அரசியல் கட்சிகளை ‘கிலி’ அடையச் செய்துள்ள ‘கில்லி’!

‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியை ஆரம்பித்து விக்கிரவாண்டியில், கட்சியின் முதல் மாநில மாநாட்டை பிரமாண்டமாக நடத்தி முடித்த நாளில் இருந்து, இந்த நொடிவரை விஜய்தான் தமிழகத்தின் பேசுபொருளாக இருக்கிறார்.

இந்துத்துவா, வாரிசு அரசியல், ஊழல் போன்ற காலாவதி விஷயங்களை பேசிக்கொண்டிருந்த தலைவர்கள், இன்றைக்கு விஜய் பெயரை உச்சரிக்காமல் தங்கள் பேட்டியை முடிப்பதில்லை.

அப்படி ஒரு தாக்கத்தை அரசியல் கட்சித் தலைவர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது, விக்கிரவாண்டி மாநாடு.

‘கடந்த தேர்தலில் இத்தனை சதவீத வாக்குகளை வாங்கினோம் – அதே ஓட்டுக்களை வருகிற தேர்தலிலும் வாங்குவோம்’ என எந்தக் கட்சியும் மார்தட்டி சொல்ல இயலாத அளவுக்கு அந்த மாநாடு ஒரு அலையை ஏற்படுத்தி இருப்பது நிஜம்.

சர்வ கட்சிகளின் வாக்குகளும், தவெக கட்சிக்கு மடைமாறிச்செல்ல வாய்ப்புகள் இருப்பதை மறுப்பதற்கில்லை.

எந்தக் கட்சியின் ஓட்டுகள், எத்தனை சதவீதம் விஜய் கட்சிக்கு செல்லும் என்பது தெரியாத நிலையில்தான், தமிழக அரசியலில் விஜய் இன்று மையப்புள்ளி ஆகியுள்ளார்.

மாநாட்டுக்கு முன்பாக, பொத்தாம் பொதுவாக, விஜய்க்கு வாழ்த்து சொன்னத் தலைவர்களின் போக்கில் இப்போது நிறைய மாற்றங்கள்.

சில தலைவர்கள், விஜயின் அரசியல் நிலைப்பாட்டை எதிர்த்து நேரடியாக – காட்டமாகவே விமர்சனம் செய்கிறார்கள். பலர், மவுனம் காக்கிறார்கள்.

முதலமைச்சர் ஸ்டாலின்

தவெக மாநாடு நடந்து முடிந்த கொஞ்ச நாட்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விஜய் குறித்து எதுவும் சொல்லவில்லை.

ஆனால், தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற ஸ்டாலின், விஜயை ஜாடையாக விமர்சனம் செய்தார்.

“யார் யாரோ வருகிறவர்கள், புதிது புதிதாகக் கட்சித் தொடங்குபவர்கள் எல்லாம் திமுக அழிய வேண்டும் – ஒழிய வேண்டும் என்ற நிலையில்தான் போய்க் கொண்டிருக்கிறார்கள் – அதற்கு ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால், அறிஞர் அண்ணா சொல்வார் –  ‘வாழ்க வசவாளர்கள்’ என்று, அதைத்தான் நான் சொல்ல முடியும்’ என அந்த விழாவில், ஸ்டாலின் தெரிவித்தார்.

வரும் நாட்களில், திமுகவுக்கு எதிராகவே விஜயின் நகர்வுகள் இருக்கும் என்பதை யூகித்துக் கொண்ட ஸ்டாலின், அதனை எதிர்கொள்ளத் தானும் தயாராகி விட்டதையே, இந்த விழாவில் சூசகமாகக் குறிப்பிட்டார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும், விஜயை நேரடியாகப் பின்னி எடுக்கிறார்கள்.

பொதுக்கூட்டமாக இருந்தாலும் சரி, செய்தியாளர்கள் சந்திப்பாக இருந்தாலும் சரி, திருமாவளவன், முதலில் விஜயை ஒரு பிடி பிடித்துவிட்டே, தான் பேச வந்த விஷயத்தை தொடர்கிறார்.

இரு தினங்களுக்கு முன்னர் விழுப்புரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய திருமாவளவன், விஜயை மட்டுமில்லாது, ஊடகங்களையும் சகட்டு மேனிக்கு விமர்சனம் செய்தார்.

‘விஜய் இப்போதுதான் கட்சி தொடங்கி இருக்கிறார் – அவருக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது அதீத முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது – அவர் நடத்திய மாநாட்டுக்கு இத்தனை லட்சம் பேர் வந்தனர், அத்தனை லட்சம் பேர் வந்தனர் என வியந்து வியந்து செய்தி போடுகின்றனர்.

விஜய் மாநாட்டுக்கு வந்த கூட்டத்தை, திரும்பத் திரும்ப காட்டிய காட்சி ஊடகங்கள், எங்கள் கள்ளக்குறிச்சி மாநாட்டுக்கு அப்படி ஒரு கவரேஜ் வழங்கவில்லையே ஏன்?.

எங்களைக் குறைத்து மதிப்பிடுவதே அதன் காரணம் – அந்த நிலை விரைவில் மாறும்’’ என கொந்தளித்தார், திருமாவளவன்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், அவரது கட்சியினரும் விஜயை விமர்சனம் செய்வதில்லை.

பாஜக மற்றும் இடதுசாரிகளுக்கு விஜயுடன் உடன்பாடும் இல்லை; விரோதமும் இல்லை. என்றாலும், மிருதுவாக அவரை விமர்சனம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சியும், பாமகவும் பெரிய அளவில் ‘ரியாக்ட்’ செய்யவில்லை.

எதிர்காலத்தில், குறிப்பாக தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், எத்தகைய கூட்டணி வேண்டுமானாலும் அமையலாம் என்பது, இந்தக் கட்சிகளின் கணக்கு.

என்ன செய்கிறார் விஜய் ?

இப்போது விஜய், ‘தளபதி-69’ என தற்காலிமாக பெயர் சூட்டப்பட்டுள்ள படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

எச்.வினோத் இயக்கும், இதன் படப்பிடிப்பு சென்னையில் முழு மூச்சாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் வசனப்பகுதி ‘ஷுட்டிங்’ கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. விரைவில் முழுப்படமும் நிறைவடைந்து விடும்.

படப்பிடிப்பை முடித்து விட்டு, தமிழகம் முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

– மு.மாடக்கண்ணு.

You might also like