தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் நேற்று நடைபெற்றது.
பிற்பகல் 3 மணிக்கு மாநாடு தொடங்கியதும், விஜய் திரைப்படங்களில் இடம்பெற்ற அரசியல் பேசும் பாடல்கள் இசைக்கப்பட்டன. பின்னர் தவெக கட்சியின் கொடிப் பாடல் இசைக்கப்பட்டது.
மாநாட்டுப் பந்தலில் இருந்த மேடையில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் சோபனா ஆகியோர் அமர்ந்திருக்க, கலை நிகழ்ச்சிகளுடன் மாநாடு ஆரம்பமானது. 4 மணிக்கு, கட்சித் தலைவர் விஜய், மாநாட்டு மைதானத்துக்கு வந்தார்.
800 மீட்டர் நீளமுள்ள ரேம்பின் வழியே தொண்டர்களைப் பார்த்து கை அசைத்தபடியே விஜய் நடந்து வந்தார். அப்போது தொண்டர் ஒருவர் அவர்மீது வீசிய கட்சித் துண்டை தன் தோளில் அணிந்து கொண்டார்.
இதனை தொடர்ந்து தொண்டர்கள் வீசியத் துண்டுகளை தன் தோளில் அணிந்து கொண்டார்.
மேடைக்கு வந்த விஜய் தன் தோளில் இருந்த கட்சித் துண்டுகளை அங்கிருந்த டீபாயில் வைத்தார். ஒரே ஒரு துண்டை மட்டும் அணிந்து கொண்டார். அவர், கண்கள் கலங்க கூட்டத்தைக் கண்டு கையசைத்தார்.
பின்னர் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் மொழிப்போர் தியாகிகளுக்கு மலர் தூவி மரியாதை செய்தார். மாலை 4.20 மணியளவில் கட்சியின் கொடியை, மேடையில் இருந்தவாறே ‘ரிமோட்‘ பட்டனை அழுத்தி விஜய் ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து தவெக கொடிப் பாடல் இசைக்கப்பட்டது. பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
அதன் பின்னர் உறுதிமொழி வாசிக்கப்பட தவெக தொண்டர்கள் உறுதிமொழியேற்றனர். தொடர்ந்து பொதுச் செயலாளர் ஆனந்த் உரையாற்றினார்.
இதனையடுத்து கட்சியின் கொள்கைப் பாடல் வெளியிடப்பட்டது. இறுதியாக, கொள்கைகளை விளக்கி விஜய் பேசினார்.
அதன் விவரம்:
‘’ஒரு குழந்தை முதன் முதலாக ‘அம்மா‘ என அழைக்கும்போது, அம்மாவுக்கு சிலிர்ப்பு வரும் –பால் மணம் மாறாத அந்த குழந்தைக்கு, அந்த உணர்வு குறித்து சொல்ல தெரியாது – அந்த உணர்வுடன் நான் இங்கு நிற்கிறேன்.
பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள் – ஆனால், குழந்தைக்கு பயம் இருக்காது –பாம்பைக் கையில் பிடித்து விளையாடும் – அந்த பாம்புதான் அரசியல்.
அரசியலுக்கு நான் குழந்தைதான் – பாம்பாக இருந்தாலும் பயமில்லை என்பதே என் நம்பிக்கை – அரசியல் ஒன்றும் சினிமா கிடையாது – கவனமாகவே களமாட வேண்டும்.
நம் கொள்கைகளின் அடையாளமாக மாறியவர் பெரியார். ஆனால், அவர் சொன்ன கடவுள் மறுப்பு கொள்கையை நாங்கள் கையில் எடுக்கப் போவதில்லை.
‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பதே நம் கொள்கை – அடுத்து, நேர்மையான நிர்வாகம் தந்த காமராஜர், அரசியல் சாசனம் உருவாக்கிய அம்பேத்கர், வீரமிக்க பெண்களான வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள். இவர்கள் எல்லாம்தான் நம் கொள்கை தலைவர்கள்
பிரிவினைவாத சித்தாந்தம் மட்டுமின்றி, ஊழல் மலிந்த கலாச்சாரத்தையும் ஒழிக்க வேண்டும் – கருத்தியல் பேசி கொள்கை நாடகம் போடும் கபடதாரிகள்தான் இப்போது ஆண்டு கொண்டு இருக்கிறார்கள்.
ஒரு முடிவோடு வந்திருக்கிறேன் – இனி பின்னோக்கிப் பார்க்க மாட்டேன் – இது நான் மட்டும் எடுத்த முடிவல்ல – தொண்டர்களுடன் சேர்ந்து எடுத்த முடிவு – எதற்கும் தயாராக இருக்கிறோம் – ‘ஏ டீம், பி டீம்’ என்று பிரச்சாரம் செய்து எங்களை வீழ்த்திவிடலாம் என கனவில் கூட நினைத்து பார்க்க வேண்டாம்.
மக்கள் விரோத ஆட்சியை ‘திராவிட மாடல் ஆட்சி’ என்று கூறி ஏமாற்றுகின்றனர் – எங்கள் கட்சி வண்ணம் தவிர வேறு வண்ணத்தை எங்கள் மீது பூச முடியாது.
மதசார்பற்ற சமூக நீதி கொள்கையை முன்னிறுத்தி செயல்பட உள்ளோம் – எங்கள் அரசியல் பயணத்தில் முக்கிய பங்கு வகிக்கப்போவது பெண்கள் – எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பதே என் அரசியல் குறிக்கோள்.
மக்கள் மனதில் வாழும் எம்.ஜி.ஆர்.
இனி என்னை ‘கூத்தாடி கூத்தாடி’ என்று கூப்பாடுப் போடுவார்கள் – எம்ஜிஆர், என்டிஆரை அப்படி கூப்பிட்டவர்கள்தான் அவர்கள் – ஆனால், இன்றைக்கும் அந்த தலைவர்கள் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
சினிமாவின் உச்சத்தை உதறிவிட்டு வந்துள்ளேன் – பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு, கல்வி, மருத்துவம், பாதுகாப்பான குடிநீர் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதுதான் நம் செயல்திட்டங்களில் முக்கியமானது.
சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் – மக்களோடு மக்களாக நாம் களத்தில் இருக்கப் போகிறோம்.
2026 ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் நம்மை தனிப்பெரும்பான்மையோடு மக்கள் வெற்றி பெற வைப்பார்கள்.
மக்கள் ஒற்றை விரலில் அழுத்தும் வாக்குகள் நம் எதிரிகள் மீது ஜனநாயக ரீதியாக அணுகுண்டாக விழும்.
நம்முடன் வர நினைப்பவர்களுடன் இணைந்து பணியாற்றவும் தயார் – நம் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு வருபவர்களுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்களித்து அதிகாரப் பகிர்வு செய்யப்படும். நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம்” என விஜய் உறுதிபடத் தெரிவித்தார்.
தவெக மாநாட்டில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.
– மு.மாடக்கண்ணு