ஊடக வெளிச்சத்தை விரும்பாத கவிஞர் தாமரை, தற்போது முகநூலில் நேயர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கப்போவதாக அறிவித்துள்ளார். அந்தப் பதிவை வாசகர்களுக்காக இங்கே வழங்குகிறோம்.
“பொதுவாக நான் ஊடக வெளிச்சத்திற்கு வருவதில்லை. பல்லாண்டுகளாக நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்வதில்லை. யாரையும் சந்திப்பதுமில்லை. சற்று அமைதியாக இருப்போம் என ஒதுங்கி இருக்கிறேன். இருந்தாலும் அவ்வப்போது பலர் வருத்தப்படுகிறார்கள். நான் பேட்டிகள் தருவதில்லை, பாடல்கள் பற்றிப் பேசுவதில்லை, எங்கேயும் பார்க்க முடிவதில்லை என.
குறிப்பாக, என் பாடல்களுக்கு ஏராளமான இரசிகர்கள் உண்டு. என்னைப் பார்க்கவேண்டும், என்னோடு பேசவேண்டும் என்று பரபரப்பவர்கள் நிறைய!
தற்செயலாக வெளியில் சந்திக்கும்போது என்னிடம் பேசும் முன்பின் அறிமுகமற்றவர்களின் இரசனையும் பார்வையும் வியப்பில் ஆழ்த்தும்.
எப்படியும் யாரையும் நேரில் சந்திக்க இயலாது. ஆனால், நேயர்களுக்கு என்னிடம் கேட்க சிலபல கேள்விகள் இருக்கக்கூடும். அவற்றிற்குப் பதிலளிக்கலாம் என்று நினைக்கிறேன்.
சமரன் ‘இப்பதான் உனக்கு கை சரியாகியிருக்கு, அதுக்குள்ள எழுதிக் கெடுத்துக்காத’ என எச்சரிக்கை விடுத்தான்.
இன்னொரு யோசனை சொன்னான்: நீ ஏன் முகநூல் நேரலையில் அவங்களோட பேசக்கூடாது?
யோசித்துப் பார்த்துவிட்டு அதுசரியாக வராது என்று விட்டுவிட்டேன். தேதி நேரம் குறிப்பிட்டுவிட்டு பிறகு அதைக் காப்பாற்ற முடியாமல் போகும். மேலும், நேரலையெல்லாம் என்னவென்றே தெரியாது, அதற்கு முன்கூட்டி ஆயத்தமாக வேண்டும். பிறந்தநாளன்று நீலசிலுவைச் சங்கத்திற்குப் போவதால் எப்போது வீடு திரும்புவேனோ…
எனவே, ஒரு மாற்று யோசனை எழுந்தது. நேயர்கள் சிலரின் கேள்விக்கு முகநூலிலேயே விடையளிக்கலாம் எனத் தோன்றுகிறது. என் நேரம், பணிச்சுமை, விரல்நலம் அனுமதிக்குமளவுக்கு, வீட்டிலிருந்தபடியே எழுதி முகநூலில் பதிவிட்டு விடலாம்…
ஆகவே, அன்பார்ந்தவர்களே, என்னிடம் கேட்க விரும்பும் கேள்வியை என் தனிப்பெட்டிக்கு அனுப்புங்கள். என்னால் முடிந்தவரை, தேர்ந்தெடுத்து, கேள்வி-பதிலாக என் பக்கத்தில் வெளியிடுகிறேன்.