துறுதுறுப்பு, செய்யும் வேலையில் நேர்த்தி, அதற்கான உற்சாகம்- இப்படித்தான் கே.வி.ஆனந்த் என்றதும் பலருடைய மனதில் பிம்பங்கள் ஓடும்.
வங்கி மேலாளராக இருந்தவர் ஆனந்தின் அப்பா.
இளம் வயதில் காமிரா மீது அபாரப் பிரியம் கே.வி.ஆனந்துக்கு. அவருடைய இருபது வயதை ஒட்டி போட்டோகிராபராக அவரைச் சந்தித்தபோது, அவருடைய அகன்ற முகத்தில் ததும்பும் உற்சாகம்.
அவருடைய கையில் அடங்கிய குழந்தையைப் போல ஒரு காமிரா. அதற்கான விசேஷ லென்ஸ்கள்.
எண்பதுகளில் அப்போது கல்கி வார இதழுக்காக “மாதம் ஒரு மாவட்டம்” என்ற தொடருக்காகப் பல மாவட்டங்களில் ஒரு வார காலம் காரில் அலைந்து திரும்புவோம்.
கல்கி ஆசிரியர் குழுவில் இருந்த இளங்கோவன், நண்பர் ப்ரியன், நான் இவர்களுடன் இள வயதுக்கே உரிய துடிப்போடு எங்களுடன் பயணித்தவர் கே.வி.ஆனந்த். குதூகலமாய்ப் போகும் அந்த நாட்கள்.
பத்திரிகைத் தேவைக்கேற்ப எடுப்பதோடு, தன்னுடைய விருப்பத்திற்கென்று தனியாகச் சில படங்களை எடுப்பார் ஆனந்த். எடுத்த விதம் அவ்வளவு அருமையாக இருக்கும்.
முண்டந்துறை காட்டுப் பகுதிக்குள் அடர் வனத்தில் அவர் எடுத்திருந்த படங்கள் அவ்வளவு பசுமையுடன் கல்கி அட்டைப்படத்தில் வெளியானது. அப்படிப் பல படங்கள்.
கலைஞரை மிகவும் வித்தியாசமான கோணத்தில் ஒளியால் கோடு போட்ட மாதிரி ஆனந்த் எடுத்த அழகான புகைப்படம் இல்லஸ்டிரேட் வீக்லி இதழில் வெளியானது.
புகைப்பட ஜெர்னலிசத்தில் ஆழ்ந்த ஈடுபாடு இருந்தது. அவரை இந்தியா டுடே, அஸைட் இதழ்களின் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்திய பிறகு அதில் உற்சாகத்தோடு பணியாற்றினார்.
‘அஸைட்’ ஆங்கில இதழில் தமிழகத்தில் நிலவும் தீண்டாமையைக் குறியீடாக உணர்த்தும் விதமாக ஆனந்த் எடுத்த புகைப்படங்கள் மிகுந்த உயிர்ப்போடு அட்டைப் படத்தில் வெளியாயின.
வார இதழில் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு போட்டோகிராபர் ஆகும் வாய்ப்பை இழந்தபோது, சில நாட்கள் வருத்தப்பட்டார்.
சட்டென்று அதிலிருந்து மீண்டு பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளராகச் சேர்ந்தார்.
ஆனந்தின் துடிப்பு குறுகிய காலத்தில் அவரை முன்னேற்றியது.
மோகன்லால் நடித்த ‘தேன்மாவின் கொம்பத்து’ மலையாளப் படத்தை அற்புதமாக ஒளிப்பதிவு செய்து தேசிய விருதைப் பெற்றுக் கவனிக்க வைத்தார். (அந்தப் படம் தான் தமிழில் ‘முத்து’ என மொழியாக்கம் செய்யப்பட்டு சக்கைப் போடு போட்டது.)
பிறகு ‘காதல் தேசம்’, ‘நேருக்கு நேர்’ உள்ளிட்ட பல படங்களில் ஒளிப்பதிவின் மூலம் கவனிக்க வைத்தார். நேருக்கு நேர் படத்தில் நெகட்டிவ் எஃபெக்டை ஒரு பாடல் காட்சியில் இடம்பெறச் செய்தபோது, சர்வதேசப் பாராட்டு அவருக்குக் கிடைத்தது.
அதன் பிறகு திரைத்துறையில் டிராக்கை மாற்றி இயக்குநர் ஆனார்.
‘கனாக் கண்டேன்’ முதல் ‘அயன்’, ‘கோ’, ‘மாற்றான்’ என்று பல படங்களை இயக்கி வணிகரீதியான வெற்றியைப் பெற்றார்.
அவருடன் ஆரம்ப காலத்தில் பழகிய எழுத்தாளர்களான சுபா போன்றவர்களுக்கு வாய்ப்புக் கொடுத்தார்.
‘கோ’ படத்தில் அவருக்கு நெருக்கமானவர்களின் பத்திரிகையுலக அனுபவங்களைப் பதிவு செய்திருப்பார்.
வேலையில் கறாரான முனைப்புக் கொண்ட அவருடன் பழகும்போது, அவருடைய சிரித்த முகம் தான் நினைவுக்கு வரும்.
சென்னையில் உள்ள அவருடைய வீட்டிற்கு நடிகை ரோகிணி உள்ளிட்ட குழுவினருடன் போனபோது, சிரிப்புடன் வரவேற்று வீட்டில் உள்ள அனைவருடனும் உரிமையோடு அறிமுகம் செய்து கொண்டிருந்தார்.
“ஒருத்தர் வளர்ந்த பிறகு பல பேர் உதவ முன்வரலாம். ஆனா வெறும் போட்டோகிராபரா இருந்தப்போ பல பத்திரிகை ஆபீஸ்களுக்கு என்னைக் கூட்டிட்டுப் போய் அறிமுகப்படுத்தினவர் இவர்” என்று ஆன்ந்த் புன்சிரிப்புடன் மற்றவர்களிடம் சொன்னபோது கூச்சமாக இருந்தது.
கே.வி.ஆனந்தின் நினைவுகளுக்கு அஞ்சலி!
– மணா