வைதேகி காத்திருந்தாள் – தாய்க்குலம் தந்த வரவேற்பு!

ஒரு நாயக நடிகர் நட்சத்திரமாக மாற, அவரது படங்கள் வெளியாகும் தியேட்டர்கள் திருவிழாக் கோலம் காண, பல வாரங்கள் தொடர்ந்து அப்படம் திரையில் ஓட, மிகச்சில அம்சங்கள் திரைப்பட உள்ளடக்கத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்வது அவசியம்.

இனிமையான பாடல்கள், மிரட்டும் சண்டைக்காட்சிகள், வாய் விட்டு சிரிக்க வைக்கும் நகைச்சுவை, அனைத்துக்கும் மேலே காண்போரை அழ வைக்கும் செண்டிமெண்ட் என்பதாக அந்தப் பட்டியல் நீளும். அதனைத் தன் படங்களில் இடம்பெறச் செய்யக் கடுமையாகப் போராடியவர் நடிகர் விஜயகாந்த்.

திரையில் அறிமுகமாகும் நாயக நடிகர்கள், ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டி வெற்றி பெறச் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சிலருக்கு நகைச்சுவை காட்சிகள் வராது. சிலருக்கு நடனம் வரவே வராது. சிலருக்கு ஆக்‌ஷன் காட்சிகள் பொருத்தமாக இருக்காது. அந்த வரிசையில், ஆரம்ப காலத்திலேயே ஆக்‌ஷன் நாயகனாக வெற்றி பெற்ற விஜயகாந்துக்குக் குடும்பங்கள் கொண்டாடுகிற வெற்றிகள் மட்டும் எட்டாக்கனியாக இருந்தது.

’விஜயகாந்த் படம்னாலே ஒரே சண்டைதாம்பா’ என்கிற எண்ணத்தை வலுப்படுத்துகிற வகையிலேயே அவரது படங்கள் இருந்தன. ‘பழிக்குப் பழி’ கருத்தைப் பிரதிபலித்த கதைகளே அதிகம் என்பதால், அதில் வன்முறையும் கோரமும் கொஞ்சம் அதிகமாவே இடம்பெற்றன. அதனால், பெண் பார்வையாளர்கள் அவரது படத்திற்கு வரத் தயங்கினார்கள்.

திரையரங்குகளில் காலைக்காட்சியும் பகல் காட்சியும் பெண்களின் கூட்டத்தை நம்பியே அரங்கேற்றப்பட்ட காலம் அது. சாதி, மத, பொருளாதார வேறுபாடுகளைத் தாண்டி பெண்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்க வாசலில் திரண்ட காலம் அது. ஆதலால், அவர்களைக் கவரும்விதமாகப் படங்களில் நடிக்க வேண்டும் என்பது விஜயகாந்தின் ஆசையாக இருந்தது.

அவரது திரை வாழ்வு ஏறுமுகத்தில் இருந்த காலத்தில், அப்படியொரு தொடக்கத்தைத் தந்தது ‘வைதேகி காத்திருந்தாள்’. இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய இப்படம், விஜயகாந்தின் கதைத் தேர்வினைக் கேள்விகுள்ளாக்கியது. பலவிதமான கதைகளில், கதாபாத்திரங்களில் அவரைப் பொருத்திப் பார்க்கச் செய்தது.

இரு வேறு துயரங்கள்!

ஒரு ஊர். அங்குள்ள ஒரு கோயில், அங்கு தினமும் ஒரு கைம்பெண் வருகிறார். திருமணமான அன்றே தனது கணவரை இழந்தவர் அப்பெண். அதனால், ஊரார் அவரை பரிதாபமாக நோக்குகின்றனர். ஆனாலும், தன் வயதுக்கே உரிய வாழ்க்கை ஆசைகளை அடக்க முடியாமல் தவிக்கிறார் அப்பெண்.

அதே காலகட்டத்தில் ஒரு பிச்சைக்காரர் போல அந்தக் கோயிலைச் சுற்றி வருகிறார் ஒரு மனிதர். அவர் யாருடனும் பேசுவதில்லை. இரவு நேரமானால் பாடுவதற்காக மட்டுமே வாய் திறக்கும் இயல்பு கொண்டவர்.

ஒருநாள் அந்த நபர் அப்பெண்ணின் பெயரைக் கோயில் சுவற்றில் எழுதுகிறார். அந்த நபரின் பெயர் வெள்ளைச்சாமி. அப்பெண்ணின் பெயர் வைதேகி.

தான் காதலித்த உறவுக்காரப் பெண்ணை இழந்த துக்கம் தாங்காமல் சொத்துகளைத் துறந்து பிச்சைக்காரர் போல வாழ்பவர் வெள்ளைச்சாமி.

ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருந்தாலும், இவர்களது வாழ்க்கை துயரங்கள் நிறைந்தது. இவர்கள் இருவரும் இணைந்து, அந்த ஊர்க்காரர்கள் எதிர்க்கிற ஒரு காதல் ஜோடி வாழ்வில் இணைய உதவுவதாகச் சொன்னது இப்படத்தின் கிளைமேக்ஸ்.

உண்மையைச் சொன்னால், இது ஒரு கமர்ஷியல் படத்திற்கான கதை அல்ல. ஆனால், அதையும் மீறிக் கதை சொல்லலில் இருந்த சுவாரஸ்யமான அம்சங்கள் இப்படத்தைப் பெருவெற்றி பெறச் செய்தன.

ஒளிப்பதிவாளர் ராஜராஜனின் அழகுணர்ச்சிமிக்க காட்சியாக்கமும், படத்தொகுப்பாளர்கள் எம்.சீனிவாசன் மற்றும் பி.கிருஷ்ணகுமாரின் செறிவான தொகுப்பும் ரசிகர்கள் திரையோடு ஒன்றச் செய்தன.

இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் சொன்ன கதையில் துயரங்கள் நிறைந்திருந்தாலும், ‘அதுவும் வாழ்வின் ஒரு அங்கம்தானே’ என்று ஏற்றுக்கொண்டனர் அக்கால சினிமா ரசிகர்கள். அதனால், இப்படம் தெலுங்கில் ‘மஞ்சி மனசுலு’ என்ற பெயரிலும், கன்னடத்தில் ‘ப்ரீத்தி நீ இல்லாதே நா ஹெகிரலி’ என்ற பெயரிலும் ‘ரீமேக்’ செய்யப்பட்டது.

மயக்கும் இசை!

இளையராஜா இசை என்ற வார்த்தைகள் சுவரொட்டியில் இடம்பெற்றால் போதும்’ என்று விநியோகஸ்தர்களும் திரையரங்க உரிமையாளர்களும் போட்டி போட்டு ஒரு திரைப்பட உரிமையைக் கைப்பற்றிய காலம் அது. அவரது தேதிகளைப் பெற்று இசை அமைக்கப் பெற்று, ஒரு படத்தைப் படம்பிடிப்பது பெரிய சவால்.

அந்தச் சூழலில், ’அவர் இசையமைத்த ஆறு பாடல்களுக்கேற்ப கதை வைத்திருப்பவர்கள் அணுகலாம்’ என்கிற தகவல் திரையுலகில் உலா வந்தது. ‘காக்கிசட்டை’ படத்திற்கான பாடல்களை உருவாக்கிவிட்டு, அதற்காக ஒதுக்கப்பட்ட நாட்களில் ‘எக்ஸ்ட்ரா’வாக அவர் போட்ட ட்யூன்கள் அது. ஒரே ஒரு திரைப்படத்தில் அந்த ஆறு பாடல்களையும் பயன்படுத்தத் தயாராக இருப்பவர்களுக்கே அதனைக் கொடுப்பது என்றிருந்திருக்கிறார் இளையராஜா.

பல இயக்குனர்கள் அந்த முயற்சியில் இறங்கிப் பின்னர் பின்வாங்க, அந்த போட்டியில் ‘வைதேகி காத்திருந்தாள்’ கதையைச் சொல்லி இளையராஜாவின் ஒப்புதலைப் பெற்றிருக்கிறார் ஆர்.சுந்தர்ராஜன். அப்படித்தான் ‘ராசாத்தி உன்னை’, ‘காத்திருந்து காத்திருந்து’, ‘இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே’, ’அழகு மலராட’, ‘மேகம் கருக்கையிலே’ பாடல்கள் ரசிகர்களான நமக்குக் கிடைத்தன. காலமெல்லாம் நெஞ்சில் வைத்து போற்றத்தக்க வகையிலான திரையிசையாக அவை அமைந்தன.

இப்படமான விஜயகாந்துக்கு மட்டுமல்லாமல் நடிகை ரேவதிக்கும் திருப்புமுனையாக அமைந்தது. இதன் தொடர்ச்சியாக, பல வெற்றிப் படங்களில் அவர் இடம்பிடித்தார்.

அதேநேரத்தில், இதில் விஜயகாந்தின் ஜோடியாக நடித்த பிரமிளாவுக்குப் பெரிதாக வாய்ப்பு அமையவில்லை.

ரேவதியின் தந்தையாக நடித்த டி.எஸ்.ராகவேந்தர் அப்போது வெளியான பல படங்களில் சிறு பாத்திரங்களில் நடித்தார். சிந்து பைரவி அதில் ஒரு படமாக அமைந்தது. அவர் ஒரு இசையமைப்பாளரும் கூட.

இளையராஜாவின் இசையைப் போலவே, இந்த படத்தின் இன்னொரு அடையாளமாக அமைந்தது ‘கவுண்டமணி – செந்தில்’ நகைச்சுவை. ஆல் இன் ஆல் அழகுராஜாவாகவும், கோமுட்டி தலையனாகவும் தோன்றி இருவரும் திரையில் அதகளம் செய்திருப்பார்கள். அதிலும் ‘இந்த பெட்ரோமேக்ஸ் எப்படிண்ணே எரியுது’ எனும் நகைச்சுவை காட்சி இன்றும் பிரபலம்.

இவை தவிர்த்து ராதாரவி நடித்த வெள்ளிக்கிழமை ராமசாமி பாத்திரம் உட்பட, இப்படத்தைப் பிற்காலத்தில் கிண்டலடித்து தள்ளும் அளவுக்கு பல ‘கிளிஷே’க்களின் பிறப்பிடமாகவும் இப்படம் அமைந்தது. அது போன்ற உள்ளடக்கத்தைக் கிண்டலடிக்க வேண்டுமானால், மிகச்சிறப்பான வரவேற்பை வெளியீட்டின்போது அப்படம் பெற்றிருக்க வேண்டும். அத்தகுதியைச் சிறப்பாகக் கொண்டிருந்தது ‘வைதேகி காத்திருந்தாள்’.

விஜயகாந்தின் படங்களைப் பிற்காலத்தில் பெண்கள் அணியாகத் திரண்டு பார்த்ததற்கு விதையாக அமைந்தது இப்படமே. அந்த மாற்றம் மிகச்சுலபத்தில் நிகழ்த்திவிட முடியாதது. திரையுலக ஜாம்பவான்கள் அதனால்தான் இப்படத்தைப் புகழ்ந்து தள்ளுகின்றனர்.

அந்த காரணத்தாலோ என்னவோ, ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த பல படங்கள் இதே பார்முலாவில் அமைந்தன. அம்மன் கோயில் கிழக்காலே, என் ஆசை மச்சான் போன்றவை அதற்கான உதாரணங்கள்.

இந்த வெற்றிகளின் பின்னணியில் இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜனின் பட ஆக்கத் திறமை, அவரோடு பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களின் அர்ப்பணிப்புமிக்க உழைப்பு, விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் அவர்களுக்கு அளித்த பெரும் மரியாதை என்று பல விஷயங்கள் இருக்கின்றன.

விஜயகாந்தின் தொடக்க காலம் முதலே ரசித்தவர்களுக்கு மட்டுமே இத்தகவல்கள் ‘பழையதாக’த் தெரியும். மற்றவர்களுக்கு இதெல்லாம் வினோதமான விஷயங்கள்.

தோண்டத் தோண்ட மண்ணில் ஊறும் நீர் போன்று, ‘வைதேகி காத்திருந்தாள்’ பற்றிப் பகிர அப்படக்குழுவினர் மனங்களில் பல்லாயிரம் தகவல்கள் இருக்கும். அவற்றின் ’ஒரு சோறு பதமாக’த்தான் அப்படத்தை நாம் கண்டு வருகிறோம். இன்றோடு அப்படம் வெளியாகி 40 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இப்படத்தின் தீவிர ரசிகர்களுக்கு இதனை நம்பக் கடினமாகத்தான் இருக்கும்..!

– மாபா

You might also like