ஒரு தெலுங்குப் படம் எப்படி இருக்கும்?
ஐம்பதைத் தொடுகிற நிலையிலும், இருபதுகளைத் தொடாத நாயகியைத் துரத்தி துரத்திக் காதலிப்பவராக நாயகன் இருக்க வேண்டும்.
நாயகனுடன் மோதல், காதல், கனவு பாட்டு, ஆக்ஷன் காட்சிகளில் அவருக்கு உதவி செய்வதோடு கிளைமேக்ஸில் அவரையே கல்யாணம் செய்வதாக நாயக பாத்திரத்தை வார்க்க வேண்டும்.
ஹை டெசிபலில் கத்திக்கொண்டே மிகக்கொடூரமானவனாகத் தன்னை வெளிப்படுத்தி, நாயகன் முன்னே ‘டம்மி டப்பாஸ்’ ஆக வில்லன் பாத்திரம் நிற்க வேண்டும்.
ஒரு ஷாட்டில் தலை நீட்டும் பெண் பாத்திரங்கள் கூட கவர்ச்சிகரமாகத் திரையில் தெரிய வேண்டும். நகைச்சுவை நடிகர்களின் இரண்டாம் தர, மூன்றாம் தர கமெண்ட்களை ‘நகைச்சுவை’யாக கருத வேண்டும்.
சென்டிமெண்ட் காட்சிகளில் நாயகன், நாயகி சம்பந்தப்பட்டவர்கள் தவிர்த்து பெருங்கூட்டமே கண்ணீர் வடிக்க வேண்டும். இப்படிப் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்.
இந்த வட்டத்துக்குள் அமைந்த கதைகளைத் தாண்டி, ‘ஒரு மனைவி, ஒரு குழந்தையோடு வாழ்கிற ஒரு மனிதன்..’ என்று தொடங்கினாலே பல தெலுங்கு நட்சத்திரங்கள் ‘நோ’ சொல்லிவிடுவார்கள்.
மேற்சொன்ன இந்த வரையறைகளை மீறி நடிப்பதற்கு, நம்மூரிலும் சில நாயகர்கள் தயக்கம் காட்டியது வரலாறு. அதனைத் தகர்த்தெறிந்தவர்களே ஜொலிப்பார்கள் என்பதும் நாம் அறிந்ததே.
அதனை உணர்ந்தே துல்கர் சல்மான், மீனாட்சி சௌத்ரி ஜோடியைக் கொண்டு ’லக்கி பாஸ்கர்’ படைத்திருக்கிறார் இயக்குநர் வெங்கி அட்லூரி. இவர் தான் தனுஷை கொண்டு ‘வாத்தி’ தந்தவர்.
அந்தப் படத்திலும் கூடத் தெலுங்கு மசாலா பட வாடை கொஞ்சம் அதிகமிருக்கும்.
வருண் தேஜ், அகில், நிதின் என்று இளம் நாயகர்களோடு இணைந்து படங்கள் தந்தவர், ’வாத்தி’க்குப் பிறகு லக்கி பாஸ்கரை தமிழ், கன்னடம், மலையாளம், இந்தியில் மொழிகளிலும் ‘டப்’ செய்து ‘பான் இந்தியா’ படமாகத் தந்திருக்கிறார்.
அப்படியொரு நம்பிக்கையைத் தரும் அளவுக்கு ‘லக்கி பாஸ்கர்’ படத்தில் அப்படியென்ன இருக்கிறது?
பணத்தின் பின்னே துரத்தல்!
காதல் மனைவி சுமதி (மீனாட்சி சௌத்ரி), மகன் கார்த்திக் (ரித்விக்) மற்றும் தனது தந்தை, தம்பி, தங்கை ஆகியோரோடு ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார் பாஸ்கர் (துல்கர் சல்மான்). குடும்பத்தினரின் நலன்களுக்காகச் சிறிது சிறிதாக வாங்கிய கடன் அவரைத் துரத்துகிறது.
அந்த பணத்தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களுக்குச் சில சகாயங்கள் செய்து தருகிறார் பாஸ்கர்.
’நிறைய சேவைகளை வங்கிக்குப் பெற்றுத் தந்தால் புரோமோஷனுக்கு பரிந்துரைக்கிறேன்’ என்று கிளை மேலாளர் சொல்கிறார். அதனால், ரொம்பவும் சின்சியராக வேலை பார்க்கிறார் பாஸ்கர். சட்டவிரோதமான செயல்களில் அவர் அறவே ஈடுபடுவதில்லை.
இந்த நிலையில், பாஸ்கர் பெற வேண்டிய பதவி உயர்வை இன்னொரு நபருக்குப் பெற்றுத் தருகிறார் அந்த மேலாளர். உண்மை தெரிந்து அவரிடம் சண்டையிடச் செல்கிறார் பாஸ்கர்.
பாஸ்கரை அவமானப்படுத்திப் பேசுவதோடு, அனைத்து பணியாளர்களும் பார்க்கும் வண்ணம் நடந்து கொள்கிறார் அந்த மேலாளர்.
அவமானம் பிடுங்கித் தின்ன, அங்கிருந்து அகல்கிறார் பாஸ்கர். அரை மணி நேரம் கழித்து, எதுவும் நடக்காதது போல அனைவரிடமும் சகஜமாகப் பழகுகிறார். ஆனால், அவரது செயல்பாடுகளில் பெருமாற்றம் தெரியத் தொடங்குகிறது.
ஆண்டனி என்பவர் சில சட்டவிரோதமான செயல்களைச் செய்யப் பண உதவி வேண்டும் என்று கேட்கிறார். முதலில் அவர் கேட்ட வங்கிக்கடனைப் பெற்றுத் தர மறுக்கும் பாஸ்கர், மேற்சொன்ன சம்பவத்திற்குப் பிறகு வங்கி வாடிக்கையாளர்களின் பணத்தை அவருக்குக் கொடுக்கிறார்.
அடுத்த நாளே அத்தொகையைச் சிறிது லாபத்துடன் சேர்த்து தருகிறார் ஆண்டனி. அதற்கடுத்த நாள் அதனை வங்கியில் சேர்த்துவிடுகிறார் பாஸ்கர்.
இந்த செயல்பாடு சில நாட்கள் தொடர்கிறது. இதில் அவர்கள் இருவரோடு பியூன் ஒருவரும் இணைந்திருக்கிறார். மூவருமே பணத்தை அள்ளுகின்றனர்.
பாஸ்கரின் பாதை விலகல், அவரது வாழ்வை அடியோடு புரட்டிப் போடுகிறது. கடன்கள் தொலைகின்றன. உடனிருப்பவர்கள் வியப்பாகப் பார்க்கத் தொடங்குகின்றனர்.
அந்த நேரத்தில், ஆண்டனி வெளிநாட்டுக்குச் சென்று செட்டில் ஆகிறார்.
அதனைத் தொடர்ந்து, எதிர்பாராத சில விஷயங்கள் நிகழ்கின்றன. பாஸ்கருக்கு பதவி உயர்வு கிடைக்கிறது. அதுவும் அந்த வங்கியின் உதவி பொது மேலாளர் பதவி. அவரது வாழ்வே தலைகீழாகிறது.
அந்த நிலையில் லட்சங்களில் நிகழும் பொருளாதாரக் குற்றங்களுக்கு உடந்தையாக இருக்க வேண்டிய சூழல் நேர்கிறது.
பணம் வாங்கிக்கொண்டு, அதனைச் சொல்பவர்களுக்கு அடிமையாக இருக்க வேண்டிய நிலை. ஆனால், பாஸ்கர் அதனைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்.
அதனால் என்ன விளைவுகள் ஏற்பட்டன? அவரது குடும்ப வாழ்க்கை புதிய சூழ்நிலையால் பாதிப்புக்குள்ளானதா? புதிதாக ஏதேனும் ஆபத்துகள் ஏற்பட்டனவா? பாஸ்கர் என்ன செய்தார் என்ற கேள்விகளுக்குப் பதிலாக அமைகிறது இப்படத்தின் இரண்டாம் பாதி.
ஒரு வங்கி ஊழியரின் கணக்கில் நூறு கோடி ரூபாய் பணம் இருப்பதாகச் சொல்வதே இடைவேளைக் காட்சியாக இருக்கிறது.
இதிலிருந்தே, இப்படத்தின் இரண்டாம் பாதி எப்படிப்பட்டதாக இருக்குமென்று நம்மால் யூகிக்க முடியும்.
அதற்கேற்ப திரைக்கதை ‘ரோலர் கோஸ்டர்’ போன்று பயணிக்கிறது. அதே நேரத்தில், தொண்ணூறுகளில் நிகழ்வதாகக் கதை வடிவமைக்கப்பட்டிருப்பதால் ‘கிளாசிக்’ படம் பார்த்த உணர்வு தொற்றுகிறது.
அந்த உணர்வு படம் பார்த்து முடிக்கும் வரை தொடரச் செய்திருப்பதுதான் இயக்குனர் வெங்கி அட்லூரியின் வெற்றி.
’தூண்டில்’ உத்தி!
சாதாரண மனிதர்களைப் போன்றில்லாமல் ஒரு அசாதாரணமானவனாக நாயகனைக் காட்டுவது ‘கமர்ஷியல்’ படங்களுக்கான விதி.
அதேநேரத்தில், அந்த நாயகன் நம்மைப் போன்றே இருக்கிறான் என்று பார்வையாளர்களை உணர வைத்துவிட்டு பின்னர் ‘ஹீரோயிசத்தை’ அள்ளிக் கொட்டுவது இன்னொரு வகை உத்தி.
அது தூண்டிலில் மாட்டிய மீனாகப் பார்வையாளர்களைப் பிடித்திழுப்பது. அதனைச் சாதித்திருக்கிறது ‘லக்கி பாஸ்கர்’.
உண்மையைச் சொன்னால், இது நானி மாதிரியான ஒரு தெலுங்கு நாயகன் நடித்திருக்க வேண்டிய படம்.
அல்லு அர்ஜுன், ஜுனியர் என்.டி.ஆர். மாதிரியான நட்சத்திரங்கள் நடித்திருந்தால், இது ஒரு ‘எவர்க்ரீன்’ பிளாக்பஸ்டர்.
ஆனால், அந்த வாய்ப்பு துல்கர் சல்மானைத் தேடி வந்திருக்கிறது. அதனைச் சரியாக உணர்ந்து, அவரும் நடித்திருக்கிறார். அது அவரை ‘பான் இந்தியா’ நட்சத்திரமாக உயர்த்தும்.
போலவே, மீனாட்சி சௌத்ரி தனது ஆரம்ப காலத்திலேயே இது போன்றதொரு பாத்திரத்தில் நடிக்க வேண்டிய தேவை கிடையாது.
ஆனால், அவர் அதனை ஏற்று நடித்திருக்கிறார். எதிர்காலத்தில் இது போன்ற சவாலான பாத்திரங்களை ஏற்றால் ‘குறிப்பிடத்தக்க நடிகையாக ஆவார்’ என்பதற்கான அறிகுறியாக இதனைக் கருதலாம்.
மாஸ்டர் ரித்விக் இதில் இரண்டொரு காட்சிகளைத் தனக்கானதாக ஆக்கியிருக்கிறார். ஒரு ஷாட்டில் கூட ‘சுமார்’ என்று சொல்லும்படியாக நடிக்கவில்லை.
ராம்கிக்கு இதில் ஒரு முக்கியப் பாத்திரம். முன்பாதியோடு அவரது இருப்பு முடிந்து போயிருப்பது வருத்தம் தரும் விஷயம்.
இன்னும் சாய்குமார், சச்சின் கடேகர், டினு ஆனந்த், சுதா உட்பட சுமார் ஒன்றரை டஜன் பேர் இதில் முதன்மை பாத்திரங்களில் வந்து போயிருக்கின்றனர்.
துல்கரின் தந்தையாக நடித்தவர், பியூன் ஆக நடித்தவர், பங்குச்சந்தை நிறுவனமொன்றின் புரோக்கர் ஆக இருப்பவர் என்று ஒவ்வொருவரும் சிறப்பாக நடித்திருக்கின்றனர்.
நீலம், சாம்பல் மற்றும் முதன்மையான வண்னங்களை வெளிறிப்போனதாகக் காட்டும் பிரேம்கள் வழியாக, தொண்ணூறுகளில் நிகழ்கிற கதை என உணரச் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி. டிஐ நுட்பம் கனகச்சிதமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
படத்தொகுப்பாளர் நவீன் நூலி, கதைக்குச் சம்பந்தமற்ற ஒரு காட்சியை, ஷாட்டை கூட இணைக்கவில்லை. தெலுங்கு கமர்ஷியல் படங்களில் இப்படியொரு கதை சொல்லலைப் பார்ப்பது அரிது.
கலை இயக்குநர் பங்லான், திரையில் எத்தகைய சூழல் தென்பட வேண்டுமென்ற தீர்க்கமான பார்வையோடு பணியாற்றியிருக்கிறார். கதை நிகழும் களங்களில் பலவற்றை ‘செட்’ போட்டிருப்பது கேமிரா நகர்வு முதல் நுணுக்கமான காட்சி வடிவமைப்பு வரை பலவற்றுக்கு உதவியிருக்கிறது.
இன்னும் ஆடை வடிவமைப்பு, ஒப்பனை, ஒலி வடிவமைப்பு என்று பல அம்சங்கள் இதிலுண்டு.
டப்பிங் படம் என்றபோதும், ‘இது ஒரு நேரடிப் படம்’ என்று எண்ண வைக்கின்றன வசனங்கள். பாத்திரங்களின் வாயசைப்போடு பொருந்துவது மட்டுமல்லாமல் இயல்பான பேச்சு வழக்கிலும் அது அமைந்துள்ளது.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்தில் தந்திருக்கும் பின்னணி இசை, நம்மைப் படத்தோடு ஒன்றச் செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக, பின்பாதியில் நம்மை கூஸ்பம்ஸ் ஆக்கும் காட்சிகளில் அது நிகழ்கிறது.
நாயகன் தனது குடும்பத்தோடு ஒரு நகைக்கடைக்குச் செல்லும் காட்சி அதற்கான உதாரணங்களில் ஒன்று.
அந்த காட்சிக்குப் பெரியவர்களும் இருக்கை மீது ஏறி நின்று விசிலடிப்பார்கள். அதற்கு பின்னணி இசையும் ஒரு காரணம்.
‘கொல்லாதே’, ‘லக்கி பாஸ்கர்’ பாடல்கள் முதன்முறை கேட்கும்போதே மனதோடு ஒட்டிக்கொள்கிற ரகம்.
இயக்குநர் வெங்கி அட்லூரி, இந்தப் படத்தை முற்றிலும் புதுமையாகப் படைத்திருக்கிறார் என்று சொல்ல முடியாது. ஆனால், தெலுங்கு சினிமா ரசிகர்கள் பெரிதாகப் பார்த்திராத காட்சியாக்கத்தை இதில் தந்திருக்கிறார்.
குறிப்பாக மனைவி, குழந்தையோடு வாழும் ஒரு கணவனும் கூடத் திரையில் ‘ஹீரோயிசம்’ காட்ட முடியும் என்று சொல்லியிருப்பது அருமை.
இத்தனைக்கும் இதில் மயிர்க்கூச்செறிய வைக்கும் ‘ஆக்ஷன்’ காட்சிகள் கிடையாது.
காசாளரின் பணி, வங்கியின் தினசரிச் செயல்பாடு தொடங்கிப் பங்குச்சந்தைகளின் செயல்பாடு, பங்குகளை வாங்குவது மற்றும் விற்பது, முறைகேடாக வரும் பணத்தை வருமானமாக மாற்றிக் காட்டுவது என்பது வரை பல விஷயங்களைப் பேசுகிறது ‘லக்கி பாஸ்கர்’. அந்த விஷயங்களைப் புரிந்துகொள்வதில் சிக்கல் நேரலாம். அது மட்டுமே இப்படத்தின் மிகப்பெரிய குறை.
பங்குச்சந்தை செயல்பாடுகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் உதாரணம் காட்டும் வகையில் இப்படம் அமைந்திருக்கிறது. அது சிலருக்கு எரிச்சலைத் தரலாம்.
கோவாவுக்கு தன் சகாக்களுடன் நாயகன் திடீர் பயணம் மேற்கொள்வது, தன்னை அவமானப்படுத்திய நகைக்கடைக்குக் குடும்பத்துடன் மீண்டும் செல்வது, பத்தாவது வயதில் முதன்முறையாக பிறந்த நாள் கொண்டாடும் நாயகனின் மகன் நெகிழ்ச்சியில் அழுவது என்று ‘லக்கி பாஸ்கர்’ படத்தில் ‘கூஸ்பம்ஸ் மொமண்ட்’கள் நிறைய இருக்கின்றன. அவை அனைத்தும் ‘லாஜிக் மீறல்கள்’ நிறைந்த சினிமாத்தனமான காட்சிகள் தான்.
ஆனால், அவற்றையும் யதார்த்தமாக ஏற்றுக்கொள்ளச் செய்வதுதான் இப்படத்தின் வெற்றி. இதில் தெலுங்கு பட வாடை கொஞ்சம் கூடக் கிடையாது. அதுவும் ஒரு சிறப்பு தான்.
’லக்கி பாஸ்கர்’ படம் சம்பந்தப்பட்ட நடிப்புக்கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இதன் வெற்றி ஏற்றத்தைத் தரும். முக்கியமாக, தெலுங்கு படவுலகில் நாயக நடிகர்களின் கதைத்தேர்வில் மாற்றம் நிகழும்.
இது போன்ற பல நம்பிக்கைகளை ரசிகர்களிடத்தில் ஏற்படுத்தியிருப்பதுதான் ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் மிகப்பெரிய வெற்றி.
- உதயசங்கரன் பாடகலிங்கம்