படைப்பாளர், எழுத்தாளர், மொழிபெயர்பாளர் என பல்லாற்றல் கொண்ட ராஜ்கௌதமன், தமிழில் பின்நவீனத்துவம், பின் அமைப்பியல், அம்பேத்கரிசம், மார்க்சியம், அடித்தள மக்கள் ஆய்வுக் கோட்பாடுகளின் வழி தமிழ் இலக்கியம் மற்றும் பண்பாட்டின் வரலாற்றினை மதிப்பீடு செய்தவர்.
தமிழில் 1990-களில் உருப்பெற்ற தலித் இலக்கியம், தலித் பண்பாடு, தலித் விமர்சன எழுத்துகளில் ராஜ்கௌதமனுக்கு முதன்மையான மற்றும் தனித்த இடம் உண்டு.
‘பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச்சமூக உருவாக்கமும்’, ‘அறம் அதிகாரம்’, ‘தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு’, ‘அயோத்திதாசர் ஆய்வுகள்’, ‘கலித்தொகை – பரிபாடல்: ஒரு விளிம்பு நிலை நோக்கு’ உள்ளிட்ட சிறந்த ஆய்வு நூல்களை தமிழுக்குத் தந்தவர்.
தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை, ‘சிலுவைராஜ் சரித்திரம்’, ‘காலச்சுமை’, ‘லண்டனில் சிலுவைராஜ்’ ஆகிய மூன்று தன்வரலாற்றுப் புதின நூல்களைத் தந்துள்ளார். அந்நூல்களில் பயணப்படும் ஒரு தலித்தின் வாழ்க்கை இந்தியச் சமூக வரலாற்றின் பக்கங்களாக மிளிர்வதை நாம் காண முடியும்.
2012-ம் ஆண்டு மதுரைக் காமராசர் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறையும் இதழியல் துறையும் இணைந்து எழுத்தாளர் ராஜ் கௌதமனின் எழுத்துகளின் மீதான கருத்தரங்கை நடத்தியது. 2022-ல் நீலம் பதிப்பகம் அவரின் 72 வது பிறந்தநாளை முன்னிட்டு ஆய்வுக்கட்டுரை நூல் ஒன்றினை வெளிக்கொணர்ந்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் அரசு கலைக்கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியராக பணிபுரிந்த ராஜ்கௌதமன் 2011-ல் ஓய்வு பெற்றார். அவருடைய மனைவி க.பரிமளம். மகள் டாக்டர் நிவேதா லண்டனில் வசிக்கிறார். எழுத்தாளர் பாமா, ராஜ்கௌதமனின் உடன்பிறந்த சகோதரி ஆவார்.
பாளையங்கோட்டையில் வசித்து வந்த எழுத்தாளர் ராஜ்கொதமன் முதுமை காரணமாக சிறிது காலமாக உடல்நலிவுற்றிருந்த நிலையில், புதன்கிழமை (நவம்பர் 13, 2024) காலமானார். அவருக்கு வயது 74. எழுத்தாளர் ராஜ் கௌதமனின் உடல் பாளைங்கோட்டையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பண்டிதர் அயோத்திதாசர் விருது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அயோத்திதாசர் ஆதவன் விருது, நீலம் பண்பாட்டு மையத்தின் வேர்ச்சொல் விருது போன்ற பல விருதுகளைப் பெற்ற அவரின் எழுத்துக்களுக்கு தமிழக அரசு உரிய அங்கீகாரம் கொடுத்து மரியாதையைச் செலுத்த வேண்டும் என அறிஞர் பெருமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.