அரசியல் களத்தில் பயணிக்க, மெல்ல மெல்ல, ஆனால் உறுதியாக பாதை போட்டு வந்த ‘இளையத் தளபதி’ விஜய், ‘தமிழக வெற்றிக் கழகம்’ எனும் பெயரில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கிய கையோடு அடுத்தடுத்த கட்டங்களுக்கு வேகமாக நகர்ந்தார்.
உறுப்பினர் சேர்க்கை, கட்சிக்குத் தனிக்கொடி, நிர்வாகிகள் நியமனம் என முனைப்புக் காட்டிய விஜய், தனது கட்சியின் முதல் மாநாட்டை அக்டோபர் 27-ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) நடத்த உள்ளார்.
இந்த மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி.சாலைப் பகுதியில் நடைபெற இருக்கிறது.
தலைவர்கள் பேனர்களுடன் விஜய்
மாநாட்டு மைதானத்துக்காக, 150 ஏக்கர் பரப்பளவு நிலம் குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. மாநாட்டுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், மாநாட்டு ஏற்பாடுகளில் கட்சித் தொண்டர்கள் இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர்.
மாநாட்டுக்கு பல்லாயிரக்கணக்கில் தொண்டர்கள், பொதுமக்கள் வருவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கண்காணிக்க தனியார் நிறுவனங்கள் அமர்த்தப்பட்டுள்ளன.
மாநாட்டுத் திடலின் முகப்பிலிருந்து மாநாட்டுத் திடல் வரையிலான வழியின் இருபுறமும் 300-க்கும் மேற்பட்ட கம்பங்களில் தவெக கட்சிக் கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன.
மாநாட்டுக்கு வருபவர்கள் மாநாடு தொடர்பான போட்டோ, வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் உடனுக்குடன் பகிரும் வகையில், இன்டர்நெட் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
மாநாட்டுப் பந்தலில் 60 அடி உயரத்தில் காமராஜர், பெரியார், அம்பேத்கர் ஆகிய தலைவர்களின் பேனர்களுக்கு மத்தியில் விஜயின் உருவம் பொறித்த பேனர் இடம் பெற்றுள்ளது.
‘விஜய் கட்சியால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை’ என சர்வ கட்சிகளும் உரத்துச் சொன்னாலும், அவரால் தங்கள் கட்சியின் ஓட்டு வங்கியில் சேதாரம் ஏற்படும் என்பதை, அந்தக் கட்சிகள் உணர்ந்தே உள்ளன. மாநாட்டு ஏற்பாடுகளை அவர்கள் உற்று நோக்க ஆரம்பித்துள்ளனர்.
தலைவர்கள் வாழ்த்து மழை:
தவெக கட்சிக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், முதல் ஆளாக வாழ்த்துப்பாடிய நிலையில், இப்போது பல்வேறு கட்சி தலைவர்களும், விக்கிரவாண்டி மாநாட்டுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரு நாட்களுக்கு முன்னர் அளித்த பேட்டியில், ‘’விஜய் கட்சிக்கும், அவரது கட்சியின் மாநாட்டுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் எனது வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.
அத்தோடு விடவில்லை. ‘விஜய் மக்களால் நேசிக்கப்படும் நடிகராக இருக்கிறார் – அவர், தமிழகத்தில் நல்ல மாற்றத்தை கொண்டுவரும் நோக்கத்தில் புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார்” என்றும் ஆராதனை செய்துள்ளார்.
திமுக கூட்டணியில் தொடரும் விவகாரத்தில் மதில் மேல் பூனையாக இருக்கும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் முனைவர் தொல்.திருமாவளவனும், விஜய் கட்சி மாநாட்டுக்கு வாழ்த்துக் கூறியுள்ளார்.
”நடிகர் விஜய் கட்சி தொடங்கி, முதல் முயற்சியாக மாநாடு ஒன்றை நடத்த இருக்கிறார் – அந்த மாநாடு வெற்றியடைய மனதார வாழ்த்துகிறேன்” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
‘அழைப்பு வராவிட்டாலும், விஜய் கட்சி மாநாட்டுக்கு செல்வேன்’ என நடிகர் விஷால் பிரகடனம் செய்துள்ள நிலையில், ‘தவெக கட்சியில் அந்தக் கட்சித் தலைவர் சேரப்போகிறார் – இந்த நடிகர் இணையப் போகிறார்’ என சமூக வலைத்தளங்களில் ‘தாறுமாறாக’ செய்திகள் ஓடிக்கொண்டிருக்கின்றன.
மனம் திறக்கும் விஜய்:
இதனிடையே மாநாட்டு நிகழ்வுகள் குறித்து சில தகவல்கள் கிடைத்துள்ளன.
100 அடி உயரமுள்ள கொடிக் கம்பத்தில் விஜய், தனது கட்சிக் கொடியை ஏற்றி வைத்து, மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.
மாலை 4 மணி முதல் நிர்வாகிகள், பேச்சாளர்கள் உரை நிகழ்த்த உள்ளனர்.
6 மணி முதல் 8 மணி வரை சுமார் 2 மணி நேரம் விஜய் பேசுவார் என தெரிகிறது.
தவெக கட்சிக் கொடிக்கான விளக்கத்தை வெளியிடுவதுடன், கட்சியின் கொள்கைகளையும் அவர் அறிவிப்பார் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
2026-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில், தவெக கட்சி யாருடன் கூட்டணி வைக்கும்? என்பதை இளையத் தளபதி கோடிட்டுக் காட்டுவார் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
ஞாயிற்றுக் கிழமை இரவு வரை காத்திருப்போம்.
– பாப்பாங்குளம் பாரதி