35 ஆண்டுகளில் முதன்முறையாக தனக்காகப் பிரச்சாரம் செய்த பிரியங்கா!

கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கேரளாவின் வயநாடு மற்றும் உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டார். இரண்டு தொகுதியிலும் அவர் அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வாகை சூடினார்.

இதனால், ஏதேனும் ஒரு தொகுதியை அவர் கைவிட வேண்டிய சூழல் உருவானது. தனது தாயார் சோனியா காந்தியின் ஆலோசனையின்படி, ராகுல், தங்கள் குடும்பத் தொகுதியான ரேபரேலியை தக்க வைத்துக்கொண்டு, வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.

எனவே, அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. வயநாடு தொகுதிக்கு நவம்பர் 13-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனையடுத்து அனைவரும் எதிர்பார்த்தது போலவே, சோனியாவின் மகள் பிரியங்கா காந்தியை வயநாடு தொகுதியின் வேட்பாளராக காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது.

குடும்பத்தோடு வந்திருந்து மனுத் தாக்கல்

வயநாடு தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் நடந்து வரும் நிலையில் நேற்று (23.10.2024 – புதன்கிழமை) பிரியங்கா வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

அப்போது, தாய் சோனியா, அண்ணன் ராகுல் காந்தி, கணவர் ராபர்ட் வதேரா, அவர்களின் மகன் ரேகன் உடன் இருந்தனர்.

வேட்புமனுவுடன் பிரியங்கா தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், சொத்து விவரங்கள், வழக்குகள் உள்ளிட்ட தகவல்களை அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, பிரியங்காவிடம் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு 12 கோடி ரூபாய்.

அவரது கணவர் ராபர்ட் வதேராவிடம் சுமார் 65 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு முன்பாக, வயநாட்டின் கல்பேட்டா பேருந்து நிலைய பகுதியில் இருந்து, காங்கிரஸ் சார்பில் பிரமாண்ட ஊர்வலம் (ரோடு ஷோ) நடத்தப்பட்டது.

இதில், ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து பொதுக்கூட்டமும் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய பிரியங்கா, “எனக்கு 17 வயது இருக்கும்போது, 1989-ம் ஆண்டு எனது தந்தை ராஜீவ் காந்திக்காக, முதல் முறையாக பிரச்சாரம் செய்தேன் – இப்போது 35 ஆண்டுகளாகி விட்டது.

தொடர்ந்து பல தேர்தல்களில் எனது தாய், சகோதரர் மற்றும் சக காங்கிரஸ்காரர்களுக்காக பிரச்சாரம் செய்திருக்கிறேன். ஆனால், முதல் முறையாக இப்போதுதான் எனக்காக நான் பிரச்சாரம் செய்கிறேன்” எனக் குறிப்பிட்டார்.

வாக்காளர்களைக் கவரும் வகையில் உருக்கமாகவும், உணர்ச்சிப் பூர்வமாகவும் பிரியங்கா, தனது உரையைத் தொடர்ந்தார்.

‘’வயநாட்டில் சில மாதங்களுக்கு முன் நிகழ்ந்த பேரழிவை நான் நேரில் பார்த்தேன்.

தனது குடும்பத்தை இழந்த குழந்தைகளைப் பார்த்தேன் – தனது குழந்தைகளை இழந்த தாய்மார்களைச் சந்தித்தேன்.

ஒட்டுமொத்த வாழ்வையும் இழந்தவர்களையும் சந்தித்தேன் – நான் சந்தித்த ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு உதவிக் கொண்டிருந்தனர் – அவர்கள் துணிச்சலுடன் எதிர்பார்ப்புகளின்றி உளப்பூர்வமாக உதவி செய்தனர்.

உங்களின் பிரதிநிதியாக இருப்பது எனக்கு கவுரவம் – உங்களுக்கு சேவையாற்ற எனக்கு ஒரு வாய்ப்புத் தாருங்கள்” என பிரியங்கா வேண்டுகோள் விடுத்தபோது, கூட்டம் ஆர்ப்பரித்தது.

வயநாடு தொகுதியில் பாஜக சார்பில் நவ்யா ஹாரிதாஸ், இடதுசாரி ஜனநாயக முன்னணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சத்யன் மொக்கேரி ஆகியோர் களம் காண்கின்றனர். இது தவிர சில உதிரிக் கட்சிகளும் களத்தில் குதித்துள்ளன.

– மு.மாடக்கண்ணு.

You might also like