சிந்துவெளி விட்ட இடமும் கீழடி தொட்ட இடமும் ஒன்று!

பண்பாட்டு ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன்

நூல் அறிமுகம்: ஒரு பண்பாட்டின் பயணம் – (சிந்து முதல் வைகை வரை)

****

* சரியாக நூறாண்டுகளுக்கு முன்பு – செப்டம்பர் 20, 1924 அன்று, சிந்து வெளிப் பண்பாட்டு அகழாய்வுகள் பற்றிய தகவல்களை இந்திய தொல்லியல் கழகத் தலைவராக இருந்த சர். ஜான் மார்ஷல் லண்டன் பத்திரிகை ஒன்றில் முதன் முதலில் வெளியிட்டார்!

அந்த நாளிலிருந்து இந்தியாவின் தொல் வரலாறு – வேதகால வரலாற்றுக்கும் முந்திய – தேதி குறிப்பிடாத நாளுக்கு மாற்றியமைக்கப்பட்டது !

* அதன் மற்றொரு விளைவாக சிந்து வெளிப் பண்பாட்டின் அகழாய்வு முடிவுகளை வேதகால (ஆரியர்கள்) நாகரிகத்திற்குள் கொண்டு வரும் ஆதிக்க சாதியினரின் சதி வேலையும் துவங்கப்பட்டு இன்று வரை தொடர்கிறது! சிந்து வெளி நாகரிகத்தை ‘சரஸ்வதி நாகரிகம்’ என்று பெயரிட்டு வரலாற்றை திருட்டுத்தனமாக திருத்தி எழுதும் முயற்சியும் தொடர்ந்த வண்ணம் நிகழ்கிறது !

* இந்த சூழலில் திராவிடவியல் ஆய்வாளர், அறிஞர் ஆர். பாலகிருஷ்ணன். IAS (ஓய்வு) அவர்களின் 30 ஆண்டுகால இடைவிடாத கடின முயற்சியோடு, பல்லாயிரக் கணக்கான தூரங்களுக்கு பயணப்பட்டு, நேரடி தரவுகளை சேகரித்து, கணினியின் உதவியை முழுவதும் பெற்று, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் இயக்குனர் சுந்தர் கணேசன் மற்றும் அவரது உதவியாளர்களின் உதவியோடு இதுவரை தமிழில் இப்படியொரு அரிய, பெரிய ஆய்வு நூல் இந்த துறையில் வந்ததில்லை என்று பாராட்டும் வண்ணம், இந்த நூல் உருவாகியுள்ளது !

* திராவிட நாகரிகத்தின் அடித்தளமாக சிந்து வெளிப் பண்பாடு இருப்பதை – தொல்லியல் ஆதாரங்கள், இடப்பெயர்களின் ஒற்றுமைகள், பண்பாட்டு பொருள்களின் ஆதாரங்கள், சங்க இலக்கியத்தில் ஆதாரங்கள், தற்போது நடைபெற்று வரும் அகழாய்வு பொருட்களை ஒப்பிடுதல் இவ்வாறு இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரு புதிய வெளிச்சத்தை இந்த நூல் மூலம் பாய்ச்சியிருக்கிறார் நூலாசிரியர் !

* ஒரு பெரிய, பாரமான, அபாரமான, அறிவுபூர்வமான, ஆதாரமான, ஆவணமான‌ அருமையான இந்த நூலைப் படித்து முடித்த பின்னர், என்னுரையாக இந்த நூலின் அறிமுகவுரையை வழங்குவதில் மிக்க மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன் !

* சென்னையிலுள்ள ‘ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்’ இந்த நூலை உலகத் தரத்திற்கு வெகு நேர்த்தியாக பதிப்பித்து வெளியிட்டுள்ளார்கள். அதன் இயக்குனர் சுந்தர் கணேசன் சிறப்பான ஒரு பதிப்புரையை வழங்கியுள்ளார்கள்.
அதில் :

* “சிந்து வெளிப் பண்பாடு உலகிற்கு அறிவிக்கப்பட்டு நூறு ஆண்டுகளாகிவிட்டது. இந்திய துணைக்கண்ட நிலவியலின் இடப் பெயர்கள், பண்டைத் தமிழ் – சமஸ்கிருத இலக்கியங்களில் காணப்படும் இடப் பெயர்கள் ஆகியவற்றின் பல கூறுகளை ஒருங்கிணைத்து, பல்துறை சார்ந்த ஆய்வு முறைகளைப் பயன்படுத்தி திராவிட கருதுகோளுக்கு (Dravidian Hypothesis) வலு சேர்த்துள்ளார் ஆர். பாலகிருஷ்ணன்” என்று நூலாசிரியரைப் பாராட்டியுள்ளார் !

* வைகை நதிப் பண்பாட்டின் தொட்டிலான கீழடி அகழாய்வு காலங்களில் தமிழ் நாடு அரசு சார்பில் பொறுப்பில் இருந்த திரு. த. உதயச்சந்திரன். IAS அதிகாரி அவர்களின் அணிந்துரை இந்த நூலின் சிறப்பை மேலும் விவரித்துச் சொல்கிறது.
அதில் :

* “சிந்து வெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும்… என்று பாலகிருஷ்ணன் அடிக்கடி பொது வெளியில் முன்னிறுத்தும் சொற்றொடர்களின் பொருள் இப்போது புலனாகிறது !

சிந்து வெளி நாகரிகத்தில் பெரும்பான்மையாக காணப்படும் தாய்த் தெய்வ வழிபாடு – ஆதிச்சநல்லூரில் தொடர்கிறது !

வன்னி மரத்தின் முக்கியத்துவம் சிந்து வெளி தொடங்கி நாடெங்கும் பரவி நிறைந்திருக்கிறது ! தூத்துக்குடி அருகே கொற்கையில் இன்றும் தொன்மையின் குறியீடாக இருக்கிறது !

சிந்து வெளி முத்திரையில் காணப்படும் சேவல் சண்டை – இந்தளூர் கல் வெட்டில் காணப்படுகிறது !

மொகஞ்சதோராவின் திமில் கொண்ட காளை இன்றும் அலங்காநல்லூரில் வலம் வருகிறது !

கீழடியில் கிடைத்த குறியீடுகள் சிந்து வெளிக் குறியீடுகளுடன் ஒத்துப் போகின்றது !

சிந்து வெளி தொடங்கி தமிழகம் வரை கருப்பு சிவப்பு பானைத் தடம் தெளிவாக தெரிகிறது!” என்று இந்த நூலின் மொத்த ஆய்வுகளைப் பற்றிய விவரங்களை மிக நேர்த்தியாக பட்டியலிட்டுப் பாராட்டியுள்ளார் !

* இந்த நூலை இவ்வளவு ஆர்வமாக எழுதியதற்கான காரணத்தை நூலாசிரியர் ஆர். பாலகிருஷ்ணனே தன்னிலை விளக்கமாக தனது என்னுரையில் தந்துள்ளார் !
அதில் :

* “சிந்து வெளி மக்களின் எழுத்துக்களை வாசித்தறிய முடியாத சூழலில் அம்மக்கள் பேசிய மொழி எது? அம்மக்கள் என்ன ஆனார்கள்? எங்கே போனார்கள்? சிந்து வெளி மக்களின் வாழ்வியல் அனுபவத்தின் மீள் நினைவுகளை எந்த மொழியின் பண்டைய இலக்கியத்தில் கண்டறிய முடியும்? ஆகிய வினாக்களுடன், திராவிட மொழிக் குடும்பத்தின் தோற்றம் பற்றிய கருது கோள்கள் மற்றும் தொல் தமிழர் தொன்மங்கள் பற்றிய மீள் நினைவுகள் ஆகியவற்றிற்கும், சிந்து வெளிப் பண்பாட்டிற்கும் தொடர்பு கிடைக்கிறதா? என்ற வினாவையும் ஒரு நேர் கோட்டில் நிறுத்தி ஆய்வுக்கு உட்படுத்துவதே இந்த நூலின் மைய நோக்கமாகும் !”  என்று வெகு நீண்ட விளக்கத்தை அதற்கான காரணமாக தெரிவித்துள்ளார் !
இந்த நூலை ஆர்வமாக வாங்கிப் படிப்பதற்கும் இதே காரணங்களே போதுமானது !

* நூலில் 17 விரிவான தொகுதிகள் உள்ளன. அவைகள் பல தலைப்புகளில், நிறைய வரை படங்களுடனும், பட்டியல்களுடனும், புகைப் படங்களுடனும், ஓவியங்களுடனும் கொடுக்கப்பட்ட தரவுகளுக்கான ஆதாரங்களாக மிக நேர்த்தியாக தரப்பட்டுள்ளன !

* மனிதப் பயணத்தின் துவக்கம் முதல், சிந்து வெளி பண்பாட்டின் திராவிட அடித்தளம் பற்றியும் இடம் பெயரும் இடப் பெயர்கள் பற்றியும் பண்டைய தமிழகம், பழந்தமிழ் இலக்கியங்கள், சிந்து வெளி நகரங்கள், பானைத் தடம், திராவிட குஜராத் மற்றும் திராவிட மகாராஷ்டிரா, சிலம்பு, வன்னி மரம், விளையாட்டு பொருட்கள், ஆதிச்சநல்லூரும் கீழடியும் என ஏறத்தாழ 4500 ஆண்டுகால திராவிட வரலாற்று நீரோட்டத்தைப் பற்றிய முழு பயண விவரங்களை அறிந்து கொள்ள முடிகின்றது !

* சிந்து வெளிப் பண்பாட்டின் அடிப்படை பண்பியல் கூறுகளாக நூலாசிரியர் பட்டியலிட்டிருப்பதை ஒரு முறை படித்துப் பார்த்தாலே அவைகளைப் பற்றி வேதகால நாகரிகத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது தொல் இலக்கியங்கள் எதிலும் ஒரு குறிப்பைக் கூட எழுதாமல் விட்டதற்கு காரணம் – அவைகள் வேதகால மக்கள் (ஆரியர்கள்) இந்தியாவுக்குள் வருவதற்கு முன்பே இங்கே தோன்றி வளர்ந்து மறைந்து போனது தான் காரணம் என்று நமக்கு புரிய வரும் !

அந்த அடிப்படை பண்பியல்கள் :

* சிறந்த வடிவமைப்புடன் கூடிய நகரங்களை மையமாகக் கொண்டு நகரமயமான வாழ்வியல் ; சீரிய வடிகால்கள் ; நேர்த்தியான தெருக்கள் ; பொதுக் குளிப்பிடங்கள் ; தானியக் களஞ்சியங்கள் ; கடல் கடந்த வணிகத்தில் மேலோங்கிய திறன்; செம்பு, செங்கல் மற்றும் விதவிதமான மட்பாண்டங்கள்; சுடுமண் பொம்மைகள் ; விளையாட்டுப் பொருட்கள்; தாய் தெய்வ வழிபாடு ; வன்னி மர வழிபாடு; காளைகளுடன் சண்டை; பகடைக் காய்கள் மற்றும் சிவப்பு வண்ணத்தில் குறியீடுகள் ஆகியவை !

* சிந்து வெளிப் பண்பாட்டின் வாழ்விட பரப்பளவு பற்றிய தகவல்கள் நம்மை வியக்கச் செய்கிறது . இன்றைய இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய சுமார் 15 லட்சம் சதுர கிலோ மீட்டர் வரை பரவிய மாபெரும் பண்பாடு ஆகும் ! அந்த இடங்களின் விவரங்கள் :

* பாகிஸ்தானில் – மொகஞ்சோதாரோ ; ஹரப்பா; ஸுட்காஜென்; தோர் ஆகியவை.

இந்தியாவில் – தோலாவிரா ; காலி பங்கன் ; சுர்கோட்டடா ; லோத்தல் ; பனாவலி ; பாலா கோட்; ராக்கிரி மற்றும் தைமாபாத் ஆகியவை ஆகும்.

* சிந்து வெளி முத்திரைகள் பெரும்பாலும் காளை, யானை, கலைமான், எருது, காண்டாமிருகம், புலி மற்றும் ஒற்றைக் கொம்பு விலங்குகள்.

குதிரைகளும் சிங்கங்களும் பசுமாடுகளும் இதில் காணப்படவில்லை. அவைகள் வேதகால நாகரிக இலக்கியங்களில் காணப்படுகின்றன !

* சிந்து வெளி மக்களின் மொழி அநேகமாக ஒரு திராவிட மொழியாக இருந்திருக்க வேண்டும் என்பதில் பின்லாந்தைச் சேர்ந்த அறிஞர் அஸ்கோ பர்போலாவும் தமிழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஐராவதம் மகாதேவனும் ஒருமித்த கருத்தை தெரிவித்துள்ளார்கள் !

* இந்த நூலில் பல தகவல்கள் நமக்கு ஆர்வத்தையும் ஆச்சர்யத்தையும் தருவதாக அமைந்திருந்தாலும் எனக்கு மிகுந்த ஆர்வத்தை தந்த பகுதியாக – ‘இடம் பெயரும் இடப் பெயர்கள்’ என்ற புலம் பெயர் மக்களின் வாழ்வியல் சம்பந்தப்பட்ட தகவல்களையும் தரவுகளையும் தான் சொல்வேன் !

இந்த தரவுகளுக்காக நூலாசிரியர் எடுத்துக் கொண்ட முயற்சிகளுக்காகவே அவருக்கு முனைவர் பட்டம் வழங்கலாம் !

அது பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம் !

* ‘மனிதகுல வரலாற்றின் மிகத் தொன்மையான தொடர் மரபுச் சங்கிலி’ என்றும் ‘மனிதர்களின் பண்பாட்டுப் புவியியலின் (Cultural Geography) ஓர் அங்கம்’ என்றும் ‘இடப் பெயர்கள்’ பற்றி வருணிக்கிறார் நூலாசிரியர் !

* இடப்பெயர்களின் தோற்றம் மற்றும் அவற்றின் வரலாறு பற்றிய ஆய்வுக்களம் ‘இடப் பெயரியல் ‘ (Toponyms) என்ற நாம் அறியாத ஒரு துறையைப் பற்றியும் நமக்கு அறிமுகம் செய்து அதன் மூலம் தனது அயராத உழைப்பால் கிடைத்த தரவுகளை இங்கே வரவு வைக்கிறார்!

* புலம் பெயர் மக்கள்:
அவர்கள் விட்டுச் சென்றது மலை – எடுத்துச் சென்றது மலையின் பெயர்.
விட்டுச் சென்றது ஊர் – எடுத்துச் சென்றது ஊரின் பெயர்.
விட்டுச் சென்றது காடு –
எடுத்துச் சென்றது காட்டின் பெயர்.
விட்டுச் சென்றது கோயில் –
எடுத்துச் சென்றது கடவுளின் பெயர்.

* இவ்வாறு தான் ஊரின் பெயரும், இடப் பெயர்களும், கடவுளின் பெயர்களும், நம்பிக்கை மரபுகளும் கதை மரபுகளும் கதைப் பாடல்களும் புலம் பெயரும் மக்களோடு சேர்ந்தே புலம் பெயர்கின்றன ! ” உண்மையில் புலம் பெயரும் மக்களின் கையைப் பிடித்துக் கொண்டு கூடவே செல்கின்றன அவர்களின் கடவுள்களும்” என்று நூலாசிரியர் விவரிக்கும் போது அந்த அபலை கடவுளுக்காகவும் நமக்கு கண்ணீர் வருகின்றது !

* சிந்து வெளிப் பண்பாட்டு வாழ்வியல் இடங்களில் சங்க கால தமிழகத்தின் இடப் பெயர்களோடு ஒத்துப் போகும் இடங்களின் விவரங்களை ஒருங்கிணைத்து அவற்றிற்கு ‘கொற்கை – வஞ்சி – தொண்டி வளாகம்’ எனப் பெயரிட்டு அந்த ஆய்வின் அடிப்படையில் நூலாசிரியர் நூற்றுக்கணக்கான தகவல்களை வழங்கியுள்ளார்.

அவைகளில் சில :

* கொற்கை – வஞ்சி – தொண்டி பெயர்கள் கொண்ட வளாகத்தின் தரவுத் தளத்தை ஆய்வு செய்ய – பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் உள்ள தற்கால இடப்பெயர்களையும், இந்தியாவில் ஹரப்பா பண்பாட்டு தொடர்புடைய இடப்பெயர் களையும் சேர்த்து மொத்தம் 12, 66, 706 இடப் பெயர்கள் ஒருங்கிணைக்கப்பட்டன. அவற்றில் அறியப்பட்ட நூற்றுக்கணக்கான இடப் பெயர்களை பட்டியலிட்டு அந்தந்த பகுதி வரைபடங்களில் குறிக்கப்பட்டன !

அவற்றிலிருந்து ஒரு சில இடப்பெயர்கள் இங்கே மாதிரிக்காக :

* பாகிஸ்தான் நாட்டிலுள்ள இடப் பெயர்கள் –
பட்டி | சேரி | கை | கல் | மலை |
குமரி | வேண் | பன்றி | கோழி | ஆர்க்காடு | பாரி | கரிகாலன் | வாகை | காஞ்சி | ஈழம் .

* ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள இடப் பெயர்கள் –
ஊர் | கொற்கை | கல் | தென்பாண்டி | குமரி | அருவா | கோட்டை | துளு | பாரி | கரிகாலா | புகார் | பூம்புகார் | ஒளி | மலா | தலை.

* இந்த இடப் பெயர்களின் ஒப்பீடலிலிருந்து திராவிடப் பண்பாட்டின் அடித்தளம் சிந்துவெளிப் பண்பாடு என்ற கருதுகோள் எத்தனை பொருத்தமானதாக இருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

* சிந்து வெளிப் பண்பாட்டு வாழ்விடம் ஏதோ பல காரணங்களால், இயற்கை பேரிடர்களால், அழிந்து போய் அங்கிருந்த மக்கள் பல கால கட்டங்களில் புலம் பெயர்ந்து இந்தியாவின் வட மேற்கிலும் தெற்கிலும் வந்த பின்னர் தங்கள் புதிய வாழ்விடங்களை நிறுவி, அவ்விடங்களில் தங்களது மீள் நினைவுகளில் எடுத்து வந்த பெயர்களை புதிய இடங்களுக்கு சூட்டியிருக்கின்றார்கள் என்ற ஆய்வின் முடிவுக்கு வருகின்றார் நூலாசிரியர் ஆர். பாலகிருஷ்ணன் !

இதைவிட எல்லோரும் ஏற்றுக் கொள்ளும்படியான வேறு ஒரு சரியான ஆதாரத்தை இதுவரை யாரும் அறிவுத் தளத்தில் வைக்க வில்லை !

* சிந்து வெளிப் பண்பாட்டு பகுதிகளில் வழிப்பாட்டு தலங்களுக்கான அகழாய்வு தடயங்கள் எங்குமே கிடைக்கவில்லை. சுடுமண் பெண் உருவகங்கள் கிடைத்துள்ளன. இவை தாய்த் தெய்வ வழிபாட்டின் அடையாளங்கள்.

* தொல் பழங்காலத்தில் ஆரியர்கள் வாழ்ந்த எந்த இடத்திலும் பெண் தெய்வங்கள் தாய்த் தெய்வமாக முதல் நிலைக்கு உயர்த்தப்பட்டதற்கு சான்றுகள் எதுவுமில்லை என்று சர். ஜான் மார்ஷல் தெளிவாக கூறியுள்ளார் !

* இன்றும் தாய்த் தெய்வ வழிபாடு தென்னிந்தியாவில் தொடர்கிறது – மதுரையின் செல்லத்தம்மன் கோயில் (கண்ணகி நினைவாக), திருவனந்தபுரம் ஆற்றுக் கால் அம்மன் (கண்ணகி தெய்வமாக) மேற்கு தொடர்ச்சி மலையில் மங்களா தேவி கோயில் ஆகியவை.

* கண்ணகி அணிந்திருப்பது போலவே மொகஞ்சதாரோவில் வாழ்ந்த பெண்கள் காலில் சிலம்பு அணிந்திருந்தார்கள் என்ற தகவலும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று !

* சிந்து வெளிப் பண்பாட்டில் காணப்படும் காளைச் சண்டை முத்திரை தமிழகத்தில் இன்றும் தொடரும் ஜல்லிக்கட்டை நினைவு படுத்துகின்றது !

* சிந்து வெளியின் அழகிய திமிலுடன் கூடிய காளையின் முத்திரை தமிழகத்தின் காங்கேயம் காளையை நினைவு படுத்துகின்றது !

* சிந்து வெளிப் பண்பாட்டின் நகர்மய வாழ்க்கையை நினைவு கூறும் வகையில் செந்தமிழ் சங்க இலக்கியப் பாடல்கள் நம்மிடம் இருக்கின்றன !

* ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்டை ஓடுகள் ஹரப்பா பண்பாட்டு மக்களின் மண்டை ஓடுகளுடன் பொருந்திப் போகின்றதாம் !

* கீழடி அகழாய்வில் கண்டெடுத்த பானைக் கீறல்கள் சிந்து வெளி குறியீட்டை ஒத்திருக்கின்றதாம் !

அதனால் தான் நூலாசிரியர் ஆர். பாலகிருஷ்ணன், “சிந்துவெளி விட்ட இடமும் கீழடி தொட்ட இடமும் ஒன்று!” என மேடைதோறும் முழங்குகின்றார் !

* சிந்து வெளிப் பண்பாடு – வைகை நதிப் பண்பாடு – சங்க இலக்கியப் பாடல்கள் இவைகளை ஒரே கோட்டில் கொண்டு வந்து நிறுத்திய சாதனையும் பெருமையும் ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணனையே சாரும் !

* அவரது மொழியிலேயே சொல்ல வேண்டுமென்றால்
“சங்க இலக்கியம் என்பது – இன்னும் முழுவதுமாக வாசிக்கப்படாத கீழடி !
கீழடி என்பது – இன்னும் முழுமையாகத் தோண்டப்படாத சங்க இலக்கியம்!” 

* இனி இந்தியாவின் வரலாற்றை தெற்கிலிருந்து எழுதத் துவங்குங்கள் என்ற கோரிக்கைக்கு இந்த நூலே சரியான ஆதாரம் !
சரியான ஆவணம் ! !

* இந்த நூல் – சிந்து வெளிப் பண்பாட்டின் ஆகப்பெரிய ஆவணம் ; அருங்காட்சியகத்தின் அரியபொருட்கள் நிறைந்த அலமாரி ;
வரலாற்று திரைப்படத்தின் முந்தைய காட்சிகளின் கையேடு ;
நூலகத்தின் மதிப்பைக் கூட்டும் சிறந்த அடையாளம்;
ஆராய்ச்சி மாணவனுக்கு ஒரு என்சைக்ளோபீடியா;
ஆய்வாளனுக்கு அரியதொரு பொக்கிஷம்;
திராவிட இனத்திற்கான பேராயுதம் ;
எதிரிகளுக்கான நெருங்க முடியாத கோட்டை !

* இந்த பெரிய நூலை – எந்த தன்னலமும் கருதாமல், அரசுப் பணிகளுக்கிடையே அயராது உழைத்து, பயணித்து, நேரம் மற்றும் பணத்தை செலவிட்டு தமிழினத்தின் பாதுகாப்பிற்காக ஒரு மாபெரும் பணியை முடித்து தந்த நூலாசிரியர், திராவிடவியல் ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் அய்யாவை தமிழ் மக்களின் சார்பில் வாழ்த்தி வணங்கிய தோடு, தமிழ்நாடு அரசு அய்யாவின் இந்த சீரிய பணியை கௌரவப் படுத்தும் விதமாக அவருக்கு ‘தகைசால் தமிழர்’ விருதை வழங்கிப் பெருமைப்படுத்த வேண்டும் என வேண்டுகிறேன் !

திராவிடவியல் ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துகளும் வணக்கங்களும் !

பொ. நாகராஜன்,
பெரியாரிய ஆய்வாளர்,

*************

நூல்: ஒரு பண்பாட்டின் பயணம் – (சிந்து முதல் வைகை வரை)
ஆசிரியர்: ஆர். பாலகிருஷ்ணன்
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் வெளியீடு
பக்கங்கள் : 646
விலை : ரூ.3350/-

#ஒரு_பண்பாட்டின்_பயணம் #நூல் #ஆர்_பாலகிருஷ்ணன் #Oru_Panpattin_Payanam #r_balakrishnan #sindhu_mudhal_vaigai_varai #பண்பாட்டின்_பயணம் #சிந்து_முதல்_வைகை_வரை  

You might also like