ஆரோக்கியமான வாழ்க்கையின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் நவம்பர் 10-ம் தேதி உலக நோய்த் தடுப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.
உலகளாவிய சுகாதார விழிப்புணர்வு நிகழ்வாக இந்த நாள் பார்க்கப்படுகிறது. சரியான நேரத்தில் தடுப்பூசிகளைப் பெறுவதன் மூலம் தடுப்பூசியின் முக்கியத்துவம் மற்றும் பல்வேறு நோய்களிலிருந்து தற்காத்து கொள்ளவும், அதை எவ்வாறு தடுக்கலாம் என்பதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கம்.
ஆண்டுதோறும் பல்வேறு புதிய புதிய நோய்த்தொற்றுகளை நாம் எதிர்கொண்டு வருகிறோம். அதனை தடுக்கும் விதமாக மருத்துவத்துறையும் தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்து வருகிறது.
குழந்தை பிறப்பு முதல் பெரியவர்கள் வரை வயதுக்கு ஏற்றது போல் தடுப்பூசிகள் போடப்படுகிறது. பல்வேறு நோய்களை முன்னதாகவே தடுத்து உயிர்களை காப்பாற்றுவது தடுப்பூசியின் நோக்கம். தடுப்பூசி என்பது தற்காத்துக் கொள்ள மட்டுமே செயல்படுகிறது.
ஆரோக்கியமாக வாழ்வதற்கு இது மட்டும் போதாது. உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து, போதுமான அளவு தண்ணீர், வழக்கமான உடற்பயிற்சி, சரியான ஓய்வு, தூக்கம் மற்றும் உடல் நோய்களை கண்காணித்தல் ஆகியவை அடங்கும்.
நாகரிக உலகில் ஆடம்பர வாழ்க்கையில் மோகத்தால் இரவு, பகல் பாராமல் பணத்திற்காக ஓடிக்கொண்டே இருக்கின்றனர். தன்னைத்தானே கவனித்துக் கொள்ள நேரம் இருப்பதில்லை. அதன் விளைவு ஆரோக்கியம் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
ஒவ்வொரு மனிதனுக்கும் ஆரோக்கியம் என்பது எவ்வளவு விலை மதிப்பற்றது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
உதாரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சி ஒன்றில் சென்னையின் முன்னாள் மேயரும் மனிதநேய அறக்கட்டளையின் தலைவர் சைதை துரைசாமி அவர்கள் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பதவியில் இருந்த காலம். அந்த நிகழ்ச்சி குறித்து பேசிவிட்டு கூடியிருந்த மக்களிடம் உங்கள் வாழ்க்கையில் எதற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.
பலபேர் வேலை, குடும்பம், பதவி எனவும் சில பேர் சேவை என பலவிதமான பதில்களை கூறிவந்தனர்.
அப்போது சைதையார் அறிவு, பதவி, நம்பிக்கை, ஒழுக்கம், நாணயம், பிறர் தவறை மன்னித்தல், பிறருக்கு உதவி செய்தல் என பட்டியலிட்டு அடுக்கிக்கொண்டே போகலாம்.
ஆனால், இவற்றுக்கு எல்லாம் சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். அப்படியென்றால் ஆரோக்கியம் இருந்தால் தான் அனைத்தையும் செய்ய முடியும்.
ஆரோக்கியம் இல்லாத பதவி, பணம், கல்வி, பண்பு அனைத்தும் வீண். ஆகவே நமது வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக முதலில் கருத வேண்டியது ஆரோக்கியம் மட்டுமே.
இதுதான் நமது வாழ்க்கையின் முக்கியத்துவம் வாய்ந்ததாக முதலில் இருக்க வேண்டும். இதை நாம் என்றைக்காவது தேடி இருக்கிறோமா? என ஆரோக்கியத்தைப் பற்றியும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் அந்த வீடியோவில் கூறியிருந்தார் சைதையார்…
ஆகவே ஆரோக்கியம் என்பது நமது உடலின் செயல்பாட்டை தீர்மானிப்பது. அவர் கூறியது போல் எல்லாவற்றையும் நமது முயற்சியால் சாதித்து விட முடியும்.
ஆனால் ஆரோக்கியத்தை பற்றிய சிந்தனை இல்லாமல் ஓடிக்கொண்டே இருந்தால் வாழ்க்கை என்பது நரகமாக மாறிவிடும். உடல் ஆரோக்கியம் என்பது இல்லை என்றால் அனைத்து செல்வங்களும், பதவிகளும், பண்புகள் இருந்தும் பயன் இல்லை.
உடலின் செயல்பாடுகள் முடங்கிவிடும் போது நரகத்தின் வாசல் நமக்காக திறக்கும் என்பதை உணர வேண்டும். ஆரோக்கியம் முடங்கிவிடும் போது மகிழ்ச்சி, உறவுகள், நட்புகள் என பல உறவுகள் நம்மை விட்டு பிரிந்து விடும்.
ஒருவரை சார்ந்து இருக்கும் போது மன அழுத்தம் தொற்றிக்கொள்ளும், நமது சுதந்திரம் பறிபோகும். ஆகவே உடலில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
உலக நோய்த்தடுப்பு நாளான நவம்பர் 10 முதல் ஆரோக்கியத்திற்கு மட்டுமே முதலில் முக்கியத்துவம் கொடுப்பேன் என உறுதிமொழி எடுத்துக் கொள்வோம்.
உடல் என்ற சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். சைதையார் கூறியது போல் வாழ்க்கையின் பிரதானமாக ஆரோக்கியம் மட்டுமே முதலில் இருக்க வேண்டும் என்பதை நாம் அனைவரும் புரிந்து கொண்டு வாழ வேண்டும்.
– யாழினி சோமு