விஜயின் முதல் அரசியல் மாநாடு: தலைவர்கள் கருத்து!

விஜய் அரசியல் கட்சி தொடங்கும் முன்பாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து ஆசி பெற்று சென்றார். அப்போது முதல், விஜயின் செயல்பாடுகளை கவனித்துக் கொண்டிருக்கிறார், ரங்கசாமி.

நேற்று விக்கிரவாண்டியில் நடைபெற்ற தவெக மாநாட்டு நிகழ்ச்சிகளை ரங்கசாமி, தொலைக்காட்சியில் முழுவதுமாக பார்த்துக் கொண்டிருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரங்கசாமி, விஜய் மாநாட்டுக்கு பாராட்டுத் தெரிவித்தார்.

“விஜய்க்கு இளம் வயது – அவர் நினைத்திருந்தால், படங்களில் நடித்து பல கோடிகளை சம்பாதித்து இருக்க முடியும் – ஆனால் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக சினிமாவே வேண்டாம் என அரசியலுக்கு வந்துள்ளார் – இது பாராட்டத்தக்கது.

மாநாட்டுக்கு வந்த அனைவரும் இளைஞர்கள் – மேடையில் இருந்தவர்கள் அனைவரும் இளைஞர்களாக இருந்தார்கள் – மாநாட்டில் இளைஞர்கள் எழுச்சியைப் பார்க்க முடிந்தது” என ரங்கசாமி கூறினார்.

சென்னையில் பேட்டி அளித்த தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி, விஜய்யின் புதிய முயற்சிக்கு வாழ்த்துத் தெரிவித்தார். 

”நடிகர் விஜய் எனக்கு நீண்டநாள் நண்பர் – அவரை எனக்கு சிறுவயதிலிருந்தே தெரியும் – நான் முதன்முதலில் தயாரித்த திரைப்படம் அவருடையது தான்.

எந்தக் கட்சியும் வரக்கூடாது என்று சட்டம் இல்லை, யார் வேண்டுமானாலும் கட்சித் துவங்கலாம், அவர்களுக்கு அதற்கான உரிமை இருக்கிறது” என உதயநிதி தெரிவித்தார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “விஜய்யின் இந்த மாநாடு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று கூறினார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “ஒரு அரசியல் கட்சியைத் துவங்கும்போது அது தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

நாங்கள் எல்லாம் வரும்போது எங்களுக்கு இவ்வளவு ஆதரவு இல்லை – எளிய பிள்ளைகள், திரைப் புகழ் இருக்கும்போது நல்ல வீச்சும் ரீச்சும் கிடைக்கும்

“கட்-அவுட்களில் அரசியல் இல்லை – கருத்தியல் தான் அரசியல் – வேலு நாச்சியார், அம்பேத்கர் கட்-அவுட்களை வைப்பது விஷயமில்லை. அவர்களின் பங்களிப்பை எடுத்துச் செல்ல வேண்டும்” என மேலும் கூறினார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன், ‘’தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார்” எனக் குறிப்பிட்டார்.

“அவரது வருகை திமுகவுக்கு பெரும் அதிர்வை ஏற்படுத்தும் – பாஜகவுக்கு பின்னடைவை உண்டாக்கும் – சீமான் ஓட்டுகள் சிதறும்.

தற்போதே திமுக கூட்டணியில் உள்ள பல கட்சிகள், விஜய் கட்சிக்கு தாவ தயாராக உள்ளனர் – விஜயால் அதிமுகவுக்கு பாதிப்பு இல்லை” என வைகைசெல்வன் கூறினார்.

“முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ள விஜய்க்கு பாராட்டுகள்” என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

“தமிழக அரசியல் வரலாற்றில் முதன் முறையாக கூட்டணி ஆட்சி எனும் முழக்கத்தை விஜய் முன் வைத்துள்ளார் – கூட்டணி ஆட்சியே தமிழக மக்களுக்கு புதிய விடியலை உருவாக்கும்” என கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

“அதிகாரத்தில் அனைவருக்கும் பங்கு எனச் சொல்லி இருக்கும் விஜய்க்கு வாழ்த்துகள்” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பாராட்டு தெரிவித்துள்ளார்.

– மு.மாடக்கண்ணு

You might also like