நவம்பர் 17 – சர்வதேச மாணவர் தினம்
கற்பிப்பதும் கற்றுக்கொள்வதுமே வாழ்க்கை என்றிருப்பவர்களுக்கு எல்லா நாட்களும் சுபமாகத்தான் கழியும். அது எந்தளவுக்கு எளிமையானதோ, அதே அளவுக்குப் பின்பற்றுவதற்குக் கடினமானதும் கூட.
காரணம், நம்மில் பெரும்பாலானோர் ஆசிரியராக இருப்பதற்குத் ஆர்வம் காட்டும் அளவுக்கு மாணவராக இருக்கத் தயாராக இருப்பதில்லை.
ஏன் அப்படி? அதனால் என்ன வித்தியாசம் வந்துவிடப் போகிறது? சரி, ஒருவர் ஏன் மாணவராகத் திகழ வேண்டும்? இப்படி நம்மைப் பற்றும் பல கேள்விகளுக்கான பதில்களைப் பெற, பின்னோக்கிச் சென்று பால்யத்தை நோக்க வேண்டும்.
ஆசிரியர் என்பவர் யார்?
பள்ளிக்கூடத்தில் பாடம் கற்பிப்பவரே ஆசிரியர். அப்படித்தான் நமக்குக் கற்பிக்கப்பட்டிருக்கிறது. அதில் தவறு ஏதும் இல்லை. ஆனால், கற்றுக்கொள்ளுதல் என்பது ஆசிரியரிடத்தில் இருந்து மட்டும்தான் நிகழ்கிறதா?
ப்யூன் தொடங்கி பள்ளி அலுவலகப் பணியாளர் வரை பலரும் நமக்கு ஏதேனும் ஒன்றைக் கற்றுத் தந்திருப்பார்கள். அது பயனுள்ள நல்லொழுக்கமாக இருக்கலாம், அறிவுரையாக இருக்கலாம் அல்லது பரீட்சையில் தேர்வாவதற்கான வழிகளாக இருக்கலாம்.
குறைந்தபட்சமாக, தாமதமாகப் பள்ளிக்கு வருபவரிடம் ‘ஏன் லேட்’ என்று கேட்பதன் மூலமாகக் கூடச் சிலர் சில மாற்றங்களை உங்களிடம் நிகழ்த்தியிருக்கலாம். அந்த வகையில், பள்ளிச் சூழலில் நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொருவரும் நமக்கு ஆசிரியராகத்தான் செயல்பட்டனர் என்பது தெளிவு.
வயதில் மூத்த அல்லது சக மாணவர் முதல் பள்ளி செல்லும் வழியில் நாம் சந்திக்கும் மனிதர்கள், விழாக்களில் பார்த்த தலைவர்கள், ‘விசிட்’ வந்த பள்ளிக்கல்வி அலுவலர்கள் என்று எல்லோரும் அதில் அடங்குவர். ஆகையால், அந்த பட்டியல் மிகப்பெரியது.
இன்று, மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கத் தான் ஆசிரியர்கள் உள்ளனர் என்ற வரையறை கூட வலுவிழந்து விட்டது. வகுப்பறை வெளிகளில், ’எல்லாமே தெரியும்’ என்கிற மனப்பான்மை எதுவுமே தெரியாத ஒரு கூட்டத்தை வார்த்துக் கொண்டிருக்கிறது. எல்லாக் காலத்திலும் இது உண்டு என்றபோதும், இன்று இதன் வீரியம் மிக அதிகமாக இருக்கிறது.
வணிகமயமான கல்வி!
கல்வியும் சுகாதாரமும் தனியார்மயம் ஆகும்போது, சக மனிதர்களின் மீதான நேசம் அருகித்தான் போகும். உலகம் முழுக்கப் பல நாடுகள் அதனை மெய்ப்பித்து வருகின்றன. கடந்த இருபதாண்டுகளாக, அப்படியொரு சூழலே நம் மீதும் படர்ந்து வருகிறது.
பள்ளிக்கு வெளியே ஒரு மாணவரால் தனியாகக் கல்வியைக் கற்றிட முடியும் என்கிற சூழல் உருவாகிவிட்டது. பணம் இருந்தால், அதனை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
பள்ளியில் படித்தும் தெளிவில்லாதபோது அல்லது புரியாதபோது ‘டியூஷன்’ போகலாம் என்றிருந்த நிலைமை மாறி, அதுவும் ஒரு மாணவனுக்கு அவசியம் என்ற நிலை வந்துவிட்டது.
முன்னர் தனிநபர்களும் சில நிறுவனங்களும் கோலோச்சிய இடத்தில், இன்று கார்பரேட் நிறுவனங்கள் புகுந்துவிட்டன.
அவ்வளவு ஏன்? ‘நீட்’ தேர்வு என்பது பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் அல்லது மாணவியை மருத்துவப் படிப்புக்குத் தேர்ந்தெடுப்பதற்கான ஒரு தகுதித் தேர்வு மட்டுமே.
ஆனால், அதற்குப் பயிற்சி பெறுவதற்காகச் சிலர் ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை பயிற்சி மையங்களில் செலவிடுகின்றனர்.
அதாகப்பட்டது, நீட் பயிற்சி என்பதும் மருத்துவப் படிப்புக்கு முன்னதாக மேற்கொள்ளப்படுகிற ’ப்ரீ – டிகிரியாக’ மாறிவிட்டது.
அடுத்தடுத்து பொறியியல், இளங்கலை, முதுகலைப் பட்டம் என்று பல்வேறு பல்கலைக்கழகப் படிப்புகளுக்கான தகுதித் தேர்வு பயிற்சிகளும், இது போல மாணவக் காலத்தை விழுங்கக் காத்திருக்கின்றன.
இந்த நிலைமையில், இளைய தலைமுறையிடம் போய் ‘ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது’ என்ற பழமொழிக்கு அர்த்தம் பழக்க முடியுமா? குறைந்தபட்சமாக, நீங்கள் சிறந்த மாணவராக இருப்பது எப்படி என்று தான் சொல்ல இயலுமா?
அடக்கியாளும் சூழல்!
ஐம்பதாண்டுகளுக்கு முன்னர், கல்வியறிவில் பின்தங்கியவர்கள் அதிகளவில் மூன்றாம் உலக நாடுகளில் நிறைய இருந்தனர். இன்று, அந்த எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது.
வறுமைச்சூழல் முதல் சாதி, மதம், இனம், மொழி என்று பல்வேறு பாகுபாடுகளின் காரணமாகக் கல்வியைப் பெறவிடாமல் எவரையும் தடுக்கும் சூழல் இன்றில்லை.
ஒருவரை அடக்கி ஆண்டு, அவரது வளர்ச்சியைத் தடுக்கும் சூழலும் இனிமேல் வரப் போவதில்லை.
ஆனால், அதனைச் செயற்படுத்துவதற்கான முயற்சிகள் எப்போதும் போலத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.
சக மனிதரின் அறியாமை இருளை அகற்றுவதற்குத் தயாராக இருக்கும் எவராலும் அதனை முறியடிக்க முடியும்.
1939 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் தேதி, செக்கோஸ்லோவோக்கியாவின் பிரேக் நகரில் மருத்துவ மாணவர்களின் எழுச்சியை ஹிட்லரின் நாஜிப்படை அடக்கியது.
அந்த அடக்குமுறையைக் கண்டு எழுந்த குமுறல்களே, தற்போது ஒவ்வொரு ஆண்டும் அந்த நாளை ‘சர்வதேச மாணவர் தின’மாகக் கொண்டாடக் காரணமாக விளங்குகிறது.
இன்றும் அது போன்று எங்கோ ஒரு மூலையில் அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப் படுகின்றன.
அதன் காரணமாகச் சில மாணவர்களின் கல்வி சுவாசம் தடைபட்டுக் கொண்டிருக்கிறது. அவர்களது நலவாழ்வுக்காகத் தடையின்றிச் செயல்படும் மாணவ சமுதாயத்தாலே, அதற்கான தீர்வுகளும் காணப்பட்டு வருகின்றன.
யார் மாணவர்?
கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கும் எவரும் மாணவர் தான். இந்த வயதுதான் கற்றலுக்கானது என்று எந்த வரையறையும் இல்லை.
அறுபது வயதுக்குப் பிறகு ஆய்வுப்படிப்பை முடிப்பவர்களும் பதின்ம வயதினரோடு சேர்ந்தமர்ந்து கல்லூரிப் படிப்பைப் பயில்பவர்களும், தங்களது தயக்கத்தை மட்டுமே தொலைத்துவிட்டு அந்த சாதனையைப் படைத்து வருகின்றனர்.
‘எல்லாம் தெரியும்’ என்ற மனப்பான்மையே முதுமையின் அறிகுறி. ‘எனக்குத் தெரிய வேண்டும்’ என்ற சிந்தனையுடன் புதிதாக ஒன்றை அறிந்துகொள்வது இளமையோடு இருப்பதற்கான வழி.
வித்தியாசத்தை உணர்ந்து கொண்டவர்கள், என்றும் இளமையோடு இருக்கத் தங்களை ’மாணவர்’ ஆக்கிக் கொள்வார்கள். ’இது எப்படி’, ‘அது ஏன் அப்படியிருக்கிறது’ என்று தொடர்ந்து கேள்விகளை எழுப்புவார்கள்.
அந்த கேள்வி கேட்கும் பழக்கத்தைத் தான், நாம் மெதுமெதுவாகத் தொலைத்து வருகிறோம். அறியாதவை பல நிறைந்த உலகில் அறிந்தவற்றை மட்டும் கைக்குள் பொத்திக் கொண்டு, நீந்திக் கொண்டிருக்கிறோம்.
கைகளை அகற்றி வைத்து காற்றில் வீசினால் பறப்பதற்கான வல்லமை தானே கிடைக்கும். அப்போது, அதனைக் கற்றுக்கொண்ட சுகமும் தானே வரும்.
ஒவ்வொரு கணமும் புதிதுபுதிதாக உதித்துக் கொண்டிருக்கிற சூழலில், ஆசிரியர் என்ற இடத்தை நிலையெனக் கொண்டவர் இங்கு எவரும் இல்லை.
மாறாக, தேடித் தேடிக் கற்றுக் கொள்பவரால் மட்டுமே தொடர்ந்து கற்பிக்க முடியும் என்கிற சூழலும் வெகுஅருகில் வந்துவிட்டது.
அதனைக் கைக்கொண்டவர்கள் மட்டுமே மாணவ சமுதாயத்தால் கொண்டாடப்படுவர். எந்தத் துறைக்கும் இது பொருந்தும். ஆகையால், இந்த பூமியில் வாழும் ஒவ்வொருவருமே மாணவரே.
இப்போதும் கூட, இந்த கருத்துகளில் உங்களுக்குப் பல்லாயிரம் முரண்கள் தென்படலாம். அவையனைத்தையும் கூர்ந்து, கவனித்து, அவதானித்து, கேள்விகளாக மாற்றினால் போதும்.
மாணவன் என்ற அந்தஸ்தைத் தக்கவைத்துக் கொள்ளலாம். அதன்பிறகு, இந்த உலகின் ஒவ்வொரு அடியையும் அளந்த பெருமை உங்களைத் தேடி வரலாம். என்ன, கேள்வி கேட்க ஆரம்பிக்கலாங்களா..?!
– உதய். பா