ஈழத் தமிழருக்கு எதிரானதா ‘ஒற்றைப் பனைமரம்’ திரைப்படம்?

இயக்குநர் புதியவன் இராசையா பேட்டி

தமிழ்நாடு முழுதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘ஒற்றைப் பனைமரம்’ திரைப்படம் குறித்த ஒரு சர்ச்சை கவனத்தை ஈர்த்துள்ளது.

‘ஈழப் போராட்டத்தை இழிவு செய்யும் இந்தப் படத்தை தமிழ்நாட்டில் திரையரங்குகளில் திரையிடக்கூடாது’ என நாம் தமிழர் கட்சியின் சீமான் காட்டமாக அறிக்கைவிட்டார்.

இந்த நிலையில், “சீமான் அறிக்கைக்குப் பிறகு, பல திரையரங்க உரிமையாளர்கள் படத்தை வெளியிட ஆர்வமாகக் கேட்டார்கள்; தற்போது சுமார் ஐம்பது திரையரங்குகளில் படம் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கிறது” என்கிறார் படத்தை இயக்கி, நாயகனாக நடித்திருக்கும் புதியவன் இராசையா.

இவர், இலங்கையில் புலிகள் மையம் கொண்டிருந்த வன்னிப் பகுதியில், பிறந்து வளர்ந்தவர். பிளாட் இயக்கத்தின் அரசியல் பிரிவில் செயல்பட்டவர்.

சிங்கள ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டு வெளியில் வந்த பிறகு, அகதியாக பிரிட்டனில் குடியேறினார். அங்கு பல்வேறு படிப்புகளை படித்த இவர், ‘மண்’ என்கிற திரைப்படத்தை இயக்கினார். இது ஈழத்தமிழருக்கும் மலையகத் தமிழருக்குமான உறவுச் சிக்கல் குறித்த படம்.

தற்போது, ‘ஒற்றைப் பனைமரம்’ திரைப்படத்தை இயக்கி நடித்து உள்ளார்.

படம் தொடர்பான சர்ச்சையான விசயங்கள் குறித்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்:

@ இலங்கையின் வடக்கு, கிழக்கு ஈழப் பகுதியின் இன்றைய நிலையை எடுத்துக்காட்ட முயன்று இருக்கிறீர்கள். போருக்குப் பிறகு சரணடையும் தமிழப் பெண்களில் ஒருவரை சிங்கள ராணுவ அதிகாரி பலாத்காரம் செய்வது.. வெள்ளை வேன் அராஜகங்கள்… கணவனை இழந்த தமிழ்ப்பெண் தனது பிள்ளைகளுக்காக விபசாரத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயம்.. முன்னாள் போராளிகளை பெரும்பாலான மக்கள் மதிக்காத தன்மை… சாதிய ஏற்றத்தாழ்வு… இப்படி பல விசயங்களை காட்சிப்படுத்தி இருக்கிறீர்கள்…!

# போருக்குப் பிறகும் எமது மக்களின் துயரம் தொடர்கிறது. அதைப் பதிவு செய்ய விரும்பினேன். அந்த பிரச்சினைகள் குறித்து விவாதம் எழ வேண்டும், எமது மக்களுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே என் நோக்கம்.

@ 1990களில், ஈழப்பகுதியில் வசித்த இஸ்லாமியர்கள் சிங்களவர்களுடன் இணைந்து தமிழருக்கு எதிரான ஆயுத தாக்குதலில் ஈடுபட்டனர் என்றும் அதன் காரணமாக அவர்களை புலிகள் வெளியேற்றினர் என்றும் படித்து இருக்கிறேன்… இதற்கு பின்னாட்களில் புலிகள் வருத்தம் தெரிவித்ததாவும் படித்திருக்கிறேன்.

சுமார் 34 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு விசயத்தை மீண்டும் கிளறும்படியாக, ‘அது ஒரு வரலாற்றுப் பிழை’ என்ற வசனம் படத்தில் வருகிறது. பழைய ரணங்களை கிளறுவது தேவைதானா என்கிற கேள்வி எழுகிறதே?

# முஸ்லிம் மக்களில் சிலர், சிங்கள ஆட்சியாளர்களுடன் இணைந்து தமிழர்கள் மீதான தாக்குதல்களை நடத்தினர் என்பது உண்மையே. தமிழர்களிடையேயும் சிலர் அரச படைகளுடன் சேர்ந்து விடுதலைப் புலிகளைக் காட்டிக்கொடுத்து இருக்கிறார்கள்!

சிலர் செய்த தவறை, ஒட்டுமொத்த சமூகத்தின் மீது சாட்டி அவர்களை மொத்தமாக வெளியேற்றியது ஏற்க இயலாது. இதை ஒப்புக்கொள்வதே மனப்பிளவைப் போக்கும்; மனக்காயங்களுக்கு மருந்தாக அமையும். அதற்காத்தான் அந்த வசனத்தை – காட்சியை வைத்தேன்.

@ இன்னொரு காட்சியில், முன்னாள் போராளி ஒருவர், “போராடாமல் இருந்திருந்தால் உறவினர்கள் பிழைத்திருப்பார்களோ..” என்று பேசுவதாக வரும் வசனமும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது!

‘சிங்கள அரசினால் தமிழர்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டன. தமிழர்கள் மீது வன்முறை ஏவப்பட்டது. அதன் காரணமாகத்தானே ஆயுதப் போராட்டம் துவங்கியது. நீங்கள் சொல்ல வருவது தலைகீழாக உள்ளதே..’ என்ற கருத்து வைக்கப்படுகிறதே!

# தவறாகப் புரிந்துகொண்டார்கள். அந்த முன்னாள் போராளி, மலையகத்தைச் சேர்ந்தவர் என படத்தில் குறிப்பிட்டு இருப்பேன். ஈழத் தமிழரை காதலித்து திருமணம் செய்து கொள்வார். போராட்டத்தில் கணவர் இறந்த பிறகும்கூட, கணவரின் குடும்பத்தினர் அவரை ஏற்கமாட்டார்கள்.

அந்த நிலையில்தான், ‘மலையகத்தைச் சேர்ந்த நான் ஈழப் போராட்டத்தில் ஈடுபடாமல் இருந்திருந்தால் என் உறவினர்கள் கொல்லப்படாமல் இருந்திருப்பார்களோ’ என்று சொல்கிறார்..!

மற்றபடி ஒட்டுமொத்த போராட்டம் குறித்து நான் அப்படிப் படத்தில் வைக்கவில்லை.

@ இந்தப் படத்தில் வேறு ஒரு இயக்கத்தைச் சார்ந்தவர், மக்களுக்காக உழைப்பவர் – நாயகன்! விடுதலைப் புலி இயக்கத்தில் இருந்தவர்கள் செயின் அறுப்பாளர்கள் – வில்லன்கள்! ‘இது புலிகளின் மீதான இயக்குநரின் ஒவ்வாமை’ என்ற கருத்து வைக்கப்படுகிறதே!

# உன்னதமான போராட்டத்தில் ஈடுபட்ட பலருக்கும் இப்போது வேலை இல்லை; அதாவது, யாரும் வேலை தருவது இல்லை. ‘படிப்பும் இல்லாத நாங்கள் சாப்பிட என்ன செய்வது’ என்ற அவர்களின் நியாயமான கேள்வியையும் படத்தில் வைத்துள்ளேன்.

பிரச்சினைகள் என்னென்ன இருக்கின்றன.. அவற்றுக்கு எப்படி தீர்வு காண்பது என்பதே என் நோக்கம். மற்றபடி யார் மீதும் எனக்கு காழ்ப்பு இல்லை.

விமர்சனங்களை மீறி, புலிகள் தங்கள் ஆதிக்கப் பகுதியில் சட்டம் ஒழுங்கை செம்மையாக வைத்திருந்தார்கள். மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்தார்கள். முறையான நீதிமன்றம், காவல்துறை செயல்பட்டன என்பதை ஏற்கவே செய்கிறேன்.

@ மாற்று இயக்கத்தைச் சேர்ந்தவரை, புலி அமைப்பினர் கொடுமைப்படுத்தினர் என்று ஒரு வசனம் வருகிறது. மாற்று அமைப்பான ஈரோஸ் அமைப்பின் முக்கிய பொறுப்பாளராக விளங்கிய பாலகுமாரன், பிறகு புலிகள் இயக்கத்தில் இணைந்து போராடினாரே! 2009 யுத்த முடிவில் அவர் சரணடைந்ததாகக் கூட செய்தி வெளியானதே!

அதே போல, புலிகள் இயக்கத்தின் முக்கிய பொறுப்பாளராக விளங்கிய மாத்தையா, இந்திய உளவுத்துறைக்கு தகவல்கள் சொன்னார் என்ற அடிப்படையில் கைது செய்யப்பட்டு, புலிகளின் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து, மரண தண்டனை விதிக்கப்பட்டதாக செய்தி வெளியானது. அதன் பிறகும் அவரது மனைவியும் மூன்று பிள்ளைகளும் புலிகள் இயக்கத்தில் தொடர்ந்தார்களே…!

இவை குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

# மாற்று இயக்கத்தைச் சேர்ந்தவர்களை புலிகள் தாக்கினர். இதில் பலர் கொல்லப்பட்டனர். எழுத்தாளர் கோவிந்தன், கவிஞர் செல்வி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு காணாமல் போயிருக்கிறார்கள். இதைத்தான் படத்தில் குறிப்பிட்டுள்ளேன்.

மாத்தையா மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட காலத்தில் புலிகள் அங்கே ஒரு நிழல் அரசை நடத்திக்கொண்டு இருந்தார்கள். அவர்கள் ரகசியமான – கட்டுப்பாடான அமைப்பாக செயல்பட்டு வந்தனர்.

ஆகவே மாத்தையா மீதான குற்றச்சாட்டு உண்மையா இல்லையா என்பது அப்போது புலிகள் இயக்கத்தில் இருந்தவர்களுக்குத்தான் தெரியும். நான் உட்பட – வெளியில் எவருக்கும் தெரியாது.

@ புலிகளின் தலைநகராக இருந்த கிளிநொச்சி பகுதிதான், இந்தப் படத்தின் களம். இப்பகுதிகளில் எட்டு தமிழருக்கு ஒரு சிங்கள ராணுவ வீரர், தமிழர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவது, புத்தவிகாரங்கள் அமைக்கப்படுவது, காணாமல் ஆக்கப்பட்டவர் குறித்து இலங்கை அரசின் மவுனம் ஆகிய முக்கிய பிரச்சினை குறித்து உங்கள் படம் பேசவில்லையே…!

# இந்தப் படத்தின் கதைக்காலம் 2012ம் ஆண்டு. அப்போது ஈழப்பகுதி முழுதுமே இராணுவத்தின் முழுக் கட்டுப்பாட்டில் இருந்தது. தனித்து காட்ட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

அதே நேரம், பட நாயகி, புடவை கடைக்கு வேலைக்குச் செல்லும்போது கடைக்காரர்.. ‘பண உதவி வேண்டுமானால் செய்கிறேன்…கடைக்கு வராதே சிஐடி வரும்..’ என்பார்!

நாயகன் கைது செய்யப்பட்ட நிலையில் நாயகியிடம் ‘ஆர்மி நடத்தும் கேண்டினில் வேலை இருக்கு’ என்பார். இந்தக் காட்சிகள் மூலம் ஈழப் பகுதியில் சிங்கள ராணுவ ஆதிக்கத்தை உணர்த்தி இருக்கிறேன்.

@ இதையெல்லாம் வசனமாக – போகிற போக்கில் – காண்பித்துவிட்டீர்கள்! ஆனால், ஈழத்துக்காக போராடியவர்களுக்கு எதிரிகளாக சக தமிழ் மக்களே இருக்கிறார்கள் என்று அழுத்தமாக காட்சிப்படுத்தி இருக்கிறீர்கள் என்று சொல்லலாமா?

# கதைக் களத்தில் தேவைப்பட்டதை காண்பித்தேன்…! இப்போது எங்கள் பிரச்சினை சிங்கள ராணுவம் இல்லை..! எங்களுக்காக போராடிய போராளிகளை நாங்கள் என்ன செய்தோம் – எப்படி நடத்துகிறோம் என்பதுதான்..! இந்தப் படம் எங்கள் மீதான விமர்சனம்தான்…!

@ வயது முதிர்ந்த பெண்மணி ஒருவர், கள் குடிக்கவும், உடல் ஆசையிலும் கள் இறக்கும் நபரை நாடுவதாகவும் ஒரு காட்சி படத்தில் இருக்கிறது. இது படத்துக்குத் தேவைதானா?

# இதுவும் சாதி ரீதியிலான காட்சிதான். ஈழத்தில் பிராமணர்கள், ஆதிக்கவாதிகள் அல்லர்.. வேளாளர்களே ஆதிக்க சாதியினர். அந்தப் பெண்மணி வேளாளர் மரபைச் சேர்ந்தவர். அவர் கீழ்க்குடியாக கருதும் கள் இறக்குபவரிடம், ‘சாயந்திரம் வா’ என்பார். அதற்கு கள் இறக்குபவர், “விடிஞ்சா வேளாளர்” என ஆதங்கத்துடன் சொல்லிச் செல்வார்.

அதாவது, ‘உடல் தேவைக்கு சாதி இல்லையா’ என்கிற கேள்விதான்!

இதில் வேளாளர் என்ற வார்த்தையை இந்திய தணிக்கைத்துறை மியூட் செய்யச் சொல்லிவிட்டது. அதனால் பார்வையாளர்களுக்கு குழப்பம் ஏற்பட்டு உள்ளது என நினைக்கிறேன்!

இது மறைந்த எழுத்தாளர் டேனியல் அவர்களது படைப்பில் இருந்து எடுத்து கையாளப்பட்ட காட்சி அது.

@ புதிய அமைப்பு வேண்டும் என படத்தில் காட்சி வைத்திருக்கிறீர்கள். ஈழத்தில் பல்வேறு அமைப்புகள், சங்கங்கள், பிராதான கட்சிகள் இயங்குகின்றனவே.. அவற்றின் செயல்பாடு சரியில்லை என்கிறீர்களா?

# எந்த ஒரு அமைப்பிலும் நேர்மை உள்ளவரும் இருப்பார்.. இல்லாதவரும் இருப்பார். அமைப்புகளிடையே சரியாக செயல்படுவதில் விகிதாச்சார வித்தியாசங்கள் இருக்கும். நான் அதையெல்லாம் சொல்ல வரவில்லை. மாவோ சொன்னது போல, ஆயிரம் பூக்கள் மலரட்டுமே! புதிதாக ஒரு அமைப்பு வந்தால் என்ன… இதுதான் நான் சொல்ல விரும்பியது!

@ அப்படி புதிய சங்கம் அமைக்க நினைக்கும் ஒருவரை, சக தமிழரே கொல்வதாக காட்சிப் படுத்தி இருக்கிறீர்கள்.. இது பொது விசயங்களுக்காக குரல் கொடுப்பவருக்கு விடும் எச்சரிக்கை மணி போல ஆகிவிடாதா?

இன்னும்…

@இலங்கையுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துகொண்டது, அமைதிப்படை அங்கு சென்றது, அதன் நடவடிக்கைகள், ராஜீவ் கொலை, 2009 யுத்தத்தில் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் பங்கு போன்றவை ஈழ வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை குறித்து படத்தில் இல்லையே…!

@ இந்தப் படத்தில் இந்திய சென்சார் போர்டு தடை செய்த காட்சிகள் – வார்த்தைகள் என்னென்ன..?

@நாம் தமிழர் கட்சி சீமான், ‘ஈழப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் இந்தப் படத்தை தமிழ்நாட்டில் திரையிடக்கூடாது.. அப்படி திரையிட்டால் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்’ என அறிவித்து இருக்கிறாரே!

@ உங்கள் அறிக்கையில் சீமானை, ‘விதானையார் இடையில் எதுக்கு கெம்பிறார்’ என்று குறபிப்பிட்டு இருக்கிறீர்களே. அதற்கு என்ன அர்த்தம்?

– உள்ளிட்ட கேள்விகளுக்கு அடுத்த பகுதியில் பதில் அளிக்கிறார் புதியவன் இராசையா…

பேட்டி: டி.வி.சோமு

You might also like