நடத்தியது.

உடனே, பாகிஸ்தான் மீது போர் தொடுத்து, மிக எளிதில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய ராணுவம். இந்த வெற்றியினால், வங்கதேசம் என்ற தனி நாடு உருவானது.

பாகிஸ்தானுடனான போரில் வெற்றி, 1974-ல் பொக்ரானில் நடைபெற்ற அணுகுண்டு சோதனை வெற்றி போன்றவை இந்திராவின் புகழை உச்சிக்கு கொண்டு சென்றது.

அதே நேரத்தில், இந்தியாவில், பணவீக்கம் அதிகரித்து, விலைவாசி உயர்வு விண்ணை முட்டியது. நாட்டின் பல்வேறு இடங்களிலும் கலவரங்கள் வெடித்தன.

இதனால், 1975-ம் ஆண்டு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டது. ஜெயப்பிரகாஷ், மொரார்ஜி தேசாய் உள்ளிட்டத் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்திராவின் புகழ் மங்கத் தொடங்கியது. இதனால் ஏற்பட்ட வெறுப்புணர்ச்சி, 1977- ல் நடந்த பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியை படுதோல்வி அடையச் செய்தது.

இந்திரா காந்தி மற்றும் அவருடைய மகன் சஞ்சய் காந்தி தாங்கள் போட்டியிட்டத் தொகுதிகளில் தோல்வியைத் தழுவினர். ஜனதா கூட்டணி ஆட்சி அமைத்தது.

ஆனால், கூட்டணி குழப்பங்கள் காரணமாக இரண்டே ஆண்டுகளில் ஜனதா கூட்டணி அரசு கவிழ்ந்தது. பின்னர், நடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இந்திரா காந்தி மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராகப் பதவியேற்றார்.

இக்காலத்தில், பஞ்சாபில் சீக்கிய பிரிவினைவாதம் வளர்ந்து, காலிஸ்தான் தனி நாட்டுக் கோரிக்கை வலுப்பெறத் தொடங்கியது. இக்கோரிக்கையை முன்னெடுத்து நடத்திய பிந்தரன்வாலேயின் செல்வாக்கும் அதிகரிக்கத் தொடங்கியது.

நாட்டின் ஒருமைப்பாட்டுக்குச் சவாலாக அமையும் தனி நாட்டுக் கோரிக்கையை மட்டுப்படுத்த எண்ணினார் இந்திரா காந்தி.

தனி நாடு கோரும் காலிஸ்தான் பிரிவினைவாதிகளைப் பிடிக்க அரசு திட்டமிட்டது. சீக்கியர்களின் புனித தலமான பொற்கோயிலுக்குள் பிந்தரன்வாலே உள்ளிட்டோர் ஆயுதங்களுடன் பதுங்கியிருப்பதாக, தகவல் கிடைத்தன் பேரில், ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் என்ற நடவடிக்கை மூலம், கோயிலுக்குள் இருக்கும் அனைவரையும் பிடிக்க உத்தரவிடப்பட்டது.

புனித தலமாகக் கருதப்படும் கோயிலுக்குள் ராணுவம், காலணியுடன் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியது.

இதில் பிந்தரன்வாலே உட்பட 450-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் இந்திரா காந்தியின் மீது சீக்கியர்களுக்கு வெறுப்புணர்வை ஏற்படுத்தியது.

இதன் தொடர்ச்சியாக, இந்திரா காந்தி அவரது மெய்காவலர்களாக இருந்த 2 சீக்கிரயர்களால் சுடப்பட்டார்.

கம்பீரத்தின் அடையாளமாக திகழ்ந்த இந்திரா பிரிய தர்ஷிணியின் உயிர் 1984 ஆம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி பிரிந்தது.

– நன்றி: புதிய தலைமுறை இதழ்

You might also like