சிவகுமார் நல்ல மனிதர் என்று ஏன் சொல்கிறேன்?

எம்.ஜி.ஆர் சொன்ன விளக்கம்

“ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் என்று சொல்வார்கள். தாய் பக்கத்தில் இருக்கும்போது, மகன் இந்தப் பேறு பெறுவது மிகமிக அரிது. அந்தப் புண்ணியத்தைச் செய்திருக்கிற சிவகுமார் பாராட்டுக்குரியவர்”

– நடிகர் சிவகுமார் நடித்த ‘ரோஜாப் பூ ரவிக்கைக்காரி’ பட வெளியீட்டு விழாவில் பேசியபோது, இப்படிச் சொன்னவர் தமிழக முதல்வரான ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆர்.

அதே விழாவில் இன்னொன்றையும் சொன்னார் எம்.ஜி.ஆர்.

“சிவகுமாரை நல்ல மனிதர் என்று சொல்வதற்குக் காரணம் உண்டு. எல்லோரும் மனிதர்கள் தான். ஆனால் நல்லதைச் செய்து, மக்கள் அதைப் புரிந்து கொள்ளுமாறு, அது தெளிவாக விளக்கப்படும்போது தான் அந்த மனிதரை ‘நல்ல மனிதர்’ என்று நாம் குறிப்பிடுகின்றோம்.

தான் சம்பாதித்த பொருளை, வேண்டாத விஷயத்துக்குச் செலவழித்து விரயமாக்காமல், அதைச் சேர்த்து வைப்பதில் ஓரளவுக்கு அக்கறை காட்டி, உதவி செய்வதிலும் நல்ல தன்மையைக் காட்டி இங்கே 25,000 ரூபாயைப் படிக்கின்ற குழந்தைகளுக்கு அதன் வட்டியிலிருந்து உதவி செய்ய, உருவாக்கித் தந்திருக்கின்ற அந்த நல்ல உள்ளத்தை அவர் பெற்றிருக்கும்போது, நல்ல மனிதர் என்று சொல்லாமலே அந்த அடைமொழி அவருக்குச் சொந்தமாகி விடுகிறது.”

எம்.ஜி.ஆரிடம் மனம் திறந்த பாராட்டைப் பெற்ற நடிகர் சிவகுமார் விழா நடந்த (1979 மே 26 ஆம் தேதி) அன்று – வழக்கமாக எழுதும் டைரிக் குறிப்பில் எழுதியிருக்கிறார்.

“25,000 ரூபாயில் ஒரு டிரஸ்ட் அமைத்து பட்டப் படிப்புக்குச் செல்லும் மாணவர்களில் முதல் மூன்று இடங்களைப் பிடிப்பவர்களுக்கு உபகாரச் சம்பளம் கொடுக்கும் திட்டத்தை எனது தாயார் முன்னிலையில் திரு. எம்.ஜி.ஆர் துவக்கி வைத்தார்.

சிறுவயதில் திரைப்படங்களும், நாடகமும் பார்க்க வாய்ப்பின்றி வளர்ந்த நான், 14 வருடங்களில் 100 படங்களில் நடித்துள்ளேன்.

பள்ளிக்கூட வசதி, குடி தண்ணீர் வசதி எதுவுமே இல்லாத சிறு கிராமத்தில் பிறந்து எஸ்.எஸ்.எல்.சி படித்துத் தேறிய முதல் மாணவன் நான். ஏதோ ஒரு வெறியில் சென்னைக்கு வந்து ஆறு ஆண்டுகள் ஓவியக்கலை பயின்று முதல் மாணவனாகத் தேறினேன்.

கத்துக்குட்டியாக நடிப்புலகில் நுழைந்த எனக்கு ஆசானாகவும், வழிகாட்டியாகவும் விளங்கியவர்கள் திரு.எம்.ஜி.ஆரும், திரு.சிவாஜியும்.

அவர்களின் வாழ்க்கைப் பாதையும், கலையுலகச் சாதனைகளுமே எனக்குப் பாடப் புத்தகங்கள்” என்று விழாவில் நன்றி தெரிவித்துப் பேசினேன்.”

கிட்டத்தட்ட 190-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்திருக்கிற நடிகர் சிவகுமார் தன்னுடைய பெயரில் அறக்கட்டளையைத் துவக்கியது 1979 ஆம் ஆண்டில்.

அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் இதுவரை அந்த அறக்கட்டளையால் நிதியுதவி கிடைக்கப் பெற்றவர்களில் பலர் கிராமப்புறம் சார்ந்தவர்கள்.

ஏழ்மை நிலையில் இருப்பவர்கள். ஆரம்பத்தில் கொடுத்த தொகையைத் தற்போது விரிவுபடுத்தியிருக்கிறார் சிவகுமார்.

முதலில் +2 தேர்வில் முதல், இரண்டாவது, மூன்றாவது இடம் வந்தவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வரை கொடுத்தவர், தற்போது ஐயாயிரம் ருபாய் வரை முதலில் வந்து பத்து மாணவ, மாணவியிருக்குப் பகிர்ந்து அளிக்கிறார்.

அவருடைய வழியில் மகன் சூர்யா “அகரம் ஃபவுண்டேஷன்” தொண்டு நிறுவனத்தைத் துவக்கியவர், தான் சம்பாதிப்பதில் கணிசமான தொகையை திறமையும், கல்வி கற்கும் வேட்கையும் இருந்தும், ஏழ்மையினால் தவிக்கும் மாணவ, மாணவியரைக் கண்டறிந்து உதவி வருகிறார்.

இதுவரை பல்லாயிரக்கணக்கானவர்கள் உயர்கல்வியும், தொழில்நுட்பக் கல்வியும் கற்க வழிகாட்டி வருகிறார்.

அவருடன் தன்னார்வலர்களைக் கொண்ட குழுவும் சேவையுள்ளத்துடன் உதவி வருகிறது.

அகரம் துவக்கப்பட்ட பதினாறு ஆண்டுகளுக்கும் மேலாகி உள்ளது. அந்த அமைப்பினால் பலன் அடைந்தவர்களின் எண்ணிக்கை பல ஆயிரம்.

இலங்கை அகதிகள் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கும் கல்வி உதவி செய்கிறார்கள்.

‘நமது பள்ளி’ சிறப்புத் திட்டம் மூலம் தமிழகம் முழுக்க இருக்கும் சுமார் நானூறு அரசுப் பள்ளிகளைச் சீரமைத்து, கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளையும் செய்து கொண்டிருக்கிறது அகரம் அமைப்பு.

இன்னொரு மகனான கார்த்தி ‘விதை’, ‘வழிகாட்டிகள்’ என்ற அமைப்புகளை உருவாக்கி விவசாயிகளுக்கும், மாணவர்களுக்கும் உதவுகிறார்.

தமிழ் வழியில் படித்த மூவாயிரம் மாணவர்கள் கல்லூரிகளில் படிக்க இவர்கள் உதவுகிறார்கள். கல்வியை முடித்து அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவும் வழி செய்கிறார்கள்.

இப்படி ஆயிரக்கணக்கான மாணவர்கள் வேலை வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள். ‘சிகரம்’ என்ற திட்டத்தின் கீழ் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கான பயிற்சியையும் அளித்து மாணவர்களை எந்தப் பணிக்கும் ஏற்றவர்களாக உயர்த்தியிருக்கிறார்கள்.

அரசுப் பணித் தேர்வுகளில் வெற்றி பெற்று பலர் அரசுப் பணிகளில் சேர்ந்திருக்கிறார்கள்.

‘இணை’ என்ற திட்டத்தின் மூலம் கல்விக்கான மேம்பாட்டுப் பணிகளைச் செய்கிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மூன்று கிராமங்களில் ‘நமது கிராமம்’ என்ற திட்டத்தைத் துவக்கி வாழ்வியல் மேம்பாட்டுப் பணிகளைச் செய்கிறார்கள்.

அரசின் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் என்று சமூக அக்கறை கொண்டவர்களின் ஒருங்கிணைப்பினால் தான் இந்தத் திட்டங்கள் வளர்ச்சி பெற்றிருக்கின்றன என்றாலும், இதற்கான துவக்க ‘விதை’ நடிகர் சிவகுமாரின் தனிப்பட்ட பண்பும், சமூக அக்கறையும் தான்.

சில ஆண்டுகளுக்கு முன்பு கல்வி தொடர்பான விழாவில் பேசும்போது இப்படிக் குறிப்பிட்டார் சிவகுமார்.

“ஒழுக்கம் மற்றும் கல்வி இரண்டும் இருந்தால், எங்கிருந்தாலும் ஜெயித்து விடலாம்.

தமிழக மக்கள் கடவுள். அந்த மக்களுக்கு நாம் ஏதாவது பண்ணனும் இல்லையா? ஒரு குழந்தையின் கல்விக்கு உதவி செய்யும்போது, அது பலருக்கும் உதவியாக இருக்கும். அதனால் தான் கல்வி அறக்கட்டளையைத் துவக்கினேன்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “என்னைப் போல் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, நன்றாகப் படிக்கிற பிள்ளைகளுக்கு என்னால் முடிந்த உதவியைச் செய்வதில் மிகுந்த மன நிறைவு அடைகிறேன்.”

அவருடைய கனவு மெய்ப்பட்டிருக்கிறது. மேலும் அவருடைய குடும்பத்தினர் மூலம் மேலும் விரிந்து வேர் விட்டுக் கிளை பரப்பியிருக்கிறது. திறமையும், படிக்கும் வேகமுள்ளவர்களுக்குக் கனிகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

“அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” என்று கல்வியை ஏழ்மையானவர்களுக்கு அளிப்பதைப் பற்றிச் சொல்லியிருப்பார் பாரதி.

அந்த மகாகவியின் வரிகளை விட, மூத்த நடிகரும், பேச்சாளருமான சிவகுமாரின் செயல்பாட்டை உணர்ந்து, வேறென்ன மேன்மையான சொல் சொல்லிவிட முடியும்?

“பத்து மாதம் என்னைத் தாங்கிப் பெற்று வளர்த்து ஆளாக்கி வளர்த்த தெய்வம் என்னோடு இருப்பதைத் தவிரப் பெரிது வேறொன்றுமில்லை என்று கருதும் சிவகுமார் என்றுமே மகிழ்வோடு இருப்பார். என்றுமே மன நிறைவோடு வாழ்வார்.

என்றுமே புகழுக்குச் சொந்தக்காரராக இருப்பார்” என்று அன்று சிவகுமாருக்கு முன்னால், மக்கள் திலகம் வாழ்த்தியதை விட, வேறு எந்த விதத்தில் உயர்வாக வாழ்த்திவிட முடியும்?

– வழக்கறிஞர், முனைவர் குமார் ராஜேந்திரன்.

– திரைக்கலைஞர் சிவகுமாரின் பிறந்தநாளையொட்டி மீள்பதிவு

You might also like