பிரியங்காவை சமூக சேவைக்கு அழைத்த அன்னை தெரசா!

வயநாடு பிரச்சாரத்தில் அவரே வெளியிட்ட தகவல்

கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக, அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். கடந்த 23-ம் தேதி அவர் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். அப்போது அவரது தாயார் சோனியா, சகோதரர் ராகுல், கணவர் ராபர்ட் வதேரா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

அதன்பின் டெல்லி சென்ற பிரியங்கா, மீண்டும் வயநாட்டுக்கு வந்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நேற்று பிற்பகல் மீனங்காடி, பனமரம், பொழுதனா உள்பட பல்வேறு பகுதிகளில் அவர் சூறாவளிப் பிரச்சாரம் செய்தார்.

மீனங்காடி பகுதியில் நடந்த கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேசும்போது, ’’வயநாடு தொகுதியில் என்னை எம்.பி.யாக தேர்வு செய்வதன் மூலம், நாட்டின் மிகவும் பெருமைமிக்க நபராக நான் மாறுவேன்.

நீங்கள் என்னை தேர்ந்தெடுத்தால் அது எனக்கு கிடைக்கும் மிகப்பெரிய கவுரவமாகும். வயநாட்டிலுள்ள மக்கள் மிகவும் தைரியசாலிகள் என்று  தெரியும்’’ என குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய பிரியங்கா, ‘’நீங்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடியவர்கள் – உங்களுடைய அன்புக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்போது நாட்டில் உள்ள பல்வேறு சமூகங்களுக்கு இடையே அச்சமும் கோபமும் பரவி வருகிறது. சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன’’ என சொல்லி மத்திய பாஜக அரசை நேரடியாகவே சாடினார்.

ஆசிரியர் பணியாற்றிய அனுபவம்!

அன்னை தெரசா அழைப்பின் பேரில், குழந்தைகளுக்கு இந்தி, ஆங்கிலம் கற்றுக்கொடுத்து, கொஞ்சகாலம் ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவத்தை, இந்தக் கூட்டத்தில் பிரியங்கா பகிர்ந்து கொண்டார்.

‘’சில நாட்களுக்கு முன்னர், நான் வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்தபோது பல்வேறு மக்களோடு பேசினேன். அவர்களில் ராணுவ வீரரும் ஒருவர் – அவர் என்னிடம், தனது அம்மா என்னை சந்திக்க விரும்புவதாகக் கூறினார். அவருடைய வீட்டுக்குச் சென்றேன்.

அவர், என்னை அவரது குழந்தையைப் போல்  கட்டிப்பிடித்தார் – வயநாட்டில் எனக்கு ஓர் அம்மா இருப்பது போல் உணர்ந்தேன். அவர் என்னிடம் ஜெபமாலையைக் கொடுத்து, எனது அம்மாவிடம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அப்போது கடந்த கால சம்பவம் ஒன்று நினைவுக்கு வந்தது – அதனை நான் பொதுவெளியில் பகிர்ந்தது கிடையாது – பொருத்தமாக இருப்பதால் இப்போது பகிர்கிறேன்” எனத் தெரிவித்த பிரியங்கா, அந்த நிகழ்வை விவரித்தார்.

‘’அப்போது ​​எனக்கு 19 வயது இருக்கும் – என் தந்தை இறந்து ஆறு, ஏழு மாதங்களுக்குப் பிறகு, அன்னை தெரசா, என் அம்மாவைச் சந்திக்க எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார்.

அப்போது எனக்கு கடுமையான காய்ச்சல் – நான் படுக்கையிலேயே இருந்தேன் – அறையை விட்டு வெளியே வராமல் இருந்த என்னைப் பார்க்க அன்னை தெரசா எனது அறைக்கே வந்தார்.

என் தலையில் கை வைத்து ஆசீர்வதித்தார் – எனக்கு ஒரு ஜபமாலையைக் கொடுத்தார் – அப்பா இறந்த சோகத்தாலும், காய்ச்சல் காரணமாகவும் நான் மிகவும் சோர்வுடன் இருந்ததை அறிந்த அன்னை தெரசா, “நீங்கள் என்னோடு சேர்ந்து சேவை செய்ய வர வேண்டும்” என்று அழைப்பு விடுத்தார்.

“ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, எனக்கு திருமணமாகி, எனக்கென்று குடும்பம் என ஆனபிறகு டெல்லியில் அன்னை தெரசாவின் சகோதரிகளோடு சேர்ந்து பணிபுரியத் தொடங்கினேன்.

குழந்தைகளுக்கு ஆங்கிலம், இந்தி சொல்லிக் கொடுத்தேன் – இந்தத் தகவலை நான் இதுவரை வெளியே சொன்னதில்லை – இப்போதுதான்  முதல்முறையாக இதை நான் பொதுவெளியில் பகிர்கிறேன்.

குளியலறையை சுத்தம் செய்வது, தரையைச் சுத்தம் செய்வது, சமையல் செய்வது, குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்வது என பல்வேறு பணிகளைச் செய்தேன்

அப்போதுதான் அவர்களின் துயரம், வலி ஆகியவற்றை நான் புரிந்துகொள்ளத் தொடங்கினேன். பாதிக்கப்படும் மக்களுக்கு எவ்வாறு நாம் ஒன்றாக சேர்ந்து உதவ முடியும் என்பதும் புரிந்தது” என பிரியங்கா சொன்னபோது, கூட்டத்தில் ஒரு இறுக்கம் நிலவியது.

பிரியங்கா இன்று திருவம்பாடி,  நீலாம்பூர் உள்ளிட்ட இடங்களில் வாக்கு சேகரிக்கிறார். உள்ளூர் காங்கிரஸ் கட்சியினர், வாக்குச்சாவடி வாரியாகக் குழு அமைத்து, பிரியங்காவுக்கு ஆதரவாக தீவிரப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

மனுத் தாக்கல் செய்யும் முன்பாக வயநாட்டில் பல லட்சம் பேர் திரண்ட பொதுக் கூட்டத்தில் பிரியங்கா உரை நிகழ்த்தினார்.

நேற்றும் இன்றும் 2-ம் கட்ட பிரச்சாரம் செய்துள்ள அவர், இன்னும் சில தினங்களில் மூன்றாவது கட்ட பிரச்சாரம் செய்யவும் முடிவு செய்துள்ளார். இந்த முறை அவர் பெரும்பாலும் தெருமுனைக் கூட்டங்களில் பங்கேற்றுப் பேச உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

– மு.மாடக்கண்ணு.

You might also like